Thursday, 24 July 2014

பர்த்தலோமேயு சீகன்பால்க்



308 ஆண்டுகளுக்கு முன்னால் …..1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக்  அவர்கள் உத்தரவின்பேரில் 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக வந்து இறங்கினர்.(ஜீலை 3 ம் தேதிஏ வந்தாலும் கப்பலில் இருந்து தரங்கம் பாடி அழைத்து வர ஆளில்லை) ”புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்” இந்த வார்த்தைகள் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்ததாகக் கருதப்படுகிறது.சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார். தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு இறந்தார்.மெஷினரியாக வந்த இவர் தமிழ் நாட்டில் செய்த பல வேலைகளுக்கு முன்னால் முதல் எனற வார்த்தையை சேர்த்துக்கொள்ள தகுதிஉடையவர. அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவரது சிலை தரங்கம்பாடி கோட்டைக்குப் போகும் வழியில் உள்ளது.அதில் முதன்முதலில் என்று ஆரம்பிக்கும் 24 சம்பவங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.அவற்றுள் சில.
1.முதன் முதலில் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்
2.முதன் முதலாக இந்தியாவில் காகித ஆலையை உருவாக்கியவர்.
3.முதன் முதல் இந்தியா வந்த பிரோட்டஸ்டண்ட் அருள்தொண்டர்.
4.முதன் முதலாக தமிழ் நாட்காட்டியை அச்சிட்டவர்
5.முதன்முதலாக புதிய ஏற்பாட்டை தமிழில் ம்ப்சிபெயர்த்து அச்சிட்டவர்
6.முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்.
7.முதன் முதம் பெண்களுக்கான பள்ளியை துவங்கியவர்
8.முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடத்தை ஆரம்பித்தவர்.
9.முதல் முதல் இலவச மதிய உணவை பள்ளியில் துவக்கியவர்.
10.முதல் முதல் தமிழ் மொழியில் அருளுரை ஆற்றியவர்.
11.முதல் முதல் தமிழ் பொழியில் அகராதியை ஏற்படுத்தியவர்.








Monday, 16 June 2014

செவிசாய்த்த விநாயகர்

           வினாயகர் சிலைகள் எப்போதும் எனக்கு விருப்பமானவை.யானை தலையும், மனித உடலும்,தொப்பை வயிறும்,குட்டியூண்டு எலியும், கொண்ட ஓர் உருவத்தை முதலில் கற்பனை செய்தவன் ரசனையாளன்.புராணப்படங்களில் வரும் பகோடாகாதரின் தலையசைப்புகள் அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்தது.

       சமீப காலமாக பல்வேறு விதமான மார்டன் விநாயகர் சிலை மார்க்கெட்டில் கிடைக்கிறது.கம்ப்யூட்டர் விநாயகர்,பாத் டப் விநாயகர்,சேட்டு விநாயகர், என பிடித்து வைத்தபடியெல்லாம் வரும் அற்புதம் அவர்.அப்படி ஒரு கலெக்ஷனே என்னிடம் இருக்கிறது.

          எங்கள் ஊர் கோவிலில் ( திருமுதுகுன்றம்) கூத்தாடும் வினாயகர் (மாட்டிகிட்டான் , மாட்டிக்கிட்டான், என்று சுந்தரரை பார்த்து ஆடுகிறாராம்)  , மாற்றுறைத்த விநாயகர்(இது ஒரு அப்ரசர் கதை) , பல படிகட்டுகள் இறங்கி தரிசிக்கும் ஆழத்து வினாயகர், சொறி சிரங்கு வந்தால் கூட உடனே சென்று முறையிடும் உரிமை கொண்ட ஆத்தங்கரைப் பிள்ளையார், என சுவாரசியமான பின்னனிக் கதைகள் கொண்ட பிள்ளையார் சிலைகள் உண்டு. பெரியவர்களுடன் கோவிலுக்குச் செல்லும் போது அது பற்றிய சுவாரசியக் கதைகள் எத்தனையோமுறை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளேன்.அது ஒரு விசித்திரமான பயமற்ற உலகத்தை உள்ளுக்குள் விவரிக்கும்.

             சென்றவாரம் திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் சத்தியவாகீசர் கோவிலில் சுவாரசியமான கதைப் பின்னனி கொண்ட ஒரு பிள்ளையார் சிற்பம் காணக் கிடைத்தது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.நம்மையும் அறியாமல் உதடு தானாய் புன்னகைக்கும்.அந்த சிற்பி எதனால் இப்படி படைத்தான் என்று தெரியவில்லை.கதைக்காக படைத்தானா? அல்லது அவனால் இப்படி படைக்கப்பட்ட பிறகு கதை கட்டப்பட்டதா? தெரியவில்லை.

கதை இதுதான்

ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தாம். சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தாராம். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து சிறு புன்னனகையுடன் விநாயகர் பாட்டை ரசித்த அந்த காட்சியை சிற்பி அற்புதமாக வடித்திருக்கிறான்.அவன் விரல் வித்தை காடடியிருக்கிறது.

    இந்தப்பக்கம் வந்தால் போய்பார்த்துவாருங்கள் அந்த அற்புதக் கலைஞனின் கைவண்ணத்தை.



Saturday, 10 May 2014

திருநெடுங்களம்

திருநெடுங்களம் என்பது திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிவஸ்தலம்.சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.பலநூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் என பத்திரிகைகளில் கும்பாபிஷேகத்தின்போது பெட்டி செய்திகள் வந்தது.அப்போதிருந்து செல்லவேண்டும் என்பது ஆசை.சென்றவாரம் தான் வாய்ப்பு கிடைத்தது, திருச்சிக்கு அருகில் என சொல்வதைவிட தஞ்சைக்கு அருகில் என சொல்லலாம்.திருச்சியிலிருந்து டூவீலரில் சென்றால் போகிறது போகிறது ....போய்க்கொண்டே இருக்கிறது.துவாகுடி சென்று அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 4கி.மீ தொலைவில் இருக்கிறது.அங்கங்கு அறிவிப்புப் பலகை வைத்து வழிகாட்டியுள்ளனர்.

இடர்களையும் ஈசன் இவர் என்பதால் பிரார்த்தனை,ப்ரீதி க்கு என மக்கள் இங்கு வந்து போகிறார்கள்.கோவிலுக்கு வெளிப்புறம் ஒருபக்கம் விநாயகர் மறுபக்கம் கருப்பண்ணசாமி இவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர் எனவும் வேண்டும் வரம் தருபவர் எனவும் கூறுகின்றனர்.ஆலயத்தின் எதிரேயுள்ள சுந்தர தீர்த்தக்கரை.கருப்பண்ணசாமிக்கு  ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் முதலிய நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் நாள்பட்ட நோய்களும் குணமாகி நிவாரணம் அளிக்கும் எனச்சொல்கின்றனர்.

சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்ந்திருந்ததால் கோபுரம் பெய்ண்ட் அடிக்கப்பட்டு வண்ணமயமாக மிளிர்கிறது. ஞானசம்பந்தர் இக்கோவில் உறையும் ஈசனைப் பற்றி 10பதிகங்கள் பாடியுள்ளார்.ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவர் பாடிய பத்துப்பதிகத்தில் உள்ள புராணக் காட்சிகள் அனைத்தும் கோபுரத்ஹ்டில் சுதைவடிவில் இருக்கிறது.இவர் பாடியதை வைத்து கோபுரம் கட்டினார்களா அல்லது கோபுரத்தைப் பார்த்து இவர் பாடினாரா என்பது வரலாற்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இக்கோபுரத்தில் உள்ள ஒரு சுதை
இது ஈசனின் வடிவம்.சிவ பெருமானின் வீரத்தினை விளக்கும் எட்டு வடிவங்களில் ஒன்று.ஓவியர் சில்பி அவர்களின் அற்புதமான ஓவியம் ஒன்று உண்டு.திருவண்ணாமலை வடக்கு வாசல் கோபுரத்தின் உள்ளே மேல் விதானத்தில் இந்த சிற்பத்தை காணலாம்.ஆனால் கீழே உள்ள படம் திரு நெடுங்குளம் கோவில் கோபுரத்தில் உள்ளது..போன மாதம் தான் குடமுழுக்கு நடந்துள்ளது.புதிதாக வண்ணம் தீட்டப் பட்டுள்ளது.இதில் ஒரு சந்தேகமும் உள்ளது இதுவரை நான் பார்த்த இதுதொடர்பான ஒவியம்ங்கள் மற்றும் சிலை இவைகளில் ஈசன் காலடியில் யானைத்தலை இருக்கும் யானையின் தோலை உறித்து இரு கைகளாலும் தூக்கி பிடித்தபடி இருப்பார் சிவன்.யானையின் கால்கள் மேல்பக்கம் இரண்டு இருக்கும்.வெளியில் தெரிவது தோலின் உள்பகுதியா? அல்லது வெளிப்பகுதியா? எது நமக்குத் தெரிவது.இதுவரை நான் பார்த்திருந்தது மேல் தோலே (கருப்பு) நமக்குத் தெரியும் இந்தச் சுதையில் யானையின் உள்தோல் (இரத்த நிறத்தில்) அழகாக காட்டப்பட்டுள்ளது.இது அக் காட்சியின் கொடூரத்தை கண்முன்னே கொண்டு வருகிறது.
“வாயே வாழ்த்து கண்டாய் மத யானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்” ( திருநாவுக்கரசர் )
இது தொடர்பாக இரண்டு புராணக்கதைகள் இருப்பது சுவாரசியமானது.http://www.manivasagar.com/art_c_Yanaithoolannal.html

இங்குள்ள ஒரு கல்வெட்டு கல்வெட்டு உள்ள இடம்: சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரம்.

1) ஸ்வஸ்திஸ்ர் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 12ஆவது இத்திருமண்டபஞ் செய்வித்தான் பாண்டி கு
2) லாசநி வ[ள நாட்டு] கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரைய மகந் ஆதித்தந் உலகநான விசையாலய முத்தரை[யன்].
கல்வெட்டுச் செய்தி: சோமாஸ்கந்தர் திருமுன்னுக்கு முன்னாலுள்ள மண்டபத்தை முதலாம் குலோத்துங்கனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் என்பார் எடுப்பித்திருக்கிறார். இவரது தந்தையார் பெயர் அரையன். ஊர் கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி. 

நாங்கள் போனபோது கோபுர வாசலில் ஒரு பெரியவர் காலில் கட்டு போட்டு இருந்தார்.யாசகம் கேட்டார்.கொஞ்சம் பேச்சுக் கொடுத்தவுடன் அவரே கைடாக மாறி கோவிலின் பலபகுதிகளுக்கு அழைத்துச் சென்று சில தகவல் களைச் சொன்னர்.

இந்தக் கோவில் இரண்டு விமானங்கள் இருப்பது ரொம்ப விசேஷம்.
காரணம்சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் பார்வதியும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.  கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது எனக் கூறுகிறார்கள்.அம்பாள் சன்னதியில் விமானம் இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது.














தட்சிணாமூர்த்தி யோகத்தில் இருக்கிறார்.பூணலை தனது முட்டியில் மாட்டியவாறு யோக நிஷ்டையில் இருக்கிறார்.அவ்வளவு அழகான சிற்பம்.நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

இங்குள்ள வராகிக்கு விரளி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், தடை பட்டு வரும் திருமணங்கள் விரைவில் நடக்கின்றன.இந்த உரலை நீங்கள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டும் கலைநுனுக்கத்துடன் செய்யப்படுள்ள கல் உரல்.


இங்குள்ள சிவனுக்கு மாதுளம்பழம் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.திருநெடுங்களநாதருக்கு மாதுளம் பழ முத்துக்களால் நண்பகலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அதுவும் வெள்ளை நிற மாதுளம் பழங்களால் அபிஷேகம் செய்வது பன்மடங்கு பலன்களை பெற்றுத்தரும். திருமணம் நிறைவேறுதல், கணவன்–மனைவி ஒற்றுமை, செல்வ வளம், வீடு, நிலம் வாங்க என யாவற்றிற்கும் மக்கள் இந்த மாதுளம் பழ அபிஷேகத்தால் தீர்வு காண்கிறார்கள் இப்பகுதி மக்கள். அடுத்தமுறை வரும்போது இரண்டு மாதுளம்பழம் வாங்கி வரும்படி பெரியவர் சொன்னார்.

இறைவர் திருப்பெயர் : நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர்.
தேவாரப் பாடல்கள்: சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்

துன்பமின்றி இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ ‘திருநெடுங்களம்’ ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார் என திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் ‘இடர்களையாய் நெடுங்களம் மேயவனே’ என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம். அடுத்தாற்போல் கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகார வலம் வரவேண்டும். அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது.



அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

. 

சுவாரசியமான விஷயம்
பின்பகுதியில் உள்ள மண்டபத்தில் சிதில மடைந்த சிலைகள் சில உள்ளன.அதில் ஒன்று தான் மேலே உள்ள பெருமாள் சிலை.சங்கு சக்கரம் இரண்டுபக்கமும்.சக்கரம் பாதி உடைந்துள்ளது.இது எங்கிருந்து எடுக்கப்பட்ட சிலை என்று தெரியவில்லை.சைவ வைணவப் பூசல்களால் இங்கு வந்ததா எனவும் தெரிய்வில்லை.அழகான சிலை.

இத்தலத்தில் உள்ள வெண்கலக் குதிரையை தூக்கும் ஆண்களையே அந்த காலத்தில் இச்சுற்று வட்டார பெண்கள் தங்கள் கணவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.



மூலஸ்தானத்தை சுற்றிவரும் போது பல கல்வெட்டுக்களை காணமுடிகிறது.







                                                     இரண்டு விமானங்கள்













Monday, 14 April 2014

ஸ்ரீரங்கம் சேர்த்தி 2014




ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி நேற்று. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் தாயாரும் நம்பெருமாளும் சேர்ந்து தாயார் சன்னதி சரணாகதி மண்டபத்தில் சேர்ந்து சேவை சாதிப்பதற்கு சேர்த்தி என்று பெயர்.ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதித்த நிகழ்ச்சி 16ம் தேதி நடந்தது.உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து இருந்த திருக்கோலத்தை 16.4.2014 அன்று இரவு உறையூரில் கண்டு ஆனந்தித்தோம்.அன்றைய தினம் கோவில் வெளிபிரகார மண்டபத்தில் நடைபெறும் மேளக்கச்சேரி அதிஅற்புதமாக இருக்கும்.(ஸ்பீக்கரை கொஞ்சம் குறைக்க வேண்டும்).பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேர்த்தி சேவை நேற்று நடந்தது. அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து ஸ்ரீரெங்கநாதர் தங்க பல்லக்கத்தில் இருந்து புறப்படுவார். சித்திரை வீதிகள், உத்திர வீதிகளில் வலம் வந்து திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு ஸ்ரீ தாயார் சன்னதியை அடைவார்.இதன் பிறகு பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் தான் அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர் நாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சி நடித்து காட்டப்படும். தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே நம்பெருமாள் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள். சமாதானமடைந்த ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதரை மண்டபத்தில் அனுமதிப்பார் . அதன் பிறகு ஏகாந்தம்.பகல் இரண்டு மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை அடைவார். இரவு 10.30 மணி வரை ஸ்ரீதாயாருடன் சேர்த்தி சேவை சாதிக்கிறார்.வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வேண்டுவன கிடைக்கும். திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக இந்த சேர்த்தி வைபவத்தை காணும் பாக்கியம் பெருமாள் அருளால் கிடைத்து வருகிறது.இலவச சேவை, 50.00 ரூ சேவை மற்றும் ரூ.250 கியூ.மாலை 4.00 மணிக்கு நானும் ஜயந்தியும் கியூவில் நின்றோம் ஒருமணிநேரத்தில் சேவையாயிற்று.தாயார் எப்போதும் நம்பெருமாளுடன் சேர்ந்து இருக்கும் நாளில் மிகுந்த பூரிப்புடன் இருப்பார்.வாராவாரம் சனிக்கிழமை சேவிக்கும் தாயாருக்கும் இன்றைய தாயாருக்கும் இருக்கும் வித்தியாசம் உணரமட்டுமே முடியும்.இந்த முறை நெருக்கடி இல்லை.பிடித்துத் தள்ளுவது இல்லை. சேவை முடித்து வசந்த மண்டபம் வழியாக நந்தவனம்...சக்கரத்தாழ்வார் சன்னதி...வழியாக வெளியேறினோம்.நந்த வனப்பகுதியில் சுடச் சுட பானையில் அக்கார அடிசில்....விறகடுப்பு வாசனையுடன் ...ஆளுக்கு ஒரு கப் சாப்பிட்டோம்..

             அக்கார அடிசில் (அக்காரவடிசில்) விற்பனை பானையிலிருந்து


                   நந்தவனப் பகுதியில் பிரசாதத்தை பகிர்ந்து கொள்ளும் குடும்பம்.



அகத்திலிருந்து பறித்துச் சென்ற மனோரஞ்சிதப் பூக்களை நம்பெருமாள் பாதத்தில் பட்டர் சேர்த்தார்.மனமும் கண்களும் நிறைந்தது.உடலில் இளமை யும் தெம்பும் இருக்கும் போதே இவைகளைக் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.

” கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விளராகில் சார்வது சதிரே. ” ((திருவாய்மொழி – 2.10.1) )

ஆனால் முதியவர்கள் எத்தனையோபேர் இந்த வைபவத்தை காண தள்ளாத வயதிலும் வருகிறார்கள் என்பதை காண முடிகிறது.அவரகளை உடன் இருந்து பொறுமையாக அழைத்துச் செல்லும் இளயவர்களை காணும்போது வாயாரவாழ்த்தத் தோன்றுகிறது.நான் பார்த்த ஒரு முதிய தள்ளாத, ஊன்றுகோல் துணையின்றி நடக்க இயலாத ஒரு பாட்டியை 22 வயது மதிக்கத் தக்க பேரன் உடனிருந்து பொறுமையாக அழைத்துச் சென்ற காட்சியை காண முடிந்தது.

                                   தள்ளாத வயதிலும் சேர்த்தி காண வந்த பாட்டி



                        உடனிருந்து பொருமையாக அழைத்துச் செல்லும் பேரன்





Saturday, 5 April 2014

துறையூர் பெருமாள் மலை

துறையூர் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது சித்தப்பா, கு.ப.ரா,தி.ஜா, வல்லிக் கண்ணன், ஆகியோர்தான். நான் முதன் முதலில் சித்தப்பாவுடன் தான் துறையூர் வழியாக முசிறி வந்து கரூர் சென்றேன்.திருலோகசீத்தாராம் அவர்களின் கிராம ஊழியன் பத்திரிகை துறையூரிலிருந்து தான் வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக கு.ப.ரா இருந்துளார், அவருக்கு பிறகு வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்துள்ளார்.சரி அதற்கின்ன என்கிறீர்களா?



துறையூர் பெருமாள் மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி சேவை சாதிக்க அடியேனுக்கு நேற்று வாய்த்தது.துறையூருக்கு அருகில் ( பெரம்பலூர் செல்லும் சாலையில்) இருக்கும் இம்மலையில் பேரழகுடன் கோவில் கொண்டுள்ள பெருமாள்.1554 மலைப் படிக்கட்டுகள்.வாகனங்கள் செல்ல 5 கி.மீ சுற்று வழிப்பாதை . கடந்த 25 வருடங்களுக்கு முன் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த ஒரு கப்பல் வணிகர் தனது சொந்த முயற்சியால் இந்தப் பாதையை அமத்ததாக உடன் வந்த நண்ப சதானந்தன் தெரிவித்தார்.வழி நெடுகிலும் வானரங்கள்.ஆங்காங்கே அவைகளுக்கு பிளாஸ்டிக் டப் பில் உணவு.யார் கொண்டுவைக்கிறார்கள்? கீழே யிருந்து ஓட்டல் காரர்கள், மற்றும் ஓங்காரக்குடில் , போன்ற இடங்களிள் இருந்து தினமும் கொண்டு வந்து வைப்பதாகச் சொன்னார்.இதனால் தான் குரங்குகள் ஊருக்குள் வருவதில்லை எனவும் தெரிவித்தார்.
           மலைமேல் கோவில்.பெருமாள் கிழக்கு நோக்கி இரு நாயகிகளுடனும் சேவை சாதிக்கிறார். தாயாருக்கு ( அலமேலுமங்கா) தனி சன்னதி.தாயார் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.அற்புதமான கட்டமைப்பு.நாயக்கர் கால கட்டடக்கலை மிளிர்கிறது.சிங்கத்தின் முகம் அதன் வாயின் உள்ளே சுழலும் கல் உருண்டை, வெவ்வேறு ஓசை எழுப்பும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்கள் என நாயக்கர் கால டச் தெரிகிறது.
      ஆனால், கோவில் பட்டர் கரிகால் சோழன் கட்டியதாக சொல்கிறார்.கரிகால் சோழன் காலமும் நாயக்கர் காலமும் வெவ்வேறானவை.ஒருவேளை சோழர்கால கற்றளிகளை நாயக்கமன்னர்கள் விரிவு படுத்தியது போல ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம்...எனினும் கரிகால் சோழன்...டூ மச்.
திருப்பதிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்றும் இங்கு பிரார்த்தனை செய்துகொண்டு திருப்பதியில் செலுத்த முடியாது எனவும் பட்டர் கூறினார்.
குறிப்பிட வேண்டிய விஷயம் தாயார் சன்னதிக்கு அருகில் பெருமாள் பாதம் எனும் ஓர் இடம் உள்ளது. அங்கு பெரிய அளவிலான பாத உருவம் உலோகத்தால் வைக்கப்பட்டுள்ளது.அதன் அருகில் ஒரு சிறு அறை போன்ற தொரு தடுப்பு. அங்கு கருப்புசாமி என போர்டு உள்ளது.உள்ளே வெண்கலத்தால் (பித்தளையா?) ஆன மூன்று குதிரைகள், சிறிய ஜான் உயரச் சிலைகள் .ஒன்றில் ஓர் மனிதன் அடுத்தது தனியாக.இவர்தான் கரிகால் சேழன் எனவும் அவன் அருகில் உள்ளது இளைப்பாறும் குதிரை எனவும் பட்டர் சொன்னார் ஒருமுறை கரிகால் சோழன் வேட்டைக்கு வரும்போது இந்த இடத்தில் ஒரு மரத்தடியில் (மரம் செப்பினால் வேயப்பட்டுள்ளது) பெருமாள் பிரச்ச்னமானதாகக் கூறுகிறார்..மேலே உள்ள பெயர்ப்பலகைக்கும் சொல்வதற்கும் தொடர்பு இல்லை.அந்த இடத்தில் சாம்பிராணி புகை போடும் ஒரு சட்டி. வரம் வேண்டுபவர்கள் மூன்று முறை சாம்பிராணியை புகையும் தணல் சட்டியில் போட்டு பிரார்த்தித்துக் கொண்டால் கைமேல் பலனாம்.நமக்குத்தான் நிறைய லிஸ்ட் இருக்கிறதே...நானும் மூன்று முறை சாம்பிராணி போட்டு வேண்டிக் கொண்டேன்.இந்த சாம்பிராணி சாம்பலை விபூதியாக வழங்குகிறார்கள்.
இந்த மலையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.மலையடிவாரத்தில் வயல்களுக்கு இடையே பச்சாயி வீரய்யா கோவில் ஒன்று உள்ளது.பெருமாள் மீது உள்ள அதீத பத்தியால் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரய்யா என்ற விவசாயி நிறைமாத கர்ப்பிணியுடன் மலைமேல் சென்று பெருமாளை நித்தம் வழிபடும் வழக்கம் கொண்டவர்.ஒரு முறை அவ்வாறு செல்லும்போது பச்சாயி நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் (நாமகட்டி) எடுத்துவராமல் வந்ததற்கு கோபமான வீரய்யா அங்கிருந்த மண் உருண்டையை எடுத்து மனைவிமேல் எறிய அவள் அங்கேயே உயிர் துறந்தாளாம்., மனம் வருந்திய வீரய்யா தானும் இறந்து போனாராம்,அவர்கள் சிறு  தெய்வமாக இப்போதும் கோயில் கொண்டுள்ளனர் அடிவாரத்தில்.ஆனால் நான் போன நேரம் அந்தக் கோயில் உள் போக எனக்கு வாய்ப்பு இல்லை.இந்தக் கதை கணவன் மனைவி இடையே கோவம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்துவதாகப் படுகிறது.இது செவிவழிச் செய்தியாக இங்கு உலவுகிறது.பச்சாயி இந்தக் கோவிலில் கையில் குழந்தையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்தமுறை சதா வுடன் இந்தக் கோயிலுக்குப் போய்வரவேண்டும்.

Wednesday, 25 December 2013

நார்த்தாமலை பயணம் 2

அங்கிருந்து இறங்கி மலைக்கோயிலை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
மஸ்தான் தர்காவிலிருந்து மலைக்கோவில் கொஞ்ச தூரம் தான்.இரு மலைகளுக்கிடையேயான நீர் வழ்ந்தோடிய சுவடுகள் தெரிந்தது.மழைபெய்யும்போது அதி வேகத்துடன் நீர் இந்த வழியாக வழிந்தோடும்.அவ்வளவு சரிவு.ஒரு மழைக்காலத்தில் இங்கு வரவேண்டும்.சோ வென்று மழை பொழியும் போது இந்த மஸ்தான் தர்காவிலிருந்து மழையை அனுபவிக்க வெண்டும் என தோன்றியது.

சிறிது தூரம் சரிவான பெரும் பாறையில் ஏறிச் சென்றவுடன் சமதளத்தை அடைகிறது.அங்கு புதரான பகுதிகளுக்கிடையே ஒற்ரையடிப்பாதை செல்கிறது.அதைபிடித்தபடியே சென்றால் சட்டென கண்முன் அழகாய் தோன்றி நிற்கிறது விஜயாலய சோழீஸ்வரம் கோவில்.மஞ்சள் நிற கற்களால் கட்டப்பட்ட கோவில்.தஞ்சை,கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் உள்ளது போல பழுப்பேறிய மஞ்சள் நிற கற்கள். தஞ்சை கோவிலுக்கு இங்கிருந்து தான் கற்கள் சென்றதாக கூறுகிறார்கள்.இங்கிருந்து 60 கி.மீ. தஞ்சை.குறுக்கே ஆறுகள் இல்லை.மலைகள் இல்லை.கற்களை நிறத்தை வைத்துப் பார்க்கும் போது இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
           கட்டுமானம் நன்கு சிதிலம் அடைந்து யாரோ மீண்டும் அடுக்கி வைத்த மாதிரி இருக்கிறது.கலைத்துப்போட்ட சீடுக்கட்டு மனதில் வந்து போனது.இன்னும் சீர்படுத்தப்படாத கற்கள் தூண்கள் ஆங்காங்கே கிடக்கிறது.கோவிலைச் சுற்றி ஆறு மண்டபங்கள்.அனைத்தும் சிதிலத்தின் மிச்சம்.ஒரு வாழ்வு,வரலாறு,கலைந்து கிடப்பது போல தோன்றியது.


ஒரு கல்வெட்டில் இப்படி குறித்துள்ளார்கள்
{"ஸவஸ்தி ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி அரையன் ௭டுப்பித்த கற்றளி
மழை இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின தென்னவன் தமிழதிரையன் புதுக்கு"
இக்கோவில் சாத்தம்பூதி என்ற இளங்கோவதி 
முத்தரையனால்எழுப்பபட்டது எனவும்,மழையால் அழிந்துபட்டு போக, மல்லன்  
விதும்பன் என்னும் 
தென்னவன் தமிழதிரையன் , இந்த கற்றளியைபுதுப்பித்தான் என்றும் 
குறிப்பிட்டுள்ளது.} நன்றி: http://myhistoryuntold.blogspot.in/2013/10/blog-post_19.html


அப்படி எனில் மழைக்காலங்களில் இங்கு நீர்பெறுக்கெடுத்து ஓடி இக்கோவில் கட்டுமானங்களை அவ்வப்போது கலைத்துவிடும் எனத் தெரிகிறது.
            ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு குப்பை கூளங்கள் இல்லை, பிளாஸ்டிக் ,பாட்டில்,இத்யாதிகள் இல்லை,பெருக்கி வைத்த மாதிரி சுத்தமாக இருக்கிறது வளாகம்.புல்வெளி நன்கு பராமரிக்கப் படுகிறது.
விமானங்கள் அறைகுறையாய் இருக்கிறது.உள்ளே சாமிசிலைகள் ஏதும் இல்லை,பிரதானக் கோலிலிலே மடடும் பெரிய சிவலிங்கம் உள்ளது.யாரும் இதற்கு பூசைகள் செய்வதாய் தெரியவில்லை.இங்கு யாரேனும் கண்ணப்பர் வந்தால் தான் உண்டு.நான் சென்ற சமயம் அங்கு எங்களைத்தவிர வேறு யாறும் இல்லை.தனிமை ஒரு அமானுஷ்யத்தை ஏற்படுத்தியது.
  கோவில் மேற்கு பார்த்து இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே நந்தி சிலை நாலு கால் தூண் மேடையில் அழகாய் இருக்கிறது.எனக்கு எப்போதும் நந்தி சிலைகள் மேல் ஆசை அதிகம்.ஒவ்வொரு நந்தியும் ஒவ்வொருவிதமான அழகுடன் இருக்கிறது.எங்கள் ஊர் விருத்த கிரீஸ்வரர் முன் மண்டப பெரிய நந்தி,மூலவருக்கு எதிரே இருக்கும் சிறியநந்தி,பிரமாண்டமான பிரகதீஸ்வரர் நந்தி, கங்கை கொண்ட சோழபுரம் மஞ்சள் நிற நந்தி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுடன் இருக்கிறது.

மதில் வழியாக கோவிலுக்குள் நுழையும் வழி கிழக்கு பார்த்து உள்ளது.மதில்,வாயில் எல்லாம் உதிரியாய் சிதறி இருக்கிறது.



இது ஓரளவிற்கு செப்பனிட்ட நிலை, பல இடங்களில் இக்கால கைங்கர்யங்கள் சிமெண்ட் பூசி மேற்கொள்ளப்படுள்ளது. குறிப்பாக மையமாக உள்ள கோவிலின் விமானம் முழுக்க முழுக்க ரீமேக்.சிமெண்ட் பூசி மொழுகி உள்ளார்கள்.விமானத்தின் மேல் கலசம் போல் ஒரு கல் வைத்திருக்கிறார்கள்.அதுவும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே அடிபாகம் உள்ளடங்கி மேல்பாகம் நீட்டிய ஒரு பெரிய பாறையில் நீள் வாக்கில் செவ்வக அளவில் ஒரு குடைவறை.சமணர்களுடையது என பார்த்த வுடன் சொல்லிவிடலாம்.திருச்சி,திருவெள்ளரை,அரகண்டநல்லூர்,ஆகிய இடங்களில் உள்ளது போன்ற அமைப்பு.இதன் உள்ளே கருவறை காலியாக உள்ளது.வெளி மண்டபத்தில் ஒரே அளவிலான விஷ்ணு சிலைகள் கிழக்கு பார்த்து 10 வடக்கு பார்த்து 1 தெற்கு பார்த்து 1 என 12 சிலைகள் உள்ளது.அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள்.இதனை சமணக் குடகு என்றும் பதினெண்பூமி விண்ணகரம் என்றும் அழைக்கிறார்கள்.இதன் வெளிப்புறம் ஒரு மண்டபம் இருந்ததற்கான பீடம் இருக்கிஆது.அதில் சுற்றி சிறிய அளவில் தொடராக யானை யாளி என சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.வியக்கத்தக்க வகையில் எகிப்திய பாணி சிற்பமான  ஸ்பிங்கஸ் காணப்படுகிறது. காமதேனு வகையில் இருந்தாலும் சிங்கங்களுக்கு இடையே எப்படி பசு? பெண்சிங்கம் என்பதற்கான அடையாளமா?ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டிய விஷயம்.







ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வதென்பது எக்காலத்திலும் இருந்திருக்கிறது.7ம் நூற்றாண்டில் சமண குகையாக இருந்தது பின்னர் வைணவக் கோவிலாக மாற்றப் பட்டிருக்கலாம் என விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை யார் கட்டினார்கள் என்பதற்கான கல்வெட்டு ஏதும் இல்லை.
      இதன் அருகே ஒரு சிறிய அளவிலான குடைவறைக் கோவில் அதில் ஒரு சிவலிங்கம் உள்ளது . இந்த குடைவரைக்குத்தான் பழியிலீச்வரம் என பெயர்.



கல்வெட்டு-855-896
விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தாம் பழீயிலிஇக்கோவிலை கட்டுவித்தான்.இக்கோவின் முன்பு முகமண்டபம்,நந்தி மண்டபம் ,பலிபீடம் ,ஆகியவற்றைகட்டுவித்தான்.பழியிலி சிறிய நங்கை பராமரிக்க கொடையளித்தாள் என்று கூறுகிறது.
ஒன்று மட்டும் தெரிகிறது .அவரவர் காலங்களில் என்னென்ன இறைக்கொள்கைகளை ஆள்பவர்கள் பின்பற்றினார்களோ அதன் பதிவுகளாக நார்த்தாமலையும், கோவில்களும் இருக்கிறது.சமணன் கட்டினானா  அதை மாற்றி விஷ்ணுவை வை.அடுத்த ஒருவன் விஷ்ணுவுக்கு மட்டுமா நாம் சிவனுக்கு குடைவோம் என போட்டி போட்டு வரலாறுகளை கல்லில் பதிவு செய்திருக்கின்றனர்.இதில் ஆச்சரியம் என்ன வெனில் இந்த காலத்திலேயே இவ்வளவு சிரமப் பட்டு போக வேண்டிய இந்த இடத்தை அந்த காலத்தில் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எப்படி குடைந்தார்கள் என்பது தான்.”வரலாறு முக்கியம் அமைச்சரே”- என வடிவேல் படத்தில் சொல்வது மாதிரி ஒவ்வொரு கலத்திலும் ஒரு இரண்டாம் புலிகேசிகள் இருந்துள்ளனர்.
இந்த இடத்தை தாண்டி கொஞ்சம் பாறை மேல் ஏறினால் ஒரு சிறிய சுனை அதில் அல்லி மலர்கள் இருக்கிறது.

 அங்கிருந்து பாறாஇ மீது சற்று ஏறுவோமேயானால் கோவிலை மேலிருந்து கழுகுப்பார்வையில் பார்க்கும் வய்ப்பு கிடைக்கிறது.அற்புதமான காட்சி.



அங்கிருந்து சரிவாக இறங்கினால் ஒரு செங்கல் கட்டிடம் நகரத்தார் கலைப்பாணி.அது ஒரு பிள்ளையார் கோவில்.கோவில் என்பதற்கான எந்த அடையாளமும் ( பிள்ளையார் தவிர) அங்கு இல்லை.






 ஒரு காலத்தில் காவல் காப்பவர்கள் இருக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும்.பின்னர் பிள்ளையாரை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.அல்லது இஸ்லாமியர்களின் இடமாக இருந்திருக்க வேண்டும்.கட்டிடத்தின் மேல் வளைவுகள் இஸ்லாமிய கலை வடிவத்தில் தான் இருக்கிறது.அந்தக் கோவிலின் பின்புறம் ஒரு சுனை.நாரதர் குளம் என்கிறார்கள்.இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளதாகவும் நீர்வற்றும் போது அது வெளியே தெரியும் எனவும் சொல்கிறார்கள்.அப்போது லிங்கத்தின் மீது விபூதி பட்டை பூசுவார்களாம்.அது அடுத்த முறை நீரில் மூழ்கி வெளியில் வரும் போது அப்படியே இருக்குமாம்,

அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கடம்பர் மலை தெரிகிறது.அதன் கீழ்தான் ராஜராஜன் காலத்து சிவன் கோவிலும் கல்வெட்டுக்களும் உள்ளன. ஊருக்குள் நுழையும் போதே அக்கோவில் வலது புறம் மலையடிவாரத்தில் உள்ளது. முதலில் அங்கு செல்வதைவிட தூரத்தில் இருப்பதுவும், ஏற சிரமமாக இருப்பதுவுமான மேல மலைக்கு சென்று விட்டு பிறகு கடம்பர் மலை செல்வது தான் சௌகரியமானது.அடுத்து கடம்பர் மலை .