Sunday, 30 December, 2012

மாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில்நேற்று சனிக்கிழமை ஸ்ரீரங்கம் செல்லமுடியாத நிலை.சாதாரண நாட்களிலேயெ தவறவிட மனம்வராது,.அதுவும் மார்கழி ராப்பத்து காலத்தில் போகமலிருப்பதா என ரொம்ப சஞ்சலமாக இருந்தது.
                           மாமா பையன் ஹரிஅண்ணாவின் சஷ்டிஅப்தபூர்த்தி சென்னையில்.அம்மாவின் செல்லம் அவர்.மாமா பசங்கள் அனைவருமே அம்மாவின் செல்லங்கள் தான்.ஹரிஅண்ணாமீது அம்மாவுக்கு அபாரப் பாசம்.அம்மாவுக்கு யார்மீதுதா
ன்அன்பு  இல்லை?.

மேலும்,காலஓட்டத்தில் ஒரு காலத்திற்குப்பிறகு யோகியைப்போல வாழ்வை அமைத்துக் கொண்டவர் ஹரிஅண்ணா.வாழ்வின் பெரும் பகுதியை ஆன்மீகத்திலும்,பகவத் கைங்கர்யங்களிலும் செலவிட்டுக் கொண்டிருப்பவர்,கண்டிப்பாக அவரது சஷ்டிஅப்த பூர்த்திக்குச் சென்று அவரது ஆசிகளைப் பெறவேண்டும் என நானும் ஜயந்தியும் முடிவுசெய்தோம்.


                       மாமா இப்போது இல்லை.என் வாழ்வின் முக்கியமான திருப்புமுனைக்கு மாமா ஒரு முக்கியக் காரணம்.மாமாவின் போதனைகள் என் வாழ்க்கைப்பாதையை மாற்றிப்போட்டது.அதை போதனை என்கிற மாதிரி கூட சொல்லமாட்டார்.எனது கடமை உனக்குச் சொல்வது கேட்பதும் கேட்காததும் உன் சமர்த்து என்பதாக இருக்கும் பேச்சு.
                                                என் இருபதுகளில் மாமா வீட்டிற்குச் செல்வதும் மாமாவுடன் பல விஷயங்களை விவாதிப்பதும் எனக்கு வாய்த்தது.வயது சிதியாசம் பாராமல் எனக்காக அவர் ஒதுக்கிய நேரங்கள் மணியானவை.அவர் எனக்குச் சொல்வதில் சந்தோஷம் தெரியும்
.மாமாவிற்குப் பின்
அங்கு செல்வதற்கான
சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை….
ஏற்படுத்தப்படவில்லை…
ஏற்படுத்திக்கொள்ளவில்லை....
.எல்லாமும்தான்.
திருமணம்,நல்லது கெட்டது போன்ற தருணங்களில் தான் உறவுகளின் நெருக்கத்தை நாம் வெளிப்படுத்த முடியும்.அன்பு மனதில் தான் இருக்கிறது என்றாலும் ஏதாவாது ஒருவழியில் வெளிப்படுத்தினால் தானே தெரியும்.
             ஹரி அண்ணாவின் சஷ்டி அப்த பூர்த்திக்குச் சென்று அவர் ஆசிர்வாதம் பெற்று வரமுடிவு செய்து நானும் ஜயந்தியும்  கிளம்பினோம்.ரயில் காவிரியை தாண்டும் போது வானுயர்ந்த ராஜகோபுரத்தை பார்த்தபோது,,,ரங்கா..தாயாரே… நாளை உங்களை பார்க்கவரமுடியாது என நினைத்துக் கொண்டேன்.மனத்திற்குள் ஒரு ஏக்கம் இருந்தது.
                        காலை மாம்பலம் கோதண்டராமசாமிகோவில் தெருவில் இருக்கும் மைத்துனன் மோகன் வீட்டிற்குச் செல்லும் போது வழியில் கோதண்ட ராமர் கோயில் தாண்டிதான் சென்றோம்.மோகன் இந்த தெருவிற்கு குடிவந்து சில மாதங்களே ஆகியிருந்தது. இதற்கு முன் சில முறை இந்த தெருவிற்கு வந்திருக்கிறோம்.கோவிலுக்குப் போனதில்லை.சரி சஷ்டிஅப்தபூர்த்தி” கு செல்வதற்குமுன் ஸ்ரீரங்கம் தான் போகவில்லை கோதண்டராமர் சன்னதிக்காவது போய்வரலாம் என நினைத்தேன்.அதன்படியே காலையிலேயே கிளம்பிவிட்டேன்
                    .இரவும் காலையும் மழை.தெரு அலம்பிவிட்டமாதிரி இருந்தது.அந்த தெரு சென்னையில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு நாட்டு ஓடுகள் வேய்ந்த இரண்டுகட்டு வீடுகள் சிலவற்றை அங்கு பார்க்க முடிந்தது.


