Monday, 16 June 2014

செவிசாய்த்த விநாயகர்

           வினாயகர் சிலைகள் எப்போதும் எனக்கு விருப்பமானவை.யானை தலையும், மனித உடலும்,தொப்பை வயிறும்,குட்டியூண்டு எலியும், கொண்ட ஓர் உருவத்தை முதலில் கற்பனை செய்தவன் ரசனையாளன்.புராணப்படங்களில் வரும் பகோடாகாதரின் தலையசைப்புகள் அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்தது.

       சமீப காலமாக பல்வேறு விதமான மார்டன் விநாயகர் சிலை மார்க்கெட்டில் கிடைக்கிறது.கம்ப்யூட்டர் விநாயகர்,பாத் டப் விநாயகர்,சேட்டு விநாயகர், என பிடித்து வைத்தபடியெல்லாம் வரும் அற்புதம் அவர்.அப்படி ஒரு கலெக்ஷனே என்னிடம் இருக்கிறது.

          எங்கள் ஊர் கோவிலில் ( திருமுதுகுன்றம்) கூத்தாடும் வினாயகர் (மாட்டிகிட்டான் , மாட்டிக்கிட்டான், என்று சுந்தரரை பார்த்து ஆடுகிறாராம்)  , மாற்றுறைத்த விநாயகர்(இது ஒரு அப்ரசர் கதை) , பல படிகட்டுகள் இறங்கி தரிசிக்கும் ஆழத்து வினாயகர், சொறி சிரங்கு வந்தால் கூட உடனே சென்று முறையிடும் உரிமை கொண்ட ஆத்தங்கரைப் பிள்ளையார், என சுவாரசியமான பின்னனிக் கதைகள் கொண்ட பிள்ளையார் சிலைகள் உண்டு. பெரியவர்களுடன் கோவிலுக்குச் செல்லும் போது அது பற்றிய சுவாரசியக் கதைகள் எத்தனையோமுறை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளேன்.அது ஒரு விசித்திரமான பயமற்ற உலகத்தை உள்ளுக்குள் விவரிக்கும்.

             சென்றவாரம் திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் சத்தியவாகீசர் கோவிலில் சுவாரசியமான கதைப் பின்னனி கொண்ட ஒரு பிள்ளையார் சிற்பம் காணக் கிடைத்தது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.நம்மையும் அறியாமல் உதடு தானாய் புன்னகைக்கும்.அந்த சிற்பி எதனால் இப்படி படைத்தான் என்று தெரியவில்லை.கதைக்காக படைத்தானா? அல்லது அவனால் இப்படி படைக்கப்பட்ட பிறகு கதை கட்டப்பட்டதா? தெரியவில்லை.

கதை இதுதான்

ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தாம். சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தாராம். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து சிறு புன்னனகையுடன் விநாயகர் பாட்டை ரசித்த அந்த காட்சியை சிற்பி அற்புதமாக வடித்திருக்கிறான்.அவன் விரல் வித்தை காடடியிருக்கிறது.

    இந்தப்பக்கம் வந்தால் போய்பார்த்துவாருங்கள் அந்த அற்புதக் கலைஞனின் கைவண்ணத்தை.



No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே