Showing posts with label சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில். Show all posts
Showing posts with label சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில். Show all posts

Sunday, 22 September 2013

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை .நேற்று ஸ்ரீரங்கத்தில் டி.வி.எஸ் ஊழியர்கள் மிக அருமையாக தொண்டு செய்தனர்,கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.வி.ஐ.பி யாக இருந்தாலும் ரூ.250 கியூ மூலமாக மட்டுமே வரவேண்டும்.தேவையற்ற தேக்குதல் இல்லை.காத்திருக்கும் வேலைஈலை.கியூ நகர்ந்து கொண்டே இருந்தது.மிக எளிதில் மூலஸ்தானம் செல்ல முடிந்தது.வாழ்த்துக்கள்.

மதியம் மதுராகபே சாப்பாடு.தாயார்,மூலவர்,சக்கரத்தாழ்வார் சேவை,மாலை முரளிகாபி...பேஷ்...பேஷ்..நேற்றைய நாள் அருமை.


Sunday, 23 December 2012

மற்றை நம் காமங்கள்


ஒவ்வொரு வருஷமும் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் செல்லும் போது செல்வரப்பமும்,சம்பாரதோசையும்,சுவைக்காமல் விடுவதில்லை என்ற கங்கணத்துடன் இருக்கிறேன்.

மூலவர் முத்தங்கி சேவை சில வருடம் வாய்ப்பதுண்டு.250 ரூ கியூவே ரெண்டு வரிசை நீண்டிருக்கும்.கியூமுழுதும் கருப்பும் சிவப்புமாக அய்யப்ப பக்தர்கள்.என்ன விலை கொடுத்தாவது தாங்கள் பர்த்த லிஸ்ட்டில் ரெங்கனை கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் வரிசையில் காத்திருப்பார்கள்.ம்...நானும் மலைத்துக் கொண்டே பகல்பத்து மண்டபத்தில் நம்பெருமாளை சேவித்துவிட்டு...அரையரின் குரலை காதை தீட்டிக் கொண்டு கொஞ்சம் கேட்டுவிட்டு,(ஜிங் சாங் சத்தம் தான் கேட்கும் ஒரு வார்த்தை கூட புரியாதுஎனக்கே இப்படி இனில் ஸ்ரீரங்கத்து வயதான மாமிகளுக்கு என்ன காதில் விழுதுவிடப் போகிறதுஆனாலும் அசாத்திய பொருமையுடன் நம்பெருமாளை சேவித்த வண்ணமே இருப்பர்.)

.சென்றமுறை பெருமாள் பூச்சாத்தலின் போது கைநிறைய மனோரஞ்சித பூ கொண்டுவந்திருந்தாள் பார்யாள்.ஆனால் பூவை வாங்கிக் கொள்ளும் சாத்தாதார் தொடுத்திருந்தால் தான் வாங்கிக் கொள்வோம் என சொல்லிவிட்டார்.இன்றும் கோவிலுக்குக் கிளம்பும் போது வீட்டில் பூத்த மனோரஞ்சிதம் மூன்று பெரிய பூக்களை பரித்து கையில் எடுத்துக் கொண்டாள்.அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள்,ராஜா.ரங்கராஜா……இரண்டு பக்கமும் வரிசையில் வந்து எட்டடி தூரத்திலிருந்து பெருமாளை சேவிக்கலாம்.அபயஹஸ்தம் ஜொலித்தது.ஒரு பட்டாச்சாரியார் அருகில் வந்தார் மனைவியிடமிருந்து பூக்களை வாங்கி அவர் கையில் கொடுத்தேன்.அதை எடுத்துக் கொண்டு நம்பெருமாள் அருகில் இருக்கும் இன்னொரு பட்டரிடம் கொண்டு கொடுத்தார்.அந்த பட்டரோ பூக்களை வலது கையில் வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டு இடது கையை மார்பை ஒட்டி பிடித்துக் கொண்டு வலது கையால் ஒவ்வொரு பூவையும் நம்பெருமாள் கை,மார்பு,தலை என பவ்யமாக வைத்தார்….மனைவிக்கு கண்ணில் நீர் திரண்டது.நீங்கள் பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமாள் எட்டு அடி உன்னை நோக்கி வருவார் என்ற திருவெள்ளரை கோவில் பட்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.மனம் நிறைந்தது.நம்பெருமாளைச் சுற்றி வந்து எதிரே இருந்த ஆச்சார்யர்,ஆழ்வார்களை சேவித்தோம்

சக்கரத்து ஆழ்வார்,தாயார் சேவைமுடித்து பிரசாத ஸ்டால் பின்புறம் உள்ள மண்டபத்தில்  கம்பி கிரில் கேட்டுக்கு பின்புறம் நம் அயிட்டம் தான்,அவசர அடி புளியோதரை இந்த காலத்தில் சாப்பிடுவதை தவித்துவிடுவது நல்லது.கலந்ததும் கலக்காததுமாய் உருண்டையும் கட்டியுமாக புளியோதரை முறைத்துக் கொண்டிருக்கும்எலுமிச்சம் பழ சீசன் அதனால் தோசைக்கான ஊறுகாயில் தளர் முழித்துக் கொண்டிருக்கும்.வடை பல்வேறு வர்ணஜாலங்களில் போட்டு எடுப்பவரின் ஜோலியை பொருத்து சிவப்பாகவும்,கருப்பாகவும்,பொன் நிறத்திலும் ஜொலிக்கும்.எப்போதும் சூடாக இருக்கும்.பெரிய கோபுரத்திற்கு பிறகு உளுந்து தோலுடன் கூடிய வடையும் இங்கு விசேஷம்.நிற்க என்ன விசேஷமாக இருந்தாலும் டயாபிடிஸ் காரனுக்கு டயட் முக்கியம் என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு மதிப்பளித்து’”மற்றை நம் காமங்கள் மாற்றேலேரோ ரெம்பாவாய் “ என மனதிற்குள் வேண்டிக் கொண்டு ( என்ன இல்லையோ அதைத் தானே கேட்கமுடியும்) வீடு வந்து சேர்ந்தோம்.

Saturday, 24 December 2011

மார்கழி அமாவாசை



காவிரி பாலத்திலிருந்து

இன்று மார்கழி அமாவாசை.அம்மா
மண்டபம் காவிரி படித்துறையில் தர்ப்பணம் செய்ய உத்தேசித்தேன்,.கடந்த 7 நாட்களாக ஸ்ரீரங்கம் கோரத மூலையில் திரு.வேளுகுடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் காலை மாலை இரு வேளையும் நடந்து வருகிறது. மாலை ”ஆழ்வார்கள் அனுபவித்த அரங்கன்” நேரம் 7.00 முதல் 8.30.காலை ”திருப்பாவை”.விடியற்காலம் பனியில் வண்டி ஓட்டுவதும்    எதிர்பனியை அனுபவிப்பதும் இன்னும் சலிக்கவில்லை.காவிரியை பாலத்திலிருந்து பார்க்கையில் வளைந்து ஓடும் ஆறும் போர்வை போத்திய பனியும் அழகு.

 பனியை சுமக்கும் காவிரி
அம்மா மண்டபம் படித்துறையில் கால் முழங்கால் அளவு நீர்.நல்ல ஓட்டம்.ஸ்நானத்தை போட்டு விட்டு, அப்பா,தாத்தா,முத்தாத்தா என அவனைவருக்கும் எள்ளும் தண்ணீரும் விட்டு விட்டு நேரே முரளி காபி வந்து ஒரு ஸ்ருதி சுத்தமான காபி குடித்தேன்.
 முரளி காபி  தேர்ந்த செய் நேர்த்தியாளர்.அவரிடம் “சக்கரை தூக்கலாக” “ஸ்டிராங்கா” “அரை சக்கரை” ”கொஞ்சமா” என அதிகப்பிரசங்கியாக  டீக்கடையில் சொல்வது போல் சொல்லக் கூடாது.சொதப்பிவிடும்.அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டால் ஒரு சூப்பர் காபி கிடைக்கும்.(ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில்). காபி குடித்து விட்டு பாதாள கிருஷ்ணன் தாண்டி வலப்புறம் திரும்பி கோரத மூலையை நோக்கிய பயணம். இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக மாமா மாமிகள், வந்தவர்கள் மேடையில் இருக்கும் திவ்ய தம்பதிகளை(திவ்யதம்பதிகள்,திருவாராதணம்,அருளிச்செயல்,இப்படி வைஷ்ணவ வார்த்தைகளுக்கே தனி நிகண்டு வேண்டும்) நோக்கி ஒரு நம்ஸ்காரத்தை போட்டு விட்டு இருக்கையில் \அமர்ந்தனர்.சிறிது நேரத்தில் வேளுகுடி காரில் வந்தார்.பவ்யமாக மேடைநோக்கி வந்தவர் மேடைக்கு கீழே நின்று தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து மார்பை மூடியவாறு இறுக கட்டிக்கொண்டு மேடை ஏறினார்.ஆரம்பித்தார் இன்று,விட்ட 7 மற்றும் தொடரும்  8 ம் பாடல். ராமானுஜரின் ஆறு கட்டளைகளுடன் தொடர்பு படுத்தி அழகான பேச்சு.







 உபன்யாசம் நடக்கும் கோரத மூலை கொட்டகை

 உபன்யாசம் முடித்து சாத்வீகமாய் செல்லும் வேளுகுடி(தூரத்தில்)
                         
                     
                                        
                       

ஸ்ரீ இராமானுஜரின் ஆறு கட்டளைகள்

  1. ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை.(கீசு கீசென்றெங்கும்)
  2. அருளிச்செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை.(கல்ந்து பேசின)
  3. உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை.( நாராயணனன் மூர்த்தி)
  4. த்வயத்தை அர்தாநுஸந்தாநம் பண்ணிப் போருகை.(தயிரரவம்)
  5. என்னுடையவன் என்று அபிமாநிப்பான் யாவனொரு பரமபாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை.(கேசவனைப்பாடவும்)
  6. திருநாராயணபுரத்திலே ஒரு குடில் கட்டிக்கொண்டு இருக்கை.(திறவேலோரெம்பாவாய்)
முடித்து தாயார் சன்னதி , சக்கரத்தாழ்வார் சேவை முடித்து வரும்போது  ஆண்டார்வீதி மதுராகபே யில் உணவு முடித்து வீடு வந்து சேர்ந்தேன்.இன்றைய பொழுது நல்ல பொழுது.
பி.கு

ஸ்ரீவைஷ்ணவத்தில் ரஹஸ்யங்கள் மொத்தம் மூன்று. அஷ்டாக்ஷரம் என்னும்
திருவெட்டெழுத்து, த்வயம் என்னும் மந்திரரத்னம், சரம ச்லோகம் என்னும் பகவத்
கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் ச்லோகம் ஒன்று. 

தத்வங்கள் மொத்தம் மூன்று. சித், அசித், ஈச்வரன். 
சித் -- அறிவுசால், அறிவுருவான, அணுவான உயிரிகள். 
அசித் -- அறிவு சாலாத சடப்பொருள்கள் 
ஈசவரன் -- பேரறிவு சான்ற, பேரறிவே உருவான, சித், அசித் ஆகியவைகளைத் தன்னுள்
உள்ளட்க்கிய, விபுவான, பிரபஞ்ச மகா நித்திய உயிர்த் தத்துவம். 
மூன்று தத்வங்களுக்குப் பெயர் தத்வ த்ரயம். 

ரஹஸ்யங்கள் மூன்றுக்குப் பெயர் ரஹஸ்ய த்ரயம். (நன்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Saturday, 21 May 2011

சக்கரத்தாழ்வார் சன்னிதி தரைத்தளம் மாற்றம்


இன்று காலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.சமயபுரம் சென்று மாரியம்மன் தரிசனம். மனைவிக்கு வாரக்கட்டளை.இது இரண்டாம் வாரம்.25.00 கியூவில் தரிசனம் முடித்தோம்.வீட்டிலிருந்து பற்த்துச் சென்ற மனோரஞ்சிதம் பூவினை அம்மனுக்கு மார்பில் சூட்ட காண கண்கோடிவேண்டும். முடித்து ஸ்ரீரங்கம்.கொள்ளிடக்கரை யோரமாக திருவரசுகள் நிறைந்த சாலை வழியே வடக்கு வாசல்

வந்தடைந்தோம்.வாசுதேவர்,ராமர்,ஆண்டாள்,கீழகோதண்டராமர்,சுக்ரவார கிருஷ்ணன்,என சேவை முடித்து நேரே சக்கரத்தாழ்வார் சன்னிதி.7.30 க்குள் மூடி விடுவார்கள்.சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கடந்த மூன்று வாரமாக தரைத்தள கற்கள் பெயற்து எடுக்கப்பட்டு புதிய கற்கள் போடப்பட்டு வருகிறது.கற்களுக்கு அடியில் ஆற்று மண்ல் .பாதி கல்லிலிம் பாதி மணலிலும் தான் பிரகாரம் சுற்றமுடிந்தது.முடித்து உடையவர் சன்னிதி.( உடையவர் சன்னிதி போகும் வழியில் உள்ள இலவசக் கழிப்பறை நன்கு பராமரிக்கப் பட்டு வருகிறது).அங்கிருந்து தாயார் சன்னிதி.ஒரே ஓட்டம்.8.00 மணிக்கு நடை சாற்றப்பட்டு விடும்.நல்ல தரிசனம்.பஸ்ஸ்டாண்டு குறிஞ்சி ஹோட்டல் வந்து காலை சிர்றுண்டி முடித்து பசங்களுக்கும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும் போது மணி 9.00



Wednesday, 13 April 2011

சேஷ ராயர் மண்டபம்





பாயும் குதிரையுடன் போர்க்களக்காட்சி





குதிரையின் வால்.



யானை மீதிருந்து புலியைக் கொல்லும் வீரன்.

(வீரனின் உடல் மொழி வியக்கத்தக்கதாய் இருக்கிறது ஓவியத்தில் மட்டுமே இது சாத்தியம்.)



இது என்ன என்று தெரியவில்லை, தலைக்குப் பதிலாக மரம் இருக்கிறது, ஏதாவது புராணக் காட்சி யாக இருக்கலாம்.




அந்தக்கால ஜிம்நாஸ்டிக்ஸ். ( கழைக்கூத்தாடிகளா?)





நோ கமெண்ட்ஸ்.



வெள்ளை கோபுரம் பி புலத்தில்.




சீன வீரர்களாக இருக்க வேண்டும், மீசை வித்தியாசத்தைப் பாருங்கள்.





நின்ற நிலையில் நரசிம்மர்.


ஸ்ரீரங்கம் கோவிலில் சேஷ ராயர் மண்டபம் சிற்ப வேலைப்படுகளூடன் கூடிய அழகிய மண்டபம். கிழக்கு வெள்ளை கோபுர வாயிலின் வழியாக உள்நுழையும் போது இடது புறம் இருக்கிறது சேஷ ராயர் மண்டபம். இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் (கி.பி.1509-1529) அமைக்கப்பட்டதாகத் தெரிகிற்து.ஒரு வரிசைக்கு 12 தூண்கள் என எட்டு வரிசைத் தூண்களைக்கொண்டது இம் மண்டபம்.முதல்வரிசை 8 தூண்களிள் தான் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. வாலிசுக்ரீவ வதம், தொங்கு மீசை கொண்ட சீன வீரர்கள்,தொடையில் சொறுகி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கத்தி,ஜிம்நாஸ்டிக்,யானை மீதிருந்து புலியை லாவகமாக ஈட்டியால் சொறுகும் வீரன் என நுனுக்கமான சிற்பங்கள் நிறைந்துள்ளது.
பார்த்து ரசித்து வியக்க வேண்டிய ஒரு மண்டபம் இது.

Sunday, 10 April 2011

உத்தமர்கோவில்

09.03.2011 திருச்சிக்கு அருகிக் உள்ள உத்தமர் கோவில் சென்றுவந்தோம்.திருச்சியிலிருந்து 15 கீ.மீ தொலைவில் உள்ளது.பிரம்மா, விஷ்ணு,சிவன் என மூன்று தெய்வங்களும் குடிகொண்டுள்ள கோயில். கோயிலின் உள்ளே வளைத்து வளைத்து ஏகபட்ட சன்னதிகள். கிழக்கு நோக்கி பெருமாள் மேர்கு நோக்கி சிவன் சண்டிகேஸ்வரர், துர்க்கை,அனுமன்,அம்பாள் சன்னதி , தாயார் சன்னதி என நிறைய சன்னதிகள்.திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். ஊரின் பெயர் பிச்சாண்டார் கோவில்.

ஸ்ரீரங்கத்தில் இன்று பூச்சாத்து.நம்பெருமாள் கோடைமண்டபத்தில் பூக்களுடன் காட்சிதந்தார்.நாங்கள் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது பட்டாபிராமர் சன்னதி வழியாக நம்பெருமாள் வந்து கொடிருந்தார்.பக்தர்கள் கையில் தொடுத்த பூச்சரத்தினை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சாத்தாதார் சிலர் அப்பூச்சரங்களை பெற்று கையில் அடுக்கியபடி வந்தனர். நானும் வீட்டில் பூத்த சில மனோரஞ்சிதப்பூக்களை கொடுத்தேன். உதிர்ந்து விடும் தொடுத்ததாய் இருந்தால் பரவாயில்லை என சொன்னார். அடுத்தமுறை தொடுத்து கொண்டுவரவேண்டும்.

பி-கு
பிர்மாநந்தா சர்பத் ரூ 10 ஆகிவிட்டது

தேர்தல் ஆணைய கெடுபிடியினால் திருவிழாபோலவே இல்லை. துக்க வீடு போல ஊரே களையிழந்து இருக்கிறது.

Tuesday, 22 March 2011

சேர்த்தி



19.03.2011 சனிக்கிழமைஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை ந்ம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி அடந்த நாள். இன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

புகைப்படம் சேர்த்தி மண்டபத்தில் கூட்டத்திற்கு இடையில் நான் எடுத்தது.


Saturday, 3 July 2010

திருவானைக்கா

திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு உள்ளே சென்று வழிபட ரூ.5.00 கட்டணம் இருந்து வந்தது.நவராத்திரிக்குப்பின் இன்றுதான் திருவானைக்கா சென்றேன்.இன்று கட்டணம் உயர்ந்துவிட்டது.ரூ.10.00.அம்மன் சன்னதி விட்டு வெளியேவரும் வழியில் குபேர லிங்கம் செல்லும் வழி என பெரிதாக போர்டு மாட்டியிருந்தது.போனதில்லை.போய்வந்தேன்.லிங்கம் தனியே ஒரு கம்பி கிரில் கேட்டிற்கு உள்ளே இருந்தது.ஒருவர் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி பூ,விளக்கு காண்டிராக்ட் மாறிவிட்டது போல இருக்கிறது.பூ சன்னதிக்கு வெளியே விற்கும் என நம்பி ஏமாந்தேன்.புதிய காண்டிராக்டர்கள் தொழிலுக்கு புதியவர்கள் என்பது வழிய வழிய நெய்யை அகலில் நிரப்பியதிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.பூ இல்லை.பக்கத்தில் புளியோதரை ஸ்டாலில் இருந்த அழுக்கு வேஷ்டி அய்யங்கார் ஒருவரிடம் விசாரித்தேன்.(அழுக்கு வேட்டி என்பது அடையாளத்திற்குதான் மன்னிக்கவும்)” பூ இல்லங்களா”
இந்தவருஷம் காண்டிராக்ட் எகிறிடுத்து சார்.15 % அதிகமாம்.பழைய ஆள் எடுக்கலை.ஆனா தாயார் சன்னதி பூ காண்டிராக்ட் அவுங்கதான் எடுத்திருக்காங்க” என்றார்.

பூ இல்லாமல் சக்கரத்தாழ்வாரை சந்தித்ததில்லை. எனவே தாயார் சன்னதி சென்று தாமரை

வங்கிவந்து சக்கரத்தாழ்வார் சேவை செய்தேன்.

இந்த பிளாக்கில் நானே ஆடிக்கொருநாள் அம்மாவாசைக்கொருநாள் பதிவு செய்கிறேன்.இதை பார்த்து விட்டு ஒரு வாசகர்? எனக்கு மெயிலினார்.” அதாவது அவர் ஸ்ரீரங்கத்திற்கு வரப்போகிறாராம்.கோயிலில் தரிசனத்திற்கு உதவ முடியுமா என கேட்டுள்ளார்.ஒரு உண்மையை சொல்லியாக வேண்டிய கட்டாயம். எனக்கு ஸ்ரீரங்கத்தில் ரங்கன்,தாயார்,சக்கரத்தாழ்வார் தவிர வேறு யாரையும் தெரியாது. கடந்த 18 வருடங்களாக சனிக்கிழமை தோறும் ஸ்ரீரங்கம் சென்று வருகிறேன், கண்டிப்பாக சக்கரத்தாழ்வார் பார்ப்பேன்,வாய்ப்பிருந்தால் தாயார், நம்பெருமாளுக்கு என்ஞாபகம் வந்தால் நான் யோசிக்காமலேயெ எதிரில் வந்து ஏதாவது ஒரு மண்டபத்திலிருந்துகொண்டு வாடா பையா...என வாஞ்சையோடு அழைப்பார்.
அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தால் ஆறு மாசமானாலும் முகம் காட்ட மாட்டார்.
பெரிய பெருமாள் பெரிய பெருமாள்தான்.
வருஷத்திற்கு அய்ந்தாறு தடவை சேவை கிடைக்கும்.
தாயாருக்கு அன்பு அதிகம்.எனக்கு எப்போது என்ன வேண்டும் என அவளுக்குத்தெரியும்.அசடு மாதிரி ஏதாவது ஏடாகூடத்தில் இறங்கறேன்னு வச்சுக்குங்கோ...இது இவனுக்கு ஒத்து வராது...ஆழம் தெரியாம காலவிடறான்..ன்னு காரியத்தை நிறுத்தி விடுவாள்.அப்புறமா புரியும் அம்மா அம்மாதான்னு.பாத்தாலும் பாக்கட்டாலும்,வேண்டிண்டாலும் வேண்டிக்காட்டாலும்,வாங்கிண்டு போனாலும் வாங்கிண்டு போகாட்டாலும்...நம்ம கொழந்த...என்ற வஞ்சை எப்போதுமிருக்கும்.பெருமாளண்டையும் சொல்லி வைத்துவிடுவாள் நம்ம கொழந்தகிட்ட விளையாடாதேள்னு.

Sunday, 23 August 2009

காவிரி




இன்றைக்கு காவிரி இருகரையும் புரண்டு ஓடுகிறது

Saturday, 8 August 2009

பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில்

இன்று சக்கரத்தாழ்வார் சேவை,தாயார் சேவை செய்தாயிற்று. அரங்கனை காண ஏகக்கூட்டம் .பிரதட்சிணம் மட்டும் செய்து விட்டு வந்தோம். தாயார் சன்னதியில் வழங்கப்படும் மஞ்சளைக் கொண்டு ஒரு பெண் சன்னதிக்குள்ளேயே சுவரில் நாமம் வரைந்து கொண்டிருந்தார்.இதைவிட அரங்கன் சன்னதி சுற்றில் சேனை முதலியாருக்கு பக்கவாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று ரங்க விமான கலச தரிசனம் பார்க்க அடையாளமாக தரையில் பித்தளை தகடு பதிக்கப்பட்டிருந்தது.யாரோ ஒரு புண்ணியவான் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்.தகடு உறுகி இப்போது கருத்துப்போய் இருக்கிறது.பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.


பிரசாதம்: வடை,புட்டு,புளியோதரை, தோசை வித் ஊறுகாய்.
அத்தனையும் நானே சாப்பிடவில்லை.குழந்தைகளுக்கு பார்சல்.நானும் ஜயந்தியும் வடை ,புளியோதரை,தோசை மட்டும் சாப்பிட்டோம்.
காவேரியில் இரு கரையும் தண்ணீர்.சுபிட்ஷம்.

Sunday, 5 July 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 3

01.07.2009 முதல் கோவில் பிரசாதங்கள் விலை ஏற்றம்.
புளியோதரை 6.00
தயிர்சாதம் 6.00
வடை 6.00
சிறிய நெயப்பம் 7.00
பெருமாளே ! கிலோ ஒரு ரூபாய் அரிசி விற்கும் போது இந்த விலை ஏற்றம் தேவையா? திருப்பதி போல பிரசாதங்கள் எல்லாம் இலவசமாக்கப்பட வேண்டும்.அப்போதுதான் வியாபார நோக்கத்தோடு கோடிக்கணக்கில் செய்யப்படும் இந்த ஒப்பந்தங்கள் ஒழியும்.சாதமாவது கொஞ்சம் கூட தரப்படாதோ? ஒரு கரண்டி தான்.ரங்கா....ரங்கா..




Sunday, 29 March 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 2

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 228.03.2009 இன்று காலை வேறு முக்கியமான அலுவல் இருந்ததால் ஸ்ரீரங்கம் செல்வதை மாலை தள்ளி வைத்தேன்.7.45 க்கு கோவிலுக்குள் சென்றேன்.சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள்,தாயார், சேவை முடிய 9.15 ஆகிவிட்டது.நம்பெருமாள் உபய நாச்சியாருடன் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்.காலை நேரத்திதைவிட மாலையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜன நெருக்கடி அதிகம்.காலைவீசி நடக்க முடியாது.சரியாக 9.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் உள் அனுமதிக்கப்படுவதில்லை.விவரம் தெரிந்தவர்கள் சரியாக எங்கு சுற்றினாலும் 8.30 க்கு ஆரியபடாள் வாசலுக்குள் சென்று விடுகிறார்கள்.8.50 க்குள் பெருமாள் சேவை முடித்து ஓட்டமாக தாயார் சன்னதி ஒடி தாயார் சேவையையும் முடித்து விடுகிறார்கள்.9.00 மணிக்கு தாயார் சன்னதி நடை சாத்தப்படும்.அடியேனும் இந்தமுறை அவ்வாறே செய்தேன்.அரவணை என்பது ஒரு பிரசாதம்.இரவு தாயார் சன்னதியிலிருந்து 9.30 மணிக்கும் , பெருமாள் சன்னதியிலிருந்து 10.00 மணிக்கும் நைவேத்யம் முடிந்து வரும்.பிரசாத ஸ்டாலுக்கு பின் உள்ள வாயில் உள்ளே சென்றால்(ஸ்ரீ பண்டாரம் என்று பெயராம் http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/>ஜெயஸ்ரீ பதிவிலிருந்து) இந்த நேரத்திற்கென்றே ஒரு கூட்டம் கிரில் கதவுகளுக்கு பின் ரெடியாக நின்று கொண்டிருப்பர்.சூடான அரவணை ( சர்க்கரைப் பொங்கல் போல இருக்கும்.இனிப்பு அளவாக இருக்கும்,நெய் ஊறிக்கொண்டிருக்கும்)தாயார் சன்னதியிலிருந்து வந்தவுடன் உருண்டை கணக்கில் இலையில் வைத்து தருகிறார்கள்.ஒரு உருண்டை 5.00 ரூ.பிரசாதமாக சாப்பிடலாம்.நிறைய சாப்பிட முடியாது.நெய் அதிகம் என்பதால் திகட்டும்.(சிறிது உவர்ப்பு சுவையுடன் இருக்கும் என்பது கூடுதல் தகவல்).
தகவல்: இரவு 9.30 க்கு தயார் சன்னதியிலிருந்தும்,10.00 மணிக்கு பெருமாள் சன்னதியிலிருந்தும் வரும் அரவணை பிரசாதம் பிரசாத ஸ்டாலில் கிடைக்கும்.
கொசுறு:பாலக்கரை பிர்மான‌ந்தா ச‌ர்ப‌த் 5.00 ரூ விலிருந்து 6.00ரூ ஆகிவிட்ட‌து
இன்று சாப்பிட்ட‌ பிர‌சாத‌ம்: த‌யிர்சாத‌ம் எலுமிச்சை ஊறுகாய்
அர‌வ‌ணை ப‌ற்றிய ஜெயஸ்ரீ யின் சமமைய‌ல் குறிப்புக்கு இங்கே http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/

Monday, 2 March 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 1

படம் 1 சந்திரபுஷ்கரணி குளம்
படம் 2 தாயாரின் வசந்தமண்டபம்


படம் 3 வசந்தமண்டபம் மூடிய கேட்டிற்கு வெளியிலிருந்து

28.02.2009 இன்று நம்பெருமாள் முn மண்டபத்திலேயே சேவை.கோதை சொன்னது போல பெருமாள் "தேமேன்னு" இருந்தார்.இப்போது மனோரஞ்சிதம் சீசன் போல. ஸ்ரீரங்கத்தில் பல கடைகளில் மனோரஞ்சித பூவை பார்க்க முடிந்தது.தாயார் தரிசனம் நன்கு கிடைத்தது.தாயார் சன்னதியில் வேளுகுடி கிருஷ்ணன் அவர்களை பார்த்தேன். சக தர்மினியோடு வந்திருந்தார்.என்ன ஒரு தேஜஸ்.நீக்ரோவிற்கு இருப்பது மாதிரி சுருள் முடி. பாதி தலை மழுங்கடிக்கப்பட்டிருந்தது.கிஞ்சித்காரம் ஆடியோ சிடியில் இவரது உபன்யாசம் கேட்டிருக்கிறேன்."பாகவத முத்துக்கள்" இவரது சிறப்பான பேச்சு.எப்போது நேரில் கேட்க்கப் போகிறேன் தெரியாது.பெருமாள் அனுக்கிரஹம் வேணும்.

பி.கு
ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் இன்னும் பாவாடை சட்டை, பாவாடை தாவணியில் லட்சணமான குழந்தைகளை பார்க்க முடிகிறது.

இன்றய பிரசாதம் தோசை எலுமிச்சங்காய் ஊறுகாய்.

தகவல்: அப்பம் மாலையில் தான் கிடைக்கும்.

தட்பவெப்பம்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ....என்ன வெய்யில்...காவிரி படுத்தவன் மார்பில் பூணல் மாதிரி ஒரு ஓரமாக‌ நெளிந்து செல்கிறது.