ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி நேற்று. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் தாயாரும் நம்பெருமாளும் சேர்ந்து தாயார் சன்னதி சரணாகதி மண்டபத்தில் சேர்ந்து சேவை சாதிப்பதற்கு சேர்த்தி என்று பெயர்.ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதித்த நிகழ்ச்சி 16ம் தேதி நடந்தது.உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து இருந்த திருக்கோலத்தை 16.4.2014 அன்று இரவு உறையூரில் கண்டு ஆனந்தித்தோம்.அன்றைய தினம் கோவில் வெளிபிரகார மண்டபத்தில் நடைபெறும் மேளக்கச்சேரி அதிஅற்புதமாக இருக்கும்.(ஸ்பீக்கரை கொஞ்சம் குறைக்க வேண்டும்).பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேர்த்தி சேவை நேற்று நடந்தது. அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து ஸ்ரீரெங்கநாதர் தங்க பல்லக்கத்தில் இருந்து புறப்படுவார். சித்திரை வீதிகள், உத்திர வீதிகளில் வலம் வந்து திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு ஸ்ரீ தாயார் சன்னதியை அடைவார்.இதன் பிறகு பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் தான் அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர் நாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சி நடித்து காட்டப்படும். தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள் அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே நம்பெருமாள் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள். சமாதானமடைந்த ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதரை மண்டபத்தில் அனுமதிப்பார் . அதன் பிறகு ஏகாந்தம்.பகல் இரண்டு மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை அடைவார். இரவு 10.30 மணி வரை ஸ்ரீதாயாருடன் சேர்த்தி சேவை சாதிக்கிறார்.வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வேண்டுவன கிடைக்கும். திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக இந்த சேர்த்தி வைபவத்தை காணும் பாக்கியம் பெருமாள் அருளால் கிடைத்து வருகிறது.இலவச சேவை, 50.00 ரூ சேவை மற்றும் ரூ.250 கியூ.மாலை 4.00 மணிக்கு நானும் ஜயந்தியும் கியூவில் நின்றோம் ஒருமணிநேரத்தில் சேவையாயிற்று.தாயார் எப்போதும் நம்பெருமாளுடன் சேர்ந்து இருக்கும் நாளில் மிகுந்த பூரிப்புடன் இருப்பார்.வாராவாரம் சனிக்கிழமை சேவிக்கும் தாயாருக்கும் இன்றைய தாயாருக்கும் இருக்கும் வித்தியாசம் உணரமட்டுமே முடியும்.இந்த முறை நெருக்கடி இல்லை.பிடித்துத் தள்ளுவது இல்லை. சேவை முடித்து வசந்த மண்டபம் வழியாக நந்தவனம்...சக்கரத்தாழ்வார் சன்னதி...வழியாக வெளியேறினோம்.நந்த வனப்பகுதியில் சுடச் சுட பானையில் அக்கார அடிசில்....விறகடுப்பு வாசனையுடன் ...ஆளுக்கு ஒரு கப் சாப்பிட்டோம்..
அக்கார அடிசில் (அக்காரவடிசில்) விற்பனை பானையிலிருந்து
நந்தவனப் பகுதியில் பிரசாதத்தை பகிர்ந்து கொள்ளும் குடும்பம்.
அகத்திலிருந்து பறித்துச் சென்ற மனோரஞ்சிதப் பூக்களை நம்பெருமாள் பாதத்தில் பட்டர் சேர்த்தார்.மனமும் கண்களும் நிறைந்தது.உடலில் இளமை யும் தெம்பும் இருக்கும் போதே இவைகளைக் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.
” கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விளராகில் சார்வது சதிரே. ” ((திருவாய்மொழி – 2.10.1) )
ஆனால் முதியவர்கள் எத்தனையோபேர் இந்த வைபவத்தை காண தள்ளாத வயதிலும் வருகிறார்கள் என்பதை காண முடிகிறது.அவரகளை உடன் இருந்து பொறுமையாக அழைத்துச் செல்லும் இளயவர்களை காணும்போது வாயாரவாழ்த்தத் தோன்றுகிறது.நான் பார்த்த ஒரு முதிய தள்ளாத, ஊன்றுகோல் துணையின்றி நடக்க இயலாத ஒரு பாட்டியை 22 வயது மதிக்கத் தக்க பேரன் உடனிருந்து பொறுமையாக அழைத்துச் சென்ற காட்சியை காண முடிந்தது.
தள்ளாத வயதிலும் சேர்த்தி காண வந்த பாட்டி
உடனிருந்து பொருமையாக அழைத்துச் செல்லும் பேரன்
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே