Saturday 24 December, 2011

மார்கழி அமாவாசை



காவிரி பாலத்திலிருந்து

இன்று மார்கழி அமாவாசை.அம்மா
மண்டபம் காவிரி படித்துறையில் தர்ப்பணம் செய்ய உத்தேசித்தேன்,.கடந்த 7 நாட்களாக ஸ்ரீரங்கம் கோரத மூலையில் திரு.வேளுகுடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் காலை மாலை இரு வேளையும் நடந்து வருகிறது. மாலை ”ஆழ்வார்கள் அனுபவித்த அரங்கன்” நேரம் 7.00 முதல் 8.30.காலை ”திருப்பாவை”.விடியற்காலம் பனியில் வண்டி ஓட்டுவதும்    எதிர்பனியை அனுபவிப்பதும் இன்னும் சலிக்கவில்லை.காவிரியை பாலத்திலிருந்து பார்க்கையில் வளைந்து ஓடும் ஆறும் போர்வை போத்திய பனியும் அழகு.

 பனியை சுமக்கும் காவிரி
அம்மா மண்டபம் படித்துறையில் கால் முழங்கால் அளவு நீர்.நல்ல ஓட்டம்.ஸ்நானத்தை போட்டு விட்டு, அப்பா,தாத்தா,முத்தாத்தா என அவனைவருக்கும் எள்ளும் தண்ணீரும் விட்டு விட்டு நேரே முரளி காபி வந்து ஒரு ஸ்ருதி சுத்தமான காபி குடித்தேன்.
 முரளி காபி  தேர்ந்த செய் நேர்த்தியாளர்.அவரிடம் “சக்கரை தூக்கலாக” “ஸ்டிராங்கா” “அரை சக்கரை” ”கொஞ்சமா” என அதிகப்பிரசங்கியாக  டீக்கடையில் சொல்வது போல் சொல்லக் கூடாது.சொதப்பிவிடும்.அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டால் ஒரு சூப்பர் காபி கிடைக்கும்.(ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில்). காபி குடித்து விட்டு பாதாள கிருஷ்ணன் தாண்டி வலப்புறம் திரும்பி கோரத மூலையை நோக்கிய பயணம். இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக மாமா மாமிகள், வந்தவர்கள் மேடையில் இருக்கும் திவ்ய தம்பதிகளை(திவ்யதம்பதிகள்,திருவாராதணம்,அருளிச்செயல்,இப்படி வைஷ்ணவ வார்த்தைகளுக்கே தனி நிகண்டு வேண்டும்) நோக்கி ஒரு நம்ஸ்காரத்தை போட்டு விட்டு இருக்கையில் \அமர்ந்தனர்.சிறிது நேரத்தில் வேளுகுடி காரில் வந்தார்.பவ்யமாக மேடைநோக்கி வந்தவர் மேடைக்கு கீழே நின்று தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து மார்பை மூடியவாறு இறுக கட்டிக்கொண்டு மேடை ஏறினார்.ஆரம்பித்தார் இன்று,விட்ட 7 மற்றும் தொடரும்  8 ம் பாடல். ராமானுஜரின் ஆறு கட்டளைகளுடன் தொடர்பு படுத்தி அழகான பேச்சு.







 உபன்யாசம் நடக்கும் கோரத மூலை கொட்டகை

 உபன்யாசம் முடித்து சாத்வீகமாய் செல்லும் வேளுகுடி(தூரத்தில்)
                         
                     
                                        
                       

ஸ்ரீ இராமானுஜரின் ஆறு கட்டளைகள்

  1. ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை.(கீசு கீசென்றெங்கும்)
  2. அருளிச்செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை.(கல்ந்து பேசின)
  3. உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை.( நாராயணனன் மூர்த்தி)
  4. த்வயத்தை அர்தாநுஸந்தாநம் பண்ணிப் போருகை.(தயிரரவம்)
  5. என்னுடையவன் என்று அபிமாநிப்பான் யாவனொரு பரமபாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை.(கேசவனைப்பாடவும்)
  6. திருநாராயணபுரத்திலே ஒரு குடில் கட்டிக்கொண்டு இருக்கை.(திறவேலோரெம்பாவாய்)
முடித்து தாயார் சன்னதி , சக்கரத்தாழ்வார் சேவை முடித்து வரும்போது  ஆண்டார்வீதி மதுராகபே யில் உணவு முடித்து வீடு வந்து சேர்ந்தேன்.இன்றைய பொழுது நல்ல பொழுது.
பி.கு

ஸ்ரீவைஷ்ணவத்தில் ரஹஸ்யங்கள் மொத்தம் மூன்று. அஷ்டாக்ஷரம் என்னும்
திருவெட்டெழுத்து, த்வயம் என்னும் மந்திரரத்னம், சரம ச்லோகம் என்னும் பகவத்
கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் ச்லோகம் ஒன்று. 

தத்வங்கள் மொத்தம் மூன்று. சித், அசித், ஈச்வரன். 
சித் -- அறிவுசால், அறிவுருவான, அணுவான உயிரிகள். 
அசித் -- அறிவு சாலாத சடப்பொருள்கள் 
ஈசவரன் -- பேரறிவு சான்ற, பேரறிவே உருவான, சித், அசித் ஆகியவைகளைத் தன்னுள்
உள்ளட்க்கிய, விபுவான, பிரபஞ்ச மகா நித்திய உயிர்த் தத்துவம். 
மூன்று தத்வங்களுக்குப் பெயர் தத்வ த்ரயம். 

ரஹஸ்யங்கள் மூன்றுக்குப் பெயர் ரஹஸ்ய த்ரயம். (நன்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Wednesday 14 December, 2011

பாஞ்சஜன்யம்

ஸ்ரீரங்கத்திலிருந்து வெளிவருவது பாஞ்சஜன்யம் மாத இதழ்.ஸ்ரீவைஷ்னவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சார்யர் அவர்களால் நடத்தப்பட்டு வருவது.இலக்கியம் வரலாறு கல்வெட்டுடன்,ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கோட்பாடுகள் மற்றும் மரபு மீறல்களைக் கண்டித்து எழுதப்படும் கட்டுரைகளைக் கொண்ட மாத இதழ்.இதற்கு நான் கடந்த 3 வருடங்களாக சந்தாதாரராக இருக்கிறேன்.தற்போது இம்மாத இதழுக்கு கூடுதல் சந்தாதாரர்கள் தேவை.அதைபற்றி நான் கூறுவதைவிட ஆசிரியரின் கடிதம் இத்துடன் வெளியிடப்படுகிறது.கோயிலொழுகு போன்ற சிறப்புமிக்க ஆவணங்களை புத்தகமாக்கிய புனிதர் இவர்.படியுங்கள் .முடிந்தால் சந்தா அனுப்புங்கள்.

வருட சந்தா ரூ 150
ஆண்டு சந்தா ரூ 1500
தனிப்பிரதி ரூ 15
முகவரி: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ
214  கீழை உத்தர வீதி
ஸ்ரீரங்கம்
0431-2434398
www.Srivaishnavasri.com
மாதிரி புத்தகத்திற்கு
http://srivaishnavasri.files.wordpress.com/2011/09/pancha-100-pages-oct-2011-issue.pdf






Thursday 8 December, 2011

கற்பூர படியேற்ற சேவை

நேற்று காலை 5.45 க்கு நம்பெருமாளின் கற்பூர படியேற்ற சேவை கண்டேன்.நீலக் குல்லாயுடன் நம்பெருமாள் படியேறும் காட்சி காணக் கிடைத்தது.பெருமாளின் முகம் காணமுடியவில்லை.நான் உள்ளே செல்லும் போது பெருமாள் படியை நோக்கி இருந்தார்.எனவே பக்க வாட்டில் தான் பார்க்க முடிந்தது.இருந்தும் படியேறும் அழகும் கற்பூரப் பொடி தூவும் தருணமும் காணக் கிடத்தது பாக்கியம்.ஸ்ரீரங்கம் மாமிகள் முன்னமே வந்திருந்து படிக்கு நேர் எதிரே இருந்த மேடையில் நின்று கொண்டு நம்பெருமாளை கண்குளிரக் கண்டனர்.எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.information is wealth என்பது எவ்வளவு உண்மை.எனக்குப் பின்னால் கோதை இருந்தாள்.
சேவிசேளா...”
ம் முன் பக்கம் பார்க்க முடியலை”
நான் இப்போதான் வந்தேன் நான் வருவதற்குள் படியேற்ற சேவை முட்ந்து விட்டது” என்றாள்.வெளியே வந்து முரளி காபியில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அகம் வந்தேன்.முரளி காபி பற்றி தனி பதிவு இட வேண்டும்.ஸ்ரீரங்கம் செல்பவர்கள் முரளி காபி சாப்பிடாமல் வராதீர்கள்.” எனக்கு காபி ,,டீ..எதுவும் பிடிக்காது” என்பவர்களுக்கு நான் சொல்வது ஒருமுறை முரளி காபியை சாப்பிட்ட பிறகு சொல்லுங்கள் என்பது தான்.அந்த காலை நேரத்திலேயே அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் என ஏக கூட்டம். நேற்றைய கைசிக புராணம் பெருமாளிடம் படித்து விட்டு பட்டர் ஆரியபடாள் வாசல் முன் அமர்ந்திருந்தார்.சென்ற வருடத்திலிருந்து பிரம்ம ரத மரியாதை நிறுத்தப் பட்டுள்ளது.இந்த வருடம் உண்டா என்று தெரிய வில்லை.அரசும் கோர்ட்டும் ஆலயத்துக்குள் தலியிடாமல் இருப்பது தான் நல்லது எனத் தோன்றுகிறது.

சரி....
கற்பூர படியேற்ற சேவை என்றால் என்ன?



Sunday 4 December, 2011

கைசிக ஏகாதசி



ஸ்ரீ நம்பெருமாள் கைசிக ஏகாதசி திருநாளையொட்டி, டிசம்பர் 6-ம் தேதி 2 புறப்பாடுகள் நடைபெறும். ஸ்ரீ நம்பெருமாள் காலை 10 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். 2-ம் புறப்பாட்டில் அன்று இரவு 8.30 மணிக்கு கருவறையிலிருந்து புறப்படும் ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தை அடைகிறார்.

அங்கு ஸ்ரீ நம்பெருமாளுக்கு 365 வஸ்திரம் சமர்ப்பித்தலும் தீபாராதனையும் நடைபெறுகிறது. அப்போது, அரையர் சேவையுடன் ஸ்ரீபட்டர் சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தலும் நடைபெறும். பூஜா காலம் புறப்பாடு காலை 7.15 மணி முதல் 10 மணி வரை. பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை. இலவச சேவை பகல் 10 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை. டிச. 6-ம் தேதி மாலை 5-30 மணி முதல் டிச. 7-ம் தேதி காலை 10 மணி வரை கருவறை சேவை கிடையாது. மற்ற சன்னதிகளில் இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது'


கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.

ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.

கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டிக்கு நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன் ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான்.

இன்றும் இந்த நிகழ்ச்சி கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நடித்துக் காட்டப் படுகிறது.

கைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 360 “பச்சை” எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.

அப்போது கைங்கர்ய பரர்கள் திருவடி விளக்குவதேல்? அடைக்காய் அமுது நீட்டுவதேல்? திருவிளக்கு தூண்டுவதேல்? என்று கூறிக்கொண்டு பச்சை சாற்றுவர்.

அரையர்கள் எழுந்தருளி திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம்திருமொழி “அக்கும்புலியனதளும்” என்று தொடங்கும் 10 பாசுரங்களையும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 5ஆம் பத்து ஆறாம்திருவாய்மொழி “எங்ஙனேயோ அன்னைமீர்காள்” என்று தொடங்கும் 11 பாசுரங்களையும் அபிநயம் மற்றும் தாளத்தோடு விண்ணப்பம் செய்வர்.

முறைகாரபட்டர்ஸ்வாமி எழுந்தருளி ஒன்றான ஸ்ரீபராசர பட்டர் அன்று வாசித்த முறையிலேயே ஸ்ரீவராஹபுராணத்தின் உள்ளீடான கைசிக மாஹாத்மியத்தைக் குல்லாய் தரித்து நம்பெருமாள் திருமுன்பு விண்ணப்பம் செய்வர்.

கைசிக துவாதசியன்று முறைகாரபட்டர் நிலையங்கி, குல்லாய், தொங்கு பரியட்டம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கைசிக புராண ஸ்ரீகோஸத்தோடு நம்பெருமாளுடன் மேலைப்படி வழியாக சந்தன மண்டபத்துக்குள் எழுந்தருளுவார்.

மேலைப்படியில் நம்பெருமாள் எழுந்தருளும்போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் புஷ்பங்களையும், பச்சைக்கற்பூரப் பொடியையும் நம்பெருமாள் திருமேனி மீது வாரியிறைப்பர். இந்த நிகழ்ச்சி கற்பூரப்படியேற்ற ஸேவை என்று அழைக்கப்படுகிறது.

நம்பெருமாள் கருவறையில் பூபாலராயனில் எழுந்தருளியபிறகு மரியாதைகளைப் பெற்ற முறைகார பட்டர் ப்ரஹ்மரதம் கண்டருளுவார்.


கைசிக ஏகாதசி என்றால் என்ன?

நம்பாடுவான் கதை

திருநெல்வேலி மாவட்டத்திலே திருக்குறுங்குடி என்னும் ஊர் எம்பெருமான் அழகிய நம்பி கோயில் கொண்டிருக்கும் திருத்தலம். அவ்வூரில் வெகு காலத்திற்கு முன்பு நம்பாடுவான் என்னும் பரம பாகவதர் வாழ்ந்துவந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்தவர். அந்த நாளிலே அவருக்குக் கோயிலுக்குள் சென்று எம்பெருமானை வழிபட அனுமதி இல்லை. ஆனால் அவர் ஒவ்வொருநாள் இரவும் கோயிலுக்கு முன் சென்று
அனுமதிக்கப்பட்ட தொலைவில் நின்று கைசிகப் பண்ணில் திருமால்
பள்ளியெழுச்சிப்பாடல் பாடுவார். அதை ஒரு விரதமாகவே கொண்டிருந்தார். அதற்கு ஜாகர விரதம் என்று பெயர். வெகுகாலம் அப்படிப்பாடிப் பரவசமடைந்து வந்த அவருக்கு ஒருநாள் கார்த்திகைமாதம் சுக்கில துவாதசியன்று ஒரு பெரிய சோதனை வந்தது. அவர் இரவுப்போதில் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு மரத்தில் தங்கியிருந்த
பிரம்மாராட்சஸன் ஒருவன் அவரைப் பிடித்துக்கொண்டான். முன் ஜன்மத்தில் சோமசர்மன் என்ற பெயரில் விளங்கிய அந்தணன் யாகம் செய்யும் போது பிழையாக மந்திரம் உச்சரித்ததனாலும் , உடல் நலிவானாலும் யாகம் நிறைவேறாது பாதியில் நின்றுவிட்டது. அது மிகவும் பெரிய தவறாகக் கருதப்பட்டதால் பிரம்மராட்சஸனாக மாறினான். வழியில்
செல்லுவோரைப் பிடித்துத் தின்றுவிடுவான்.
நம்பாடுவானையும் பிடித்துத் தின்னப் போகும் நேரத்தில் நம்பாடுவான்
பிரம்மராட்சஸனிடம்

“ஐயா, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது பெருமாளுக்குத்
திருப்பள்ளி எழுச்சி பாட நான் போகவேண்டும். அங்குப்போய் இன்றையக் கடமையை
நிறைவேற்றிவிட்டு வந்துவிடுகிறேன். அதன் பிறகு நீங்கள் என்னைப் புசிக்கலாம்”
என்றார்

பிரம்மாராட்சஸன் பெரிதாகச் சிரித்தான்

“அடே மானிடப்பதரே, என்ன கதை விடுகிறாய்? பிரம்மராட்சஸனிடமிருந்து எவனாவது
தப்பிச் செல்லமுடியுமா? தப்பிச் சென்றவன் திரும்பி வருவானா? “ என்றான்.

“ ஐயா, நான் சத்தியத்தைக் காப்பவன்.நிச்சயமாகத் திரும்பிவருவேன்” என்றார்.

பிரம்மராட்சஸன் நம்பவில்லை.

“ ஐயா,நான் வாக்குத் தவறினால் அடுத்தவனுக்குக் கொடுக்கிற தானத்தைத் தடுப்பவன்
எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேனாக!”என்றார்.

பிரம்மராட்சஸன் அசைந்து கொடுக்கவில்லை.

“தன்னை நம்பிய ஒருவனின் மனைவிமேல் காமம் கொண்டவன் வீழும் நரகில் விழுவேனாக”
என்றார்.

பிரம்மராட்சஸன் அசையவில்லை.

இப்படியாகப் பத்து சபதங்களைக் கூறியபிறகு மறந்தும் புறந்தொழா வைணவ பக்தர்கள்
கூறும் ஒரு சபதத்தைக் கூறியதும் பிரம்மராட்சஸன் அனுமதித்தான்.

(மாற்றான் மனைவியைக் கூடுதல்,உணவிட்டவரை நிந்தித்தல், தாகத்தோடு நீர் அருந்தவரும் பசுவை நீர் அருந்தவிடாமல் தடுத்தல், ஆசார்ய பத்தினியைக் காமுறுதல்,
உள்ளிட்ட 17 கொடிய பாபங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி, அவற்றால் உண்டான பலனை
அடைவேனாக என்று சபதம் செய்ததை ஏற்றுக்கொள்ளாத பிரம்மராக்ஷஸன் ஏற்றுக்கொண்ட பதினெட்டாவது சபதம்.

'நாராயணமதாந்யைஸ்து தேவைஸ் துல்யம் கரோதி ய:
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகமே புந:' 'எல்லா வுயிர்களிலும் மறைந்திருந்து இயக்கக்கூடியவனாய், எல்லாவற்றையும் சாதிக்க
வல்லவனாய், மோக்ஷத்தை வழங்க வல்லவனாய், சர்வேஸ்வரனாய், ஒரே பரம்பொருளாய்
விளங்குகின்ற நாராயணனை, அத்தகைய சக்தியற்ற, சாமன்யமான பிற தெய்வங்களோடு சமமாகக்
கருதுபவர் போல, நானும் மோக்ஷம் பெற இயலாமல் சம்சாரத்தில் கிடந்து வுழல்வேனாக'

நம்பாடுவான் கோயிலின் முன் சென்று மிகவும் உருக்கமாகக் கைசிகப் பண்ணில்
திருப்பள்ளி எழுச்சி பாடிப் பெருமாளைத் துயில் எழுப்பி, விடைபெற்று வரும் போது

பிரம்மராட்சஸன் காத்திருப்பானே என்று மிக வேகமாக நடந்துவந்தார்.

வழியில் வந்த ஒரு வயோதிகர் “ அப்பனே, ஏன் இவ்வளவு வேக வேகமாகச் செல்கிறாய்?”
என்று கேட்டார்

“ கொடுத்த வாக்குறுதியைக் காப்பதற்காக வேகமாகச் செல்லுகிறேன்” என்றார்
நம்பாடுவான்.

“ இந்த வழியிலே பிரம்மராட்சஸன் ஒருவன் இருக்கிறான். அவன் உன்னைக் கொன்று
தின்றுவிடுவான். எனவே வேறு வழியில் போ” என்றார் வயோதிகர்.

“அவருக்குத் தான் நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். பிரம்மராட்சஸர் என்றாலும்
என்னைப் பாட்டுப்பாடி வருமாறு அனுமதித்த கருணாமூர்த்தி அவர்.. நான் அவருக்கு
உணவாகப் போயே ஆகவேண்டும்” என்றார் நம்மாடுவான்

“பைத்தியக் காரனாக இருக்கிறாயே ! சொல்வதைக் கேள்” என்றார் வயோதிகர்.

“ நீங்கள் வயதில் பெரியவர். சத்தியத்தைக் காக்கப் போகும் என்னை நீங்கள்
தடுக்கக்கூடாது” என்று சொல்லி விட்டுப் பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்ததில்
காலதாமதமாகிவிட்டதே என்று வருந்தி இன்னும் வேகமாகச் செல்லத்தொடங்கினார்.
வயோதிகராக வந்தவர் பெருமாளேதான். நம்பாடுவானின் பக்தியில் மயங்கி அவருக்கும்
அவர் மூலமாகப் பிரம்ம ராட்சஸனுக்கும் ஆசிவழங்கி மறைந்தார் .

பிரம்மராட்சஸன் திரும்பி வந்த நம்பாடுவானைப் பார்த்ததும். மனமகிழ்ந்தான்.
சத்திய சந்தனான அவரைக்கொன்று தின்ன விரும்பவில்லை. பசியோ தகித்தது. அவனுக்குப்
பூர்வ ஜன்ம நினைவு வந்துவிட்டது.

எனவே நம்பாடுவானை வணங்கி,

“நீர் எவ்வளவு பெரியவர் என்பதை அறிந்து கொண்டேன். இறைவனைப் பாடியதால் கிடைத்த
புண்ணியத்தை எனக்குக் கொடுங்கள். உங்களை விட்டு விடுகிறேன் “ என்றான்.

“புண்ணியத்தைத் தர முடியாது. என்னைத் தின்று விடுங்கள்” “முழுதும் தரவேண்டாம். பாதியையாவது கொடுங்கள்”


அதையும் தரமுடியாது. என்னையே தருகிறேன்” என்றார் நம்பாடுவான்

உடனே பிரம்மராட்சஸன் தனது பூர்வ ஜன்ம கதையைச் சொல்லி உங்களால் தான் எனக்குச்
சாப விமோசனம் கிடைக்கவேண்டும். எனவே இன்று கைசிகப் பண்ணில் நீங்கள் பாடிய
பாடலின் புண்னியைத்தையாவது கொடுங்கள் “ என்றான்.

உடனே மனமிறங்கி நம்பாடுவான் அன்று தனக்குக் கிடைத்த புண்ணியத்தை அவனுக்குத்
தத்தம் செய்தார். பிரம்மராட்சஸன் சாபவிமோசனம் பெற்று அவரை வணங்கிச் சென்றான்.

நம்மாடுவான் கைசிகப் பண்ணில் அவர் பாடியதால் கிடைத்த புண்ணியத்தாலும்
எம்பெருமானின் பரம கருணையினாலும் கிடைத்தற்கரிய வைகுந்த வாழ்வு பெற்று அங்கே
இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதைதான் நாடகமாக்கப்பட்டு ஒவ்வோராண்டும் கார்த்திகை சுக்கில
துவாதசியில் திருக்குறுங்குடியில் நாடகமாக நடிக்கப்படுகிறது


இராமானுஜம் மீட்டெடுத்த கைசிக நாடகம் ( காலச்சுவடு கட்டுரை)

பேராசிரியர் இராமானுஜம் திருக்குறுங்குடி ஊரை அடுத்த நான்குநேரியில் பிறந்தவர் என்றாலும் அவரது பால்யகால வாழ்க்கை அன்றைய தென்திருவிதாங்கூர் பகுதியிலேயே கழிந்திருக்கிறது. அதனால் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர்ப் பக்கம் மகேந்திரகிரி மலை அடிவாரத்திலிருந்த திருக்குறுங்குடி நம்பி கோயிலில் நடந்த கூத்தைப் பார்க்கவோ கேள்விப்படவோ இல்லை.

அத்தை சொன்ன கைசிக நாடகம் இராமானுஜத்திற்கு முக்கியமாகப்பட்டிருக்கிறது. அப்போது அத்தைக்கு வயது 92. இராமானுஜம் கைசிக நாடகம் பற்றிய செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியது 1992இல். அதே ஆண்டில் திருக்குறுங்குடிக்கு அந்த நாடகத்தைப் பார்க்க அவர் சென்றுவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டத்திலுள்ள திருக்குறுங்குடி திருநெல்வேலி நகரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் உள்ள இந்த ஊர், 108 வைஷ்ணவ திவ்விய க்ஷேத்திரங்களில் ஒன்று. இவ்வூரின் பெரிய கோயிலில் உள்ள தெய்வம் அழகியநம்பி (திருக்குறுங்குடி நம்பி) எனப்படுகிறார்.

இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. நம்மாழ்வார் பாடிய தலம் இது. 12ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் இக்கோயிலுக்கு வந்திருக்கிறார் என்பது குரு பரம்பரைச் செய்தி. விஜயநகர, நாயக்கர் கட்டடக் கலைக்குச் சான்றாக நிற்பது இக்கோயில்.

பேராசிரியர் இராமானுஜம் 1996இல் கார்த்திகை மாதம், கைசிக ஏகாதசியில் திருக்குறுங்குடிக்கு நாடகம் பார்க்க மறுபடியும் வந்திருக்கிறார். கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று வைணவர்கள் இரவு முழுக்க விழித்திருந்து விரதம் இருப்பார்கள். அடுத்த நாள் காலை விரதத்தை முடித்துக்கொள்வார்கள். அன்று இரவு நடத்தப்படுவது கைசிக நாடகம்.

இராமானுஜம் இந்த நாடகத்தை முதலில் பார்த்தபோதும் (1992), தன் அத்தையிடம் இரண்டு மூன்று நாள்கள் உரையாடியபோதும் கிடைத்த தகவல்களுக்கும் தான் 1997இல் பார்த்த நாடக வடிவத்திற்கும் பெரும் வேறுபாடு இருந்ததைக் கண்டுகொண்டார். அப்போது அந்த நாடகத்தின் மூலப் பகுதி சிதைக்கப்பட்டுக் கூர்மை இழந்து கலைத்தன்மையற்று இருந்ததாகச் சொன்னார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விடிய விடிய நடந்த அந்த நாடகம் நூற்றாண்டின் இறுதியில் (1997இல்) 45 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. கைசிக ஏகாதசியில் இரவு முழுக்க விழித்திருக்க வேண்டும் என்பது நியதி. நாடகமோ 45 நிமிடங்களில் முடிந்துவிடும். அதனால் மற்ற நேரங்களில் வராக புராணம் பகுதியைப் பாராயணம் செய்துகொண்டிருந்தார்கள். நேரத்தை நீட்டும் வழியாக அது இருந்திருக்க வேண்டும்.

வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.

இந்தக் கதை நாடகமாக நடந்தபோது, திருவடிவழகிய நம்பியே கண்ணுற்றார் என்பது வைஷ்ணவ சம்பிரதாயம்.

கைசிக நாடகம் இராமானுஜர் காலத்துப் பழமையானது. அப்போது இது வழக்கில் இருந்திருக்கவேண்டும். இராமானுஜர் வேத ரகசியத்தை எல்லாச் சமூகத்திற்கும் பரகசியமாக்கியபோது, இந்த நாடகம் ஒருமைப்பாட்டை வலியுறுத்த உதவியிருக்கலாம். இது வெறும் யூகந்தான்.

விஜயநகர ஆட்சிக்காலத்தில் இந்த நாடகம் நடந்ததற்குச் சான்று உண்டு. விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யா என்னும் தன் நூலில் நம்பாடுவானைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அச்சுதராயர் என்ற அரசரின் இரண்டாம் மனைவி கைசிக நாடகம் நடத்துவதற்கு நிபந்தம் கொடுத்திருக்கிறாள். இதைத் தஞ்சை சரஸ்வதி மஹாலில் பார்த்ததாக அறிஞர் பண்டித விஸ்வநாதன் எடுத்துக் காட்டுகிறார்.


பேரா. இராமானுஜம் முதலில் பார்த்த கைசிக நாடகம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இரண்டாம் முறை பார்த்தபோதும் ஏமாற்றம் தொடர்ந்திருக்கிறது. அதில் பிரம்மராட்சசனாக நடித்தவர் மட்டும் விதிவிலக்காக இருந்திருக்கிறார். அப்போது பெரும்பாலும் திரை மறைவிலிருந்த prompter அந்த நாடகத்தின் பகுதிகளை நடிகர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். நடிகர்களுக்கு அந்த நாடகம் தளபாடமாக இருக்கவில்லை. அவர்கள் prompter எங்கே நிற்கிறார் என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடித்திருக்கிறார்கள். ஊர் மக்களுக்கும் இதன் தொய்வு தெரியவில்லை என்கிறார் இராமானுஜம்.

இதன் பிறகு இராமானுஜம் தஞ்சாவூரில் தன் சக பேராசிரியரிடம் இது பற்றிக் கேட்டபோது அவர், வெல்பர்ன் என்ற அமெரிக்கர் கைசிக புராணத்தை மொழிபெயர்த்த தகவலைச் சொன்னார். இராமானுஜம் அந்த மொழிபெயர்ப்பைத் தேடியபோது, அது வராக புராணப் பகுதி என்று அறிந்துகொண்டார்.

கைசிக புராணம் முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, பின்னர் மணிப்பிரவாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் மூலப் பனுவல் கிடைத்துவிடும் என்னும் தகவல்கள் தெரிந்த பின்புதான் இந்த நாடகத்தை மீட்டெடுக்கும் பணியில் இராமானுஜம் தீவிரமானார்.

இந்த நாடகத்தை மறுபடியும் மீட்டெடுத்து நடத்திக்காட்டுவது தன்னால் மட்டும் முடியாது என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்த இராமானுஜம் மறுபடியும் 1996இல் அந்த நாடகத்தைப் பார்த்தபோது, சிறந்த பரதநாட்டியக் கலைஞரான திருமதி அனிதா ரத்தினத்திடம் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அனிதாவின் பூர்வீகமும் திருக்குறுங்குடிதான். அவர் இராமானுஜத்திற்கு உதவ முன்வந்திருக்கிறார்.

இராமானுஜம் 1996இல் கைசிக நாடகத்தை வீடியோவில் பதிவுசெய்துவிட்டார். ஓரளவு அது பற்றிய செய்திகளைச் சேகரித்திருக்கிறார். பின்னர் அனிதாவின் உதவி கிடைத்தவுடன் முழு நேரமாய்க் களத்தில் இறங்கினார். அந்த நேரத்தில் சுந்தர ராமசாமியின் வீட்டிற்கு வந்தார். அந்த நாடகம் பற்றி சு.ரா.விடம் உற்சாகமாகப் பேசினார்.

கைசிக நாடகம் தொடர்பாக அறிந்த வயதான தேவதாசி ஒருவர் நாகர்கோவிலில் இருப்பதாகவும் அவரைத் தேடிவந்ததாகவும் சொன்னார். 1996இல் பதிவுசெய்த நாடகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட மூலப் பிரதி கிடைக்குமா என்று தேடினார். வள்ளியூரில் தங்கியிருந்து, திருக்குறுங்குடிக்கு அலைந்து கொண்டிருந்தார். அவர் சேகரித்த செய்திகள் அவருக்குத் திருப்தி தரவில்லை. அந்த நாடகத்தின் நுட்பத்தைப் புரியவும் இசைத்தன்மையை அறியவும் மூலப் பனுவல் தேவை என்பதை உணர்ந்த பின்பு அவரது தேடுதல் நீண்டது.

கைசிக நாடகத்தின் மூலப் பனுவல் மணிப்பிரவாள நடையிலிருந்தது. அதை வைத்திருந்த திருக்குறுங்குடி ஊரைச் சார்ந்த, வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்த அறிஞர் திரு. நாராயண அய்யங்காரிடம் திருப்பித் தருவதாக வாக்குக்கொடுத்துவிட்டு அந்த ஏட்டுப் பிரதியைப் பெற்ற பிறகுதான் இராமானுஜத்திற்கு முழுநம்பிக்கை வந்தது. தன்னுடைய மீட்டுருவாக்க வடிவத்தில் மூலப் பனுவலின் மொழி நடையை மாற்றக் கூடாது என்பதில் இராமானுஜம் உறுதியாக இருந்தார்.

கைசிக நாடகம் அபிநயமும் பாடலும் கலந்த நாடகம். ஏட்டுப் பிரதியில் 40 ராகங்கள் இருப்பதும் இவையெல்லாமே அபிநயிப்பதற்கு ஏற்றவை என்பதும் மூலப் பனுவலைத் திரு. நாராயண அய்யங்காரிடம் விவாதித்தபோது, இராமானுஜத்திற்குத் தெரியவந்தது. அதோடு அந்த நாடகத்தின் ராகமான கைசிகம் என்பதை பைரவி என்று அடையாளம் காணவும் சிலர் உதவினார்கள்.

1996க்குப் பிறகு இராமானுஜம் ஆறு மாதம் தொடர்ந்து உழைத்தார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியர், தமிழ் நாடக இயக்குநர், நாடக மொழிபெயர்ப்பாளர், கிரேக்க லத்தீன் நாடகங்களைத் தமிழ் வாசகனுக்கு ஏற்றவாறு தந்தவர், ந. முத்துசாமியுடன் கூத்துப்பட்டறையில் நெருக்கமாக இருந்தவர் என்னும் நீண்ட பின்னணி கைசிக நாடகத்தின் வடிவத்தை மீண்டும் கொண்டுவர எளிதான காரியமாக இருந்தாலும் நாடகம் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பது அவருக்குச் சிரமமாக இருந்தது.

கைசிக நாடகம், நாடு விடுதலை பெற்ற பின்பு சில ஆண்டுகள் முழுவதுமாய் நடிக்கப்பட்டிருக்கிறது. 1950இல்கூடத் தேவதாசி மரபினர் நடித்தனர். அந்த நாடகத்தைப் பார்த்தவர்களின் நினைவில் நின்றதைத் தொகுத்துப் பார்த்தபோது, மூலத்தை அப்படியே நடித்ததாக இராமானுஜம் புரிந்துகொண்டார். இதற்குப் பிற இசைக்கலைஞர்கள் அவருக்கு உதவியிருக்கின்றனர். பின்னிரவில் ஆரம்பித்து விடியற்காலை 5 மணி வரை இது நடந்தது.

தமிழகத்தில் தேவதாசி ஒழிப்பு நடைமுறைக்கு வந்தபோது, தேவதாசிகளால் நடத்தப்பட்ட நாடகங்கள் அதன் பிறகும் நடந்திருக்கின்றன. இது இரண்டு குழுக்களாக நடத்தப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பு இது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. கோயில் நிலங்களைப் பயிரிட்டவர்கள் நிலங்களில் உரிமைகொண்டாட ஆரம்பித்த பிறகு வட்டாரரீதியாக மரபுவழிக் கலைகளைப் பேணும் நிபந்தச் செலவு நிறுத்தப்பட்டது. இதற்கான காராண்மை நிலங்கள் அடையாளமில்லாமல் ஆயின.

இதனால் பரம்பரையாக நடிக்கப்பட்ட, நிகழ்த்தப்பட்ட கலைவடிவங்கள் நிறுத்தப்பட்டன. சடங்கு சார்ந்தவை மட்டும் எஞ்சி நின்றன. அந்தச் சடங்குக் கூறுகளுடன் அவற்றின் கலைக் கூறுகள் தொடர்ந்தன. தேவதாசி வழக்கம் இருந்தபொழுது நாடகங்களைக் கற்பித்த குருமார்களின் மறைவும் இந்த அழிவுக்குக் காரணமானது. தமிழகத்தின் பொதுவான இந்த நிலை கைசிக நாடகத்திற்கும் பொருந்தும்.

இராமானுஜம் கைசிக நாடகத்தில் நடித்த தேவதாசிகளையே மறுபடியும் நடிக்கவைத்து மாதிரி வடிவத்தைப் பதிவுசெய்ய முயன்றதே இதன் வெற்றி என்று கூறலாம். அதோடு 1950க்குமுன் நடிக்கப்பட்ட நாடகத்தின் பின்புலமாக இருந்த நட்டுவாங்கக்காரர்களும் தேவதாசிகளுடன் பங்கேற்க விரும்பினர். அப்படித் தேடியதில் இருவரைக் கண்டுபிடித்தார் இராமானுஜம். அவர்கள் இந்த நாடகத்திற்கும் பின் புலமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்தத் தேவதாசி மரபுப் பெண்களில் ஒருவருக்கு வயது 73. இன்னொருவருக்கு 85 (1996இல்) இவர்களது மக்கள் நாகர்கோவிலிலும் திருநெல்வேலியிலுமாக இருந்தனர். அந்தத் தேவதாசி மரபுப் பெண்ணை நாகர்கோவிலில் தேடியபோதுதான், இராமானுஜம் சுந்தர ராமசாமி வீட்டிற்கு வந்தார். அவரது வீட்டிலிருந்துகொண்டே அந்தப் பெண்ணைத் தேடி அலைந்தார். ஒரு சில இடங்களுக்கு நானும் அவருடன் போனேன்.

அந்தக் குடும்பத்தினர் தங்களைத் தேவதாசிக் குலமரபினர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். மேடையில் நிகழ்ச்சி நடத்த அவர்கள் விரும்பவில்லை. என்றாலும் இராமானுஜம் விடாப்பிடியாக முயன்றபோது, நாடகம் பற்றிய தகவல்களைச் சொல்லவும் பின்னணியை விளக்கிக் கூறவும் ஒத்துழைத்தார்கள்.

இவர்களில் நாகர்கோவிலில் இருந்த தேவதாசி மரபில் வந்த முதிய பெண்ணிடம் கைசிக நாடகத்தின் கடைசிப் பதிவைக் கண்ணில் காட்டியும் காதில் சொல்லியும் செய்த முயற்சிகள் பலனளித்தன. அவருக்குப் பழைய விஷயங்கள் நினைவில் வர ஆரம்பித்தன. கொஞ்சங்கொஞ்சமாக அவரைத் தயாராக்கிக்கொண்டே வந்தார் இராமானுஜம். அதோடு ஏட்டில் இருந்த மூலப் பாடல்களிலுள்ள ராகங்களின் ஏற்ற இறக்கங்களை அடையாளங்கண்டு திருத்தினார்.


இந்த நேரத்தில் தஞ்சாவூரில் துரைக்கண்ணு என்ற ரேவதி அம்மாளைச் சந்தித்தார் இராமானுஜம். தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த அந்த வயதான பெண் தஞ்சையில் சபேந்திர பூபால குறவஞ்சி நாடகத்தில் நடித்தவர். அவர் இராமானுஜத்தின் நாடகக் கட்டமைப்புக்கு உதவினார். இப்படியாக ஏழு மாதங்கள் கழிந்துவிட்டன.

கோயில்களில் சுவர் ஓவியங்களை மீட்டெடுக்கும் பணி அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகிறது. தாவரச் சாயத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் பெரும் பாலானவை அழிந்துவருகின்றன. இந்த ஓவியங்களிருக்கும் கோயில்களின் குடமுழுக்கு விழாவில் நடக்கும் மராமத்துப் பணியில் ஒன்றாகவே சுவர் ஓவிய மீட்டெடுக்கும் பணியும் நடக்கிறது. கேரளத்தில் இதுபோன்ற பணியைத் துல்லியமாகச் செய்கின்றனர். பழைய ஓவியங்களின் மாதிரியை டிஜிட்டல் கேமராவில் பதிவுசெய்து கணிப்பொறி வழி நுட்பமாக அதை இனம் கண்டு பழைய வடிவத்தை அப்படியே சுவரில் பதித்துவிடும் முயற்சி நடக்கிறது. இந்தச் செயல்பாட்டில் உள்ள உழைப்பு ஒருவிதத்தில் நவீனத் தொழில்நுட்பத்தால் எளிமையாகிவிட்டது. ஆனால், இராமானுஜத்தின் நிலை அப்படியல்ல.

இந்த நாடகத்தை முதலில் பார்த்தபோது (1992), அதை மீட்டெடுக்க முடியாது என்னும் நம்பிக்கையில் பேசிய இராமானுஜம் அதைப் பதிவுசெய்த பின்பு (1997) ஆறு மாதங்களில் முழு நாடகத்தையும் மீட்டெடுக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஒருவகையில் அதற்கு அனிதா முழுக்கக் காரணமாக இருந்தார். இராமானுஜம் பார்த்த உடைந்துபோன நாடக உரையாடல் அவருக்கு முதலில் அவநம்பிக்கை அளித்தாலும் அதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். நாடகம் தொடர்பான செய்திகள் அவருக்குக் கிடைத்தன. அதனால் நாடக அமைப்பு பற்றிய பழைய சிந்தனைக்கு மூலப் பனுவல் வடிவத்தைத் தேட வேண்டியிருந்தது.

பி-கு
பல்வேறு வலைத்தளங்களில் இருந்து நான் படித்து அறிந்து கொண்ட தகவல்கள் இவை.தவறுகள் இருக்கலாம்.