காவிரிக்கரை ஓரம் அக்கிரஹாரங்கள் எனக்குள் வந்து போயின.கோயிலுக்குள் ஒரு குளம். அனுமன் தீர்த்தம்.அழகான படித்துறை.சில வாத்துக்கள் நீரில் நீந்திக்கொண்டும் சில படிக்கட்டில் நின்றுகொண்டும் இருந்தன.நான் சென்னையில் தான் இருக்கிறேனா?
ஒரு சாதாரண உணர்வுடன் கோயிலுக்குள் சென்ற எனக்கு பேரதிர்ச்சி..முதலில் ஆஞ்சநேயர் சன்னதி.அதன்பிறகு தாயார் சன்னதி.ராமர்கோயிலில் தாயாருக்குத் தனி சன்னதியா?என நினைத்துக் கொண்டெ உள்ளே பார்த்தால்……..ஸ்ரீ ரங்கநாயகித் தாயார்.அந்த நொடிப்பொழுதில் என்னுள் ஏற்பட்ட பரவசத்தை தெரிவிக்க மொழிக்குச் சக்தியில்லை.எதிர் மண்டபத்தில் பாம்பணையில் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதர்.”பச்சைமாமலை போல்மேனி” உதடுகள் தானாக சொல்லிக்கொண்டது. என்னப்பன்…அமுதன்……மதிள்சூழ் அரங்கன்…..சின்ன ரங்கனாக…. வாடாபையா….என்பது போல கிடந்த கோலத்தில்.
இது தற்செயல் நிகழ்வா…பல வருடத்துக் கோவில்…நீண்ட காலமாக ஸ்ரீரங்கநாதர் இங்கிருக்கிறார்….எனக்காக இங்கு வரவில்லை…..ஏன் எனக்குள் எங்களுக்காகவே திவ்யதம்பதிகள் இங்கும் வந்ததாகத் தோன்றியது.இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது.ஒன்றும் விளங்கவில்லை.கொஞ்ச நேரம் ஏதும் புரியவில்லை………………..சரி விஷயத்திற்கு வருவோம்.

.
 தட்சிண பத்ராஜலம்
இதுதான் இக்கோயிலின் பழைய பெயர்.
மாம்பலத்திற்குள் இவ்வளவு பெரிய கோயிலா என அதிசயிக்க வைக்கிறது இக்கோயில்.ஆழ்வார்கள் காலத்தில் இக்கோயில் இருந்திருந்தால் நாலாயிரத்தில் ஒரு ஐநூராவது பாசுரங்கள் கூடியிருக்கும்.
பத்ராச்சலத்தில் உள்ளதைப் போல நின்ற கோலத்தில் அழகுற காட்சி தந்து அருளாசி வழங்கி வருகிறார் ஸ்ரீராமர் மூலவர். பத்ராச்சலம் ஆலயத்தை ராம தாசர் நிறுவியதைப் போல, அவர் வழிவந்த ஆதிநாராயணதாசர் இந்த கோவிலை நிமாணித்தார் என இங்கு சுவரில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
வங்காயல குப்பைய செட்டியாருக்கு வாரிசுகள் ஏதும் இல்லை. எனவே அவருக்கு இருந்த ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள அவரது உறவினர்கள் எண்ணம் கொண்டனர். அதற்கு வங்காயல குப்பையரின் ஆயுளை முடிக்கவும் திட்டம் தீட்டினர்.
அதன்படி அவருக்கு மெல்லக் கொல்லும் நஞ்சினை அவரது உணவில் தினமும் கலந்து வந்தனர். தனது அடியவரின் நிலை கண்டு மனம் இறங்கிய ராமபிரான், அவரது கனவில் வந்து உண்மையை கூறியதுடன், உணவில் கலக்கப்பட்ட நஞ்சினையும் முறித்து வைத்தார்.
மேலும் தனக்கு பெரிய அளவில் ஆலயம் எழுப்பும்படியும் வங்காயல குப்பையரை   கேட்டுக்கொண்டார். ராமபிரானின் செய்கையால், அந்த அடியார் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தார்.
மறுநாள் காலையில் செட்டியார் திருக்கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயில் நிர்வாகி .வே.தேனுவ குப்தா வெங்கட ரங்கையா அரிதாஸர் என்பவர் நமது கோயிலைப் பெரிதாகக் கட்ட நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
திரு. செட்டியார் நடந்த ஸம்பவங்களை நிர்வாகி. திரு. ரங்கையாவிடம் தெரிவித்தார். நிர்வாகி மிகவும் மகிழ்ந்து ஏற்கனவேயுள்ள சிறிய திருக்கோயில் ஆகம விதிப்படி இல்லை. எனவே கட்டப்பட இருக்கிற பெரிய கோயில் ஆகம விதிப்படி கட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ரூ.4000த்தையும், கோயிலிலிருந்த பழைய பொருட்களை விற்றதில் வந்த ரூ.1000த்தையும் செட்டியாரிடம் கொடுத்தார்
அதைக்கொண்டு இ
ந்த ஆலயத்தை நிர்வகித்து வந்த வெங்கட்ரங்கையா அரிதாசர் என்பவருடன் இணைந்து 1926ம் வருடம் ஜூன் 23ம் தேதி ஆரம்பித்து ஜூலை 26ம் தேதி அஸ்திவாரம் போட்டு 1927ம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் தேதி பூர்த்தி செய்துள்ளனர்.
இந்த மஹா சம்ப்ரோக்ஷண சமயத்தில் திருநீர்மலை.ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி இருந்திருக்கிறார்.

 இந்த தகவல் கோவில் பிரகாரத்தில் எழுதப் பட்டுள்ளது.இதில் “முந்தைய காலத்தில் இவ்விடம் ”மாம்பிலம்” (பெரும் குகை) என அழைக்கப் பாட்டதாக எழுதியுள்ளனர்.(குப்பைய செட்டித்தெருவை பலமுறை கடந்து போயிருக்கிறேன் அவர் இப்படிப்பட்ட தர்மவான் என இன்றுதான் தெரிந்துகொண்டேன்.)
கிழக்குப் பார்த்த கோவில்.
ராஜ கோபுரம் கிடையாது
நின்ற,கிடந்த,அமர்ந்த திருக்கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
நின்றகோலம் :ஸ்ரீராமர்
ப்ரதான சன்னதியில் உறைபவர் சக்கரவர்த்தித் திருமகனாகிய கோதண்டராமரே. வலதுபுறம் ஸீதாப்பிராட்டியுடனும், இடப்புறம் லக்ஷ்மணருடனும் நின்ற திருக்கோலத்தில் அவர் காட்சி. இந்த மூலவருக்கு முன்புறம் சிறிய சிறிய அளவில் பட்டாபிராமர் பத்ராசலத்தில் மஹான் ராமதாஸருக்குக் காட்சி அளித்த கோலத்திலேயே எழுந்தருளி இருக்கிறார். மடியில் ஸீதையை அமர்த்திக் கொண்டு, லக்ஷ்மணன் பரதன், சத்துருக்கனனுடன் ஸேவை ஸாதிப்பது கண்கொள்ளாக் காட்சி.திருவடியினை அனுமன் தாங்கியவண்ணம் உள்ளார். இதைவைத்தே இக்கோவிலை ''தட்சிண பத்ராசலம் '' என்று அழைத்து வந்துள்ளனர்.
கிடந்த கோலம்:ஸ்ரீரங்கநாதன்
ஸ்ரீரங்கநாதர் சிறிய பாலசயனராக பள்ளி கொண்டு நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.
அமர்ந்த கோலம்:ஸ்ரீயோகநரசிம்மர்
தாயாருக்கு தனி சன்னதி.சீதா பிராட்டிக்கு அல்ல ரங்கநாயகித் தாயார்.
 ஆஞ்சநேயர்க்கு தனி சன்னதி.ஸ்ரீராமர் சன்னதிக்கு நேர் எதிரில் உல்ளது.சஞ்சீவி மலையைக் தூக்கிக் கொண்டு வடக்கு நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டு ஸேவை ஸாதிக்கும் ஆஞ்சனேயர்.இவர் குபேர மூலையை பார்த்துக் கொண்டிருப்பதால் ரொம்ப விசேஷமானவராம்.
இதர சன்னதிகள்
ஆண்டாள்
சேனை முதல்வர்,

கருடாழ்வார்,
நம்மாழ்வார்,
. '' மன்னுபுகழ்க் கௌசலை (இராமன் தாய்) தன் மணிவயிறு
வாய்த்தவனே! என்னுடைய இன்னமுதே! இராகவனே
             தாலேலோ’ '' என்று ராமபிரானுக்கு தாலாட்டு பாடிய குலசேகர ஆழ்வார்க்கு தனி சன்னதி.
திருமங்கை யாழ்வார்,
ஸ்ரீராமானுஜர்,மணவாள மாமுனிகள் இருவருக்கும் சேர்ந்து ஒரே சன்னதி.
அனுமந்தீர்த்தம் எனும் குளம் நேர்த்தியான படிக்கட்டுகளுடன் அமைக்கப் பட்டுள்ளது.வாத்துகள் நீந்திய படி இருக்கின்றன.
ரோஜா பூக்களுடன் திருத்துழாயும் வாசலில் விற்பனைக்கு உள்ளது.10ரூபாய்க்கு கைநிறைய பூக்கள் தருகிறார்கள்.உற்சவருக்கு தான் தீபாராதனை காட்டுகிறார்கள்.வைணவக் கோயில்களில் சேவையின் போது பட்டர், ஸ்வாமியை குறித்து விளக்கமாக சேவை சாதிப்பது வழக்கம்.நாங்கள் போனபோது பட்டருக்கு மூடு ஆவுட் போலிருக்கிறது.மூலவரின் பெரிய சிலைக்கு கீழே உள்ள ஸ்ரீராமர் பட்டாபிஷேக சிறிய சிற்பத்தில் ஸ்ரீராமருக்கு இடப்புறம் குடையுடன் நிற்பது யார் எனக் கேட்டேன்.”கம்பராமாயனத்தில் பரதன் வெண்குடை கவிக்க” என வருவதால் பரதனாக இருக்குமோ என எனக்கு ஐயம்.பட்டர் சற்று உரக்க அது இளையபெருமாள் லக்ஷ்மணன் ”வெளியில படம் வரஞ்சு இருக்கா அதை பாத்துட்டு வாங்கோ அங்க விளக்கமா எழுதிவெச்சுருக்கா” என்றார்.அதை நான் படித்து தெரிந்துகொள்ள இங்கு நீர் எதற்கு? என்று கேட்க வாய்வரை வந்ததை நிறுத்திக் கொண்டேன்.
இந்த கோவில் தென்கலை சம்பிரதாயம்
வைணவக் கோயில்களில் வைகானசம், பாஞ்சராத்திரம்
ஆகிய இருவகையான ஆகம நெறிகளும் பின்பற்றப்பட்டு
வருகின்றன இந்த கோயிலில் வைகானச முறை.
பரமபதவாசல் வலது மதில் சுவர் ஓரம் தனியே உள்ளது.
கோயிலுக்கு பின் பகுதியில் நந்தவனம் உள்ளது.அருமையான கோயில்.கோயிலை விட்டு வெளியே வந்ததும் நுகரும் கார்..ஆட்டோ…பெட்ரோல் டீசல் புகை வாசம் தான் நாம் சென்னையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது.
(பி-கு)
கோயில் வாசலில் சற்று தள்ளி எதிரே கையேந்திவிலாஸ் இருக்கிறது.அந்த காலை வேலையிலேயெ ஆவி பரக்க இட்லி,வடகறி,சாம்பார்வடை..கல்தோசை என சுட சுட கிடைக்கிறது.அடுத்தமுறை போனால் பெருமாள் சேவையுடன் கையேந்திவிலாஸ் சேவையும் செய்தாக வேண்டும்.


Sunday, 23 December, 2012

மற்றை நம் காமங்கள்


ஒவ்வொரு வருஷமும் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் செல்லும் போது செல்வரப்பமும்,சம்பாரதோசையும்,சுவைக்காமல் விடுவதில்லை என்ற கங்கணத்துடன் இருக்கிறேன்.

மூலவர் முத்தங்கி சேவை சில வருடம் வாய்ப்பதுண்டு.250 ரூ கியூவே ரெண்டு வரிசை நீண்டிருக்கும்.கியூமுழுதும் கருப்பும் சிவப்புமாக அய்யப்ப பக்தர்கள்.என்ன விலை கொடுத்தாவது தாங்கள் பர்த்த லிஸ்ட்டில் ரெங்கனை கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் வரிசையில் காத்திருப்பார்கள்.ம்...நானும் மலைத்துக் கொண்டே பகல்பத்து மண்டபத்தில் நம்பெருமாளை சேவித்துவிட்டு...அரையரின் குரலை காதை தீட்டிக் கொண்டு கொஞ்சம் கேட்டுவிட்டு,(ஜிங் சாங் சத்தம் தான் கேட்கும் ஒரு வார்த்தை கூட புரியாதுஎனக்கே இப்படி இனில் ஸ்ரீரங்கத்து வயதான மாமிகளுக்கு என்ன காதில் விழுதுவிடப் போகிறதுஆனாலும் அசாத்திய பொருமையுடன் நம்பெருமாளை சேவித்த வண்ணமே இருப்பர்.)

.சென்றமுறை பெருமாள் பூச்சாத்தலின் போது கைநிறைய மனோரஞ்சித பூ கொண்டுவந்திருந்தாள் பார்யாள்.ஆனால் பூவை வாங்கிக் கொள்ளும் சாத்தாதார் தொடுத்திருந்தால் தான் வாங்கிக் கொள்வோம் என சொல்லிவிட்டார்.இன்றும் கோவிலுக்குக் கிளம்பும் போது வீட்டில் பூத்த மனோரஞ்சிதம் மூன்று பெரிய பூக்களை பரித்து கையில் எடுத்துக் கொண்டாள்.அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள்,ராஜா.ரங்கராஜா……இரண்டு பக்கமும் வரிசையில் வந்து எட்டடி தூரத்திலிருந்து பெருமாளை சேவிக்கலாம்.அபயஹஸ்தம் ஜொலித்தது.ஒரு பட்டாச்சாரியார் அருகில் வந்தார் மனைவியிடமிருந்து பூக்களை வாங்கி அவர் கையில் கொடுத்தேன்.அதை எடுத்துக் கொண்டு நம்பெருமாள் அருகில் இருக்கும் இன்னொரு பட்டரிடம் கொண்டு கொடுத்தார்.அந்த பட்டரோ பூக்களை வலது கையில் வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டு இடது கையை மார்பை ஒட்டி பிடித்துக் கொண்டு வலது கையால் ஒவ்வொரு பூவையும் நம்பெருமாள் கை,மார்பு,தலை என பவ்யமாக வைத்தார்….மனைவிக்கு கண்ணில் நீர் திரண்டது.நீங்கள் பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமாள் எட்டு அடி உன்னை நோக்கி வருவார் என்ற திருவெள்ளரை கோவில் பட்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.மனம் நிறைந்தது.நம்பெருமாளைச் சுற்றி வந்து எதிரே இருந்த ஆச்சார்யர்,ஆழ்வார்களை சேவித்தோம்

சக்கரத்து ஆழ்வார்,தாயார் சேவைமுடித்து பிரசாத ஸ்டால் பின்புறம் உள்ள மண்டபத்தில்  கம்பி கிரில் கேட்டுக்கு பின்புறம் நம் அயிட்டம் தான்,அவசர அடி புளியோதரை இந்த காலத்தில் சாப்பிடுவதை தவித்துவிடுவது நல்லது.கலந்ததும் கலக்காததுமாய் உருண்டையும் கட்டியுமாக புளியோதரை முறைத்துக் கொண்டிருக்கும்எலுமிச்சம் பழ சீசன் அதனால் தோசைக்கான ஊறுகாயில் தளர் முழித்துக் கொண்டிருக்கும்.வடை பல்வேறு வர்ணஜாலங்களில் போட்டு எடுப்பவரின் ஜோலியை பொருத்து சிவப்பாகவும்,கருப்பாகவும்,பொன் நிறத்திலும் ஜொலிக்கும்.எப்போதும் சூடாக இருக்கும்.பெரிய கோபுரத்திற்கு பிறகு உளுந்து தோலுடன் கூடிய வடையும் இங்கு விசேஷம்.நிற்க என்ன விசேஷமாக இருந்தாலும் டயாபிடிஸ் காரனுக்கு டயட் முக்கியம் என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு மதிப்பளித்து’”மற்றை நம் காமங்கள் மாற்றேலேரோ ரெம்பாவாய் “ என மனதிற்குள் வேண்டிக் கொண்டு ( என்ன இல்லையோ அதைத் தானே கேட்கமுடியும்) வீடு வந்து சேர்ந்தோம்.

Tuesday, 24 April, 2012

திருவெள்ளறை

பிரதி வாரம் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் போவதும் பெரும்பாலும் தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதி பார்ப்பதும் வழக்கம்.தாயார் சன்னதி பிரகாரம் சுற்றி வரும் இடத்தில் வில்வ மரத்திற்குச் சற்று முன்னதாக ஒரு தூணில் மண்டபம் கட்டி விளக்கு பொருத்தப் பட்டிருக்கும்.குனிந்து பார்த்தால் புண்டரிகாஷன்.மாமிகள் மிக உருக்கமாக வேண்டிக் கொண்டிருப்பார்கள்.எக்ஸாம் சமயம் குழந்தைகள் மிகுந்த சிரத்தையுடன் பிரார்த்தனை செய்வார்கள்.

எனக்கும் சென்றமாதம் ஒரு பிரச்சனை.எனக்குள் யாதுமாகி வியாபித்து என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது அந்த பிரச்சனை.( என்ன என்று கேட்காதீர்கள்) .அச் சமயம் ஒரு சனிக்கிழமை தாயார் சன்னதி சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு பாட்டி இன்னொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.” ரெண்டு கையையும் பெருமாள் முன்னாடி பதிய வெச்சுக்கோ. மனசார வேண்டிக்கோ...நிச்சயம் நடக்கும்” - என்றாள் .ஒரு வேளை தாயார் தான் எனக்காக சொல்கிறாளோ? எனத் தோன்றியது.ஒரு நிமிடம் தயங்கினேன். 

முடிவு பெறாத ராஜ கோபுரம்


உள் கோபுரம் (சிதிலம்)


பி.சி.ஸ்ரீராம் ஸ்டைலில் எடுத்துப் பார்த்தேன்இங்கு தான் திரு மஞ்சனம்


உத்தராயண வாசல்


நெய்தீபம் போடும் இடம்


நோ கமெண்ட்ஸ்


சாப்பிட்ட இடம்


சுனை குளம்


 என்ன ஒரு செய் நேர்த்திஸ்வஸ்திக் குளம்

நீள் மதில்
மீண்டும் நடந்தேன்.வில்வமரத்தினை சுற்றி விட்டு அமர்வதற்கு முன் மீண்டும் மனதில் ஒலித்தது “ மனசார வேண்டிக்கோ நிச்சயம் நடக்கும்”.அந்த பாட்டியும் உடன் வந்த பெண்ணும் வில்வமரத்தடிக்கு வந்திருந்தார்கள்.நான் ”புண்டரிகாஷன்” இருக்கும் தூணிற்கு வந்தேன்.குனிந்து பெருமாளை பார்த்தேன்.விளக்கொளியில் பெருமாள் சிரித்தார்.அந்த பாட்டி சொன்ன மாதிரி ரெண்டு கைகளையும் பதிய வைத்தேன் கண்ணை மூடினேன்......கண்ணா.....பெருமாளே..........உடம்பு உதறியது...கண்ணீர் பெருகியது.

19.04.12 அன்று திருவெள்ளறையில் திருமஞ்சனம்.நானும் உபயம்.நானும் ஜெயந்தியும் கலந்து கொண்டோம்.த்ருமஞ்சணம் மூலவருக்கு செய்யப்படுவதில்லை. வெளியே 9 அடி மேடையில் உள்ள பலிபீடத்திற்கு தான் அபிஷேகம் சாரி.... திருமஞ்சனம்.தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி,பார்த்த  பிறாகு மூலவர் தரிசனம்.மூலவர் புண்டரீகாட்சப் பெருமாள்.மேலே வலப்பக்கம் சூரியன் இடப்பக்கம் சந்திரன் கீழே வலப்பக்கம் கருடாழ்வார் இடப்பக்கம் ஆதிசேஷன் நின்றாகோலம், நடுவில் பெருமாள் நின்றகோலம்.

வலப்பக்கம் கால்மாட்டில் தவக்கோலத்தில் மார்கண்டேயன்,இடப்புறம் பூமாதேவி தபஸ்கோலத்தில்.இங்கு மார்கண்டேயனுக்கும்,பூமாதேவிக்கும் பெருமாள் பிரத்யக்‌ஷம்.பட்டர் மிகுந்த சிரத்தையுடனும் பொறுமையுடனும் சேவை சாதித்தார்கள். ஜடாரியை சற்று விலகி நின்று வாங்கினேன்,,, அருகிலிருந்த ஒருவர் சொன்னார் கிட்டக்க வாங்கோ ...நீங்க பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமாள் ரெண்டு அடி உங்களை நோக்கி எடுத்து வைப்பார் என்றார்.எனக்காகவே பெருமாள் சொன்ன மாதிரி இருந்தது.

 இரு வாசல்கள் உத்தராயணம் தட்சிணாயனம்.நீண்ட மதில் சுவர். கோயிலுக்கு உள்ளேயே சுனை போன்ற குளம்.அங்கிருந்துதான் அபிஷேகத்திற்கு ஜலம்.திருமஞ்சனம் முடிந்து நெய் விளக்கு போட வேண்டும்.திருமஞ்சனம் முடிந்த பிறகு கற்பூற ஆரத்தி. ”தொட்டுக் கறவால்லாம் தொட்டுக்கலாம்”- என்பார் பட்டர். கற்பூறம் ஒற்றிக் கொள்வது வைஷ்ணவ வழக்கம் இல்லை.மடப்பள்ளியில் பிரசாதம் , அக்கார அடிசல், புளியோதரை,வெண்பொங்கல், தயிர்சாதம்,பஞ்சாமிர்தம்,ஒரு கூட்டு( காரம்). கோவிலின் பின் பக்கம் ஒரு குளம் உள்ளது ஸ்வஸ்திக் வடிவில் இருக்கிறது.ஒரு பக்கம் படியில் குளிப்பவர் அடுத்த பக்கம் தெரிய மாட்டார்.(தண்ணீர் நிறைய இருக்கும் போது)  தொல்லியல் துறையின் கீழி உள்ளது.விழியில் நுங்கு, இளநீர் சாப்பிட்டு விட்டுவீடு திரும்பினோம்.

செங்கமலக் கண்ணன் என் வேண்டுதலை நிறைவேற்றி யதற்கு என்ன கைமாறு செய்ய?


மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 71, 192-201,
திருமங்கையாழ்வார் - 1368-77, 1851, 2673 (70) 2674 (117)
மொததம் 24 பாசுரங்கள்

தல வரலாறுக்கு இங்கு செல்லவும்:http://temple.dinamalar.com/New.php?id=182