Friday, 8 May 2015

சீனிவாசநல்லூர் - கொரங்கனாதர் கோவில்



சீனிவாசநல்லூர் ஒரு சிறிய ஊர். திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ளது. 06.05.2015 அன்று அங்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவ்வூரில் ஒரு சோழர்கால கற்றளி ஒன்று உள்ளது. பராந்தகசோழன் காலத்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிக்கின்றனர்.
வட காவிரிக்கரையின் ஓரம் அமந்துள்ளது. காவிரிக்கும் அக்கோவிலுக்கும் ஒரு சாலை மட்டுமே இடைவெளி. கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலாவாக இருக்கிறது அக்கற்றளி.பராமரிப்பு இல்லை. திறந்து காட்ட காவலாளி கூட இல்லை. கொடும்பாளூரிலாவது காவலாளி இருந்தார்கள். இங்கு யாருமில்லை.கோவிலுக்குச் செல்ல ஒரு ஒற்றையடிப்பாதை. சாலையிலிருந்து கோவில் தெரியாமல் மூன்று முறை அதைக்கடந்து போய் ஒரு வழியாக  கண்டுபிடித்தோம் “கொரங்கனாதர் கோவிலை” நீலநிறப் வர்ணம் பூசிய பெரிய இரும்பு கேட். அதை நாமே திறந்து கொண்டு உள்ளே சென்றால் ஒரு வீட்டின் புழங்கும் வாசல் அதைத்தாண்டிச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போதே தெரிகிறது அந்த மகாபொக்கிஷம். ஆறு படிக்கட்டுகள் இறங்கியவுடன் மேலும் ஆறு படிகட்டுக்கள் ஏறினால் கோவிலின் நிலைக்கதவு. கதவு பூட்டியிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. கோவிலைச் சுற்றி வர கருங்கற்களால் ஆன பிரகாரம். அங்கிருந்து துவங்குகிறது ஆச்சரியத்தின் கதவுகள். பக்கம் பக்கமாக கல்வெட்டுக்கள்.அற்புதமான சிற்பங்கள் எல்லாம் கால் போய் கைபோய் ஈழபோராளிகளைப்போல களையுடன் இருக்கிறது.ஆங்காங்கே ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்தியத் தொல்லியல் துறை போர்டு பல்லிளிக்கிற்து.பூத கணங்களின் வரிசை அச்சில் வார்த்தெடுத்த மாதிரி ஒரே அளவுடன் வித விதமாக அணிவகுக்கிறது.இது போன்ற மாதிரிகளை நார்த்தாமலையிலும் பார்த்திருக்கிறேன். சுருள் முடிகொண்ட ரோமானிய வடிவிலான சிற்பமும் இடையிடையே இருக்கிறது.மாமரமும் பலாமரமும் சுற்றிலும் காய்த்து தொங்குகிறது.சிற்பங்களை உற்று நோக்கும் போது ஒரு அமானுஷ்யம் தொற்றிக் கொள்கிறது. எனக்கு வரலாறும் ஆராய்ச்சியும் முக்கிமல்ல அதற்கான பெரியவர்கள் நாட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற பிரதேசங்களுக்கு வரும்போது லகலகலகலக……. வேட்டையன் பராக் பராக் என அக்கால மன்னர்களும் சிற்பிகளும் சட்டென என்னுள் உலாவரும் பரவசம் எனக்குப் பிடித்தமானது. வெறும் மணல் வெளிப்பிரதேசமான இங்கு இத்தகைய கற்களைக் கொண்டு இப்படி ஒரு கோவிலைக் கட்டவேண்டும் என ஏன் நினைத்தான். கற்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும். எத்தனைபேர் பணியாற்றியிருப்பார்கள்……பக்தி மட்டும் காரணமாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம். ஒரு கேன்வாஸ் துணியில் ஓவியம் தீட்டுவது மாதிரி சிறிய தூண்களின் இவர்கள் செதுக்கியிருக்கும் சிற்பம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது போன்ற சிறியவகை புடைப்புச் சிற்பங்கள் ராமாயணக் கதையினைச் சொல்வதாக செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட பாச்சூர் என்னும் ஊரில் பார்த்திருக்கிறேன். அது அவ்வளவு புரிவினையாக இருந்திருக்கவில்லை. இங்கோ அதைவிடச் சிறிய அளவில் சிறிதளவே புடைத்திருக்கும் அற்புத வடிவங்கள். ஒரு பெண் நேராகவும் பின் பக்கமாகவும் திரும்பி யிருப்பது போன்ற ஒரு சாண் அளவுள்ள வடிவம் என்னை மெய்மறக்கச் செய்தது. கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
இதோ சில
·         மாலை அணியும் ஒரு பெண் ஒரு சிறுவன் எடுத்துக் கொடுக்கிறார்
·         ஒருவர் வாசிக்க ஒருவர் நடனமாடுகிறார்
·         ஒரு பெண்ணுக்கு பிரசவமாகிறது அவளைத் தோழிகள் தாங்கிப் பிடிக்கின்றனர்.
·         பிள்ளை பிறந்து விட்டது என்கிற சேதியை ஓடோடிச் சென்று சொல்லும் தாதிகள்.
·         பக்கத்தில் குழந்தையுடன் தாய்
·         சிதிலமடந்திருந்தாலும் அழகான தட்சினாமூர்த்தி.
·         கோஷ்டத்ட்தில் நேராக நிற்காமல் திரும்பியவாறு நிற்கும் சிலைகள்.
·         கால் இழந்து போன ஒரு சிலையின் கொங்கைகளின் இயற்கையான வடிவமைப்பு கடந்த பின்னும் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
·         தூண் சிற்பங்களின் மூலமாக சங்கர் பட பாடல் காட்சியில் ஊடாக கதை சொல்வது மாதிரி ஏதோ சொல்ல வருகிறான் சிற்பி. சட்டென பார்க்கும் போது சோழர் அரச குடும்பத்து பிரசவமும் அதன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களும் சொல்ல புயன்றுள்ளதாகப் படுகிறது.
·         ”ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
     நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்” என்கிற பாசுரம் மாதிரி கொண்டாட்டமான பொழுதை சிற்பமாக்கியிருக்கிறார்கள்.
·         வேறு மாதிரியும் திரைக்கதை எழுதிக்கொள்ளலாம். மன்னனின் ஆசைநாயகியின் ஊராக இது இருந்திருக்கலாம் குழந்தை பிறந்த உடன் அதன் சந்தோஷத்தின் காரணமாக அதை வெளிப்படுத்தியிருக்கலாம்.
·         அல்லது சிற்பிக்கு லீவ் கிடைக்காமல் ஏக்கத்தில் வடித்திருக்கலாம்.
·         ஒரு நடராஜர் சிலை. உண்மையில் சிவன் நடனமாடியிருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என நினைக்கத்தூண்டுகிறது. அளவு ஒரு சாண். அதிலும் அவர் தொடையும் கெண்டைக்காலும் புடைத்துக்கொண்டு அப்படி ஒரு நடனம்.
·         குழந்தையை ஒருத்தி கையில் வைத்துக்கொண்டு நிற்கிறாள் ஒன்னொருத்தி பக்கத்தில் வாஞ்சையுடன் நிற்கிறாள் நடுவில் ஒரு குத்துவிளக்கு விளக்கு அவள் இடுப்பு உயரம் இருக்கிறது. அக்கால அணிகலண்கள், விளக்குகள் இவைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் ஒரு சாண் அளவே.
உடன் வந்த தம்பி நாகராஜ் ஒத்த அலைவரிசை உடையவராக இருந்ததால் நிதானமாக பார்த்துவர முடிந்தது.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே