Showing posts with label சேர்த்தி. Show all posts
Showing posts with label சேர்த்தி. Show all posts

Monday, 14 April 2014

ஸ்ரீரங்கம் சேர்த்தி 2014




ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி நேற்று. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் தாயாரும் நம்பெருமாளும் சேர்ந்து தாயார் சன்னதி சரணாகதி மண்டபத்தில் சேர்ந்து சேவை சாதிப்பதற்கு சேர்த்தி என்று பெயர்.ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதித்த நிகழ்ச்சி 16ம் தேதி நடந்தது.உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து இருந்த திருக்கோலத்தை 16.4.2014 அன்று இரவு உறையூரில் கண்டு ஆனந்தித்தோம்.அன்றைய தினம் கோவில் வெளிபிரகார மண்டபத்தில் நடைபெறும் மேளக்கச்சேரி அதிஅற்புதமாக இருக்கும்.(ஸ்பீக்கரை கொஞ்சம் குறைக்க வேண்டும்).பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேர்த்தி சேவை நேற்று நடந்தது. அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து ஸ்ரீரெங்கநாதர் தங்க பல்லக்கத்தில் இருந்து புறப்படுவார். சித்திரை வீதிகள், உத்திர வீதிகளில் வலம் வந்து திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு ஸ்ரீ தாயார் சன்னதியை அடைவார்.இதன் பிறகு பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் தான் அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர் நாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சி நடித்து காட்டப்படும். தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே நம்பெருமாள் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள். சமாதானமடைந்த ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதரை மண்டபத்தில் அனுமதிப்பார் . அதன் பிறகு ஏகாந்தம்.பகல் இரண்டு மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை அடைவார். இரவு 10.30 மணி வரை ஸ்ரீதாயாருடன் சேர்த்தி சேவை சாதிக்கிறார்.வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வேண்டுவன கிடைக்கும். திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக இந்த சேர்த்தி வைபவத்தை காணும் பாக்கியம் பெருமாள் அருளால் கிடைத்து வருகிறது.இலவச சேவை, 50.00 ரூ சேவை மற்றும் ரூ.250 கியூ.மாலை 4.00 மணிக்கு நானும் ஜயந்தியும் கியூவில் நின்றோம் ஒருமணிநேரத்தில் சேவையாயிற்று.தாயார் எப்போதும் நம்பெருமாளுடன் சேர்ந்து இருக்கும் நாளில் மிகுந்த பூரிப்புடன் இருப்பார்.வாராவாரம் சனிக்கிழமை சேவிக்கும் தாயாருக்கும் இன்றைய தாயாருக்கும் இருக்கும் வித்தியாசம் உணரமட்டுமே முடியும்.இந்த முறை நெருக்கடி இல்லை.பிடித்துத் தள்ளுவது இல்லை. சேவை முடித்து வசந்த மண்டபம் வழியாக நந்தவனம்...சக்கரத்தாழ்வார் சன்னதி...வழியாக வெளியேறினோம்.நந்த வனப்பகுதியில் சுடச் சுட பானையில் அக்கார அடிசில்....விறகடுப்பு வாசனையுடன் ...ஆளுக்கு ஒரு கப் சாப்பிட்டோம்..

             அக்கார அடிசில் (அக்காரவடிசில்) விற்பனை பானையிலிருந்து


                   நந்தவனப் பகுதியில் பிரசாதத்தை பகிர்ந்து கொள்ளும் குடும்பம்.



அகத்திலிருந்து பறித்துச் சென்ற மனோரஞ்சிதப் பூக்களை நம்பெருமாள் பாதத்தில் பட்டர் சேர்த்தார்.மனமும் கண்களும் நிறைந்தது.உடலில் இளமை யும் தெம்பும் இருக்கும் போதே இவைகளைக் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.

” கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விளராகில் சார்வது சதிரே. ” ((திருவாய்மொழி – 2.10.1) )

ஆனால் முதியவர்கள் எத்தனையோபேர் இந்த வைபவத்தை காண தள்ளாத வயதிலும் வருகிறார்கள் என்பதை காண முடிகிறது.அவரகளை உடன் இருந்து பொறுமையாக அழைத்துச் செல்லும் இளயவர்களை காணும்போது வாயாரவாழ்த்தத் தோன்றுகிறது.நான் பார்த்த ஒரு முதிய தள்ளாத, ஊன்றுகோல் துணையின்றி நடக்க இயலாத ஒரு பாட்டியை 22 வயது மதிக்கத் தக்க பேரன் உடனிருந்து பொறுமையாக அழைத்துச் சென்ற காட்சியை காண முடிந்தது.

                                   தள்ளாத வயதிலும் சேர்த்தி காண வந்த பாட்டி



                        உடனிருந்து பொருமையாக அழைத்துச் செல்லும் பேரன்





Tuesday, 22 March 2011

சேர்த்தி



19.03.2011 சனிக்கிழமைஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை ந்ம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி அடந்த நாள். இன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

புகைப்படம் சேர்த்தி மண்டபத்தில் கூட்டத்திற்கு இடையில் நான் எடுத்தது.


Sunday, 12 April 2009

ஸ்ரீர‌ங்க‌ம் சேர்த்தி 2



http://srirangapankajam.com/
2009 ம் வ‌ருஷ‌ ஸ்ரீர‌ங்க‌ம் சேர்த்தி ப‌ட‌ம் இங்கே.மேலே க‌ண்ட‌ லிங்க் லிருந்து( ஸ்ரீரங்கபங்கஜம்) எடுத்த‌து

Friday, 10 April 2009

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி



08.04.2009 இன்று பங்குனி உத்தரம்.ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி.மாலை 3.00 மணிக்கே கியூ வில் நின்று விட்டோம்.3.30 க்கு ரூ.150/ க்கான கியூ வை திறந்து விட்டார்கள்.ஒரே தள்ளு முள்ளு தான்.தாயாரையும் பெருமாளையும் ஒரு சேர பார்க்கும் போது ஆஹா...என்ன ஒரு பாக்கியம்.தாயார் சன்னதியில் நுழைந்து வில்வமரம் வழியாக சேர்த்தி மண்டபம் ஏறி சேவித்து விட்டு கீழிரங்கி வசந்த மண்டபத்துள் நுழைந்து பக்கவாட்டு கதவு வழியாக நந்தவனம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதி அடைகிறது கியூ.சக்கரத்தாழ்வார் சன்னதியில் மைசூர்பா,ஜாங்கிரி என ஒரே ஸ்வீட் கூடைகள்.வயதான மாமிகள் பாவம் ரொம்ப சிரமம்.150 ரூ கியூ வில் ஒரு பாட்டி இன்னொரு பாட்டியிடம் சொன்னது" போன வருஷம் 50 ரூ இந்த வருஷம் 150 ரூ இன்னியிலேந்து ஒரு நாளுக்கு ஒரு ரூபா போட்டுண்டு வந்தா கூட அடுத்த வருஷத்துக்கு சேர்த்தி சேவைக்கு ஆகிவிடும்" என்ன ஒரு கணக்கு? கோயிலொழுகு 5 ம் பாக‌ம் இன்று ஸ்ரீரங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.500 ரூ.இந்த இரண்டு நாட்களில் மட்டும் வாங்குபவர்களுக்கு 400 ரூ.இதைப்பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

இன்றய பிரசாதம்: புளியோதரை வடை

தகவல்: தாயார் முகத்தில் என்றைக்கும் விட இன்று ஒரு பூரிப்பு என்னால் உணர முடிந்தது.பிரமையோ என்று தோன்றியது. ஜயந்தியும் அதையே சொன்னாள்.

எச்சரிக்கை: பெருமாள் அருகில் சேவிக்கும் போது பூணல் போட்ட தடிமனான கருப்பு அய்யங்காரை சேவார்த்திகளை பிடித்து தள்ளுவதற்காகவே நிறுத்தியிருக்கிறார்கள்.ஆண் பெண் சிறியவர் பெரியவர் வித்தியாசமில்லாமல் மனுஷன் பிடித்து தள்ளுகிறார் .
படம் இன்று எடுக்கப்பட்டதல்ல.