Thursday, 2 October 2014

ஆணழகு

                           
”சார் உங்களுக்கு ஓவர் வெயிட்.பத்து கிலோ வெயிட்டை குறைக்கோனும்”
டெய்லி வாக்கிங்க் போங்க, முடிஞ்சா ஜாக்கிங்க் கூட போகலாம் புல் அப்ஸ் மாதிரியான எக்சர்சைஸ் செய்யோனும்,

டாக்டர் சொல்லிக்கொண்டே பேடில் நெடும் தொடர் ஏழுதிக்கொண்டிருந்தார்.
”இது நானா வளர்த்த உடம்பில்ல தானா வளர்ந்த உடம்பு சார்”  எனச் சொல்ல வேண்டும் போலிருந்தது.

வளர் இளம் பருவத்தில் நான் என்னை பெரியவனாகவும், மீசைமுளைத்தவனாகவும், பலாக்கிரமம் பொருந்தியவனாகவும் கட்டிக்கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்துள்ளேன். சாம்பாரும் தயிர்சாதமுமே சாப்பிட்டு வளர்ந்த தேகம். தட்டு நிறைய கொட்டிக் கொண்டாலும் வயிற்றைத் தவிர வேறு ஏதும் பெருக்காது. வீட்டிலும் “பிருங்கி மகரிஷி” என்றே பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். பள்ளியில் நண்பர்களுக்கு இடையே நோஞ்சானாகவும் மீசைமுளைகாதவனாகவும் இருப்பது எனக்கு கூச்சத்தைக் கொடுத்தது.என் அத்தை மகன் ”சிவா” எனக்கு சீனியர். நல்ல உடல்வாகு கொண்டவர் .ஃபுட்பால் , கபடி என பல விளையாட்டுகள் விளையாடுவதும் அதைப்பற்றி எங்களிடம் சிலாகிப்பதும் நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பதும் வாடிக்கை.முட்டையை உடைத்து அப்படியே விழுங்கிட்டு கிரவுண்டை ரெண்டு சுற்று சுற்றினால் உடம்பு நன்றாக தேறிவிடும் என அவன் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு விடுமுறை நாளாகப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் நாட்டு முட்டையை ( அது தான் ரொம்ப சத்தாம்) கடையில் வாங்கி கால்சட்டையில் வைத்துக்கொண்டு இருவரும் ஸ்கூல் கிரவுண்டுக்கு போனோம்.
     முட்டையை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் நான் முழித்துக்கொண்டிருந்த போது “ இப்படித்தாண்டா உடைக்கனும் “ என லாவகமாக ஒரு தட்டு தட்டி மூடியை கழற்றுவது போல மேலே சின்ன ஓட்டை செய்துவிட்டான் சிவா.எனக்கும் உடைத்துக் கொடுத்தான். இளநீர் குடிப்பது மாதிரி அண்ணாந்து வாயினுள் கொட்டி ஒரே விழுங்காக விழுங்கினான் . அவன் அசால்டாக ஓட்டை தூக்கி யெறிந்த லாவகம் எனக்குப் பிடித்திருந்தது. அதற்குள் நான் உடைத்த முட்டையை முகர்ந்து பார்த்துவிட்டு குமட்டலின் உச்சத்துக்குப் போயிருந்தேன். உடம்பு தேறவேண்டுமானால் இதெல்லாம் பார்க்கக் கூடாது ஒரே முழுங்காக முழுங்கு என “ஊக்கம்” கொடுத்துக் கொண்டிருந்ெதான்  சிவா.மாத்திரை சாப்பிடும் போது அம்மா சொல்லச்சொல்லுவாள் “ வைத்யோ நாராயணா ஹரிஹி” .மனசுக்குள் சொல்லிக்கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு முட்டையை அண்ணாந்து வாயினுள் ஊற்றினேன்.என் நேரம் துவாரம் சின்னதாக இருந்ததால்  வெள்ளைக்கரு மட்டும் ஒழுகி மஞ்சள் கரு முட்டையிலேயே தங்கி விட சிவா கடிந்து கொண்டான் “மஞ்சக்கரு தாண்டா சத்தே அதை முழுங்குடா” என்றான்,இவனுக்கு யார் இதெல்லாம் சொல்லிக்கொடுத்தது என ஆச்சரியமாக இருந்தது. மேலே தூக்கி உலுக்கினால் லேசில் விழுவேனா என்றது மஞ்சள் கரு. வேகமாக உலுக்க அது எனது வாயின் மேற்பகுதியில் மூக்கிற்கு சற்று கீழே விழுந்து வழுக்கிக்கொண்டே வாயில் விழ ஏற்கனவே இருந்த குமட்டலுடன் இதுவும் சேர்ந்துகொள்ள வயிறுக்குள்ளிருந்து காலையில் சாப்பிட்ட பழையசாதமும் மாவடுவும் எரிமலையாய் குமுறி வெளியேறியது.கூடவே மஞ்சள் கருவும். ”அட போடா வேஸ்ட் பண்ணிட்டயே” என நொந்து கொண்ட சிவா.அத்தோடு விடாமல் வா ஓடலாம் என தயார் ஆனான்.முட்டையின் மணமும் காலைசாப்பிட்ட ஆகாரம் வெளியேறியதும் எனக்கு ஒரு வித தள்ளாமையை கொடுத்திருந்தது ”நீ போயிட்டுவா” என சொல்லிக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன். முட்டை வீச்சம் என் உடம்பெல்லாம் அடித்துக்கொண்டிருந்தது. ஆற்றங்கரைக்கு வந்து நன்றாய் ஒரு முழுக்கு போட்டேன் தண்ணீரில் மூழ்கி மணல் எடுத்து முகமெல்லாம் பூசிக்கொண்டேன் என்ன செய்தாலும் முட்டை வாசம் மட்டும் போகவேயில்லை.அத்தோடு சரி மறுபடியும் அந்த விஷப்பரிட்சையில் இறங்கவேயில்லை.
ஆனால் உடம்பை தேத்தும் ஆசை விடவில்லை. அடுத்தவார விடுமுறையிலும் இந்த விக்ரமாதித்தன் மனம் தளரவில்லை. பள்ளிக்கூடத்தில் பார், புல் அப்ஸ் என கிரவுண்டிலேயே ஒரு பகுதியில் இருக்கும். அதற்கும் சிவாதானே ஹீரோ. உயரமாக இருக்கும் கம்பியை பிடித்துக்கொண்டு புல் அப்ஸ் எடுக்க வேண்டும். சிவா அஞ்சு,ஆறு , ஏழு என எடுத்துக் கொண்டே இருந்தான்.இறங்கியவுடன் என்னை எம்பி மேலே உள்ள கம்பியை பிடிக்கச்சொன்னான்.என் முயற்சியை பார்த்து பாவப்பட்டு ”நான் தூக்கி உடறேன் அப்படியே புடிச்சுண்டு எம்புடா” என்றான். ஏற்றிவிட்ட வாக்கிலேயே தொங்கிக் கொண்டிருந்தேன்.அதிக பட்சமாக காலிரண்டையும் உதைத்துக் கொண்டிருந்தேன் அதற்கு மேல் ஏதும் எழும்பவில்லை.ஓரளவிற்கு மேல் தொங்கமுடியவில்லை. உடம்பிலிருந்து கைகள் இரண்டும் தனியாகப்போய்விடும் போல் இருந்தது.முடிச்சு போட்ட டிரவுசர்,அதனை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த அரைஞான் கயிற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடுமென உணர்ந்த நேரத்தில்.” ஒரே குதி . அவ்வளவுதான்.குதித்தவேகத்தில் கனுக்கால் இரண்டும் கட்டிவைத்து அடித்ததுபோன்ற ஒரு வலி.இது என் வயசுக்கு தகுதியானது அல்ல என ஒரு முடிவுக்கு வந்தேன்.
   அடுத்து இருந்த ஒரே அஸ்திரம் பார்.விடவில்லை அடுத்த வாரம் பார் செய்ய சிவாவுடன் போனேன்.அவன் தானே கோச்.இரண்டு கம்பிகளுக்கு இடையே அவன் ஏகப்பட்ட சாகசங்கள் செய்து காட்டினான்.அவனது இரண்டு பக்க மார்பகங்களும் புடைத்துக்கொண்டு இருந்தன.எனக்கு சட்டையை கழற்றவே கூச்சமாக இருந்தது.அவனைச் சொல்லியும் குற்றமில்லை எனக்கு எப்படியாவது சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இருந்தது. இருந்து என்ன பயன் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? என்னை ஏற்றி விடுவான் ஏற்றிவிட்ட மாதிரியே நிற்பேன்.”முட்டிய வளை,இறங்கு” என கத்துவான் எனக்கு இறங்கினால் அவ்ளவுதான் ஏறமுடியாது. எல்லாம் செய்து முடித்த பிறகு தலைகீழாகத் தொங்குவான் சிவா.அப்படி செய்தால் தான் ரத்தம் தலைக்கு வரும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பான்.நான் பார்கம்பியில் உருப்படியாய் செய்த ஒன்றே ஒன்று உண்டென்றால் அது இப்படி தலைகீழே தொங்குவதுதான்.அது மட்டும் தான் எனக்கு எளிதாய் இருந்தது.கொஞ்சநாள் சிவாவுடன் சென்று வவ்வால் மாதிரி தொங்கிவிட்டு வருவேன்.வந்த உடனே தலைகீழாக தொங்கும் என்னை மற்ற பாடிபில்டர்கள்? வினோதமாக பார்க்கத் துவங்கினார்கள்.இதன் பிறகு நமக்கு இதெலாம் ஒத்துவராது என முடிவுக்கு வந்து நானாக கிரவுண்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.கல்லூரி படித்து முடிக்கும் வரையிலும் பிருங்கியாகவே இருந்து விட்டேன்.பகவான் எதையும் கேட்கும்போது கொடுக்க மாட்டான் போலிருக்கிறது.இப்போது டாக்டர் சொல்கிறார் மறுபடியும் கிரவுண்டு, ஜாக்கிங்……


No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே