Tuesday 13 January, 2015

அப்பக்குடத்தான்

சில காரணப்பெயர்கள் ஆவலை அதிகரித்து விடுகிறது. அப்படித்தான் இந்த ”அப்பக்குடத்தான்” பெயரும். தஞ்சை மாவட்டத்தில் இருந்தாலும் திருச்சியிலிருந்து செல்வது தான் எளிது. திருச்சியிலிருந்து காவிரியின் தென் கரையில்   (வடகரை சாலை குண்டும் குழியுமாக இருக்கும்) 20 கி.மீ பயணித்தோமானால் கல்லணை வந்து சேரும்.சாலை பயணம் களைப்பையே தராது. இடது புறம் நம்மோடு கூடவே வரும் காவிரி.ஒவ்வொரு வளைவிலும் தன் பிரம்மாண்டத்தை காட்டி மறையும் பேரழகு. காவிரி எப்போதும் எனக்கு மோகமுள் ”யமுனா” வை ஞாபகப்படுத்தும்.என்னை மாதிரி காட்சிகளின் மீது சபலம் கொண்டவர்களுடன் பயணிப்பது என்பது கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய அனுபவமாக இருக்கும். ஜெயந்திக்கு பழகிவிட்டது. அரை ஃபர்லாங்க்கு ஒரு முறை கூட வண்டியை நிறுத்திவிடுவேன்.(வேறு என்னத்தை அனுபவிக்கப் போகிறோம்). நாணல் புதர்கள் நிறைந்த காவிரி போர்க்களத்தில் நிற்கும் நரைத்த பீஷ்மரை ஞாபகப்படுத்தியது.ஒவ்வொரு படித்துறையும் ஒவ்வொரு அழகு. கல்லணை நெருங்க நெருங்க ஒரு அமானுஷ்ய பயம் கவ்விக்கொள்ளும். அதுவரை ஓடிவரும் காவிரி கொஞ்ச கொஞ்சமாக ஓட்டத்தை நிறுத்தி பேரமைதியுடன் அலை மோதும் . தளும்பும் நீரலையை பக்கத்தில் பார்த்தவாறே சாலையில் பயணிக்கும் எனக்கு ஒரு அச்சம் நிறைந்த பயண அனுபவத்தைக் கொடுத்தது.
கல்லனை வரை காவிரி தென்கரையில் பயணம். கல்லணையில் காவிரியைக் கடந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான சாலைப்பயணம். அடடா…..நிழல் நிறைந்த சாலை. ஒரு குகைக்குள் பயணிப்பது போன்ற உணர்வைக்கொடுத்தது. இரு புறமும் உயர்ந்த மரங்கள். பெரும்பாலும் எனது வலது புறம் காவிரி இரு கரை நிரம்ப. இடது புறம் கொள்ளிடம் ஒரே மணல் வெளியாக.பழைய சாதத்துக்கு சூடான வத்தக்கொழம்பு தொட்டுக்கொள்வது மாதிரி ஒரு ஃபீல்.இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சாலையில் ஒரு பெயர்ப்பலகையை பார்த்தவுடன் எப்படிப்பட்ட இடத்தில் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்ற ”புவியியல் பிரஞ்கை” உரைத்தது. அந்த பலகை “ கொள்ளிடம் கரை உடைப்பு 1961” என்று சாலையின் வலது புறத்திலும் கொஞ்ச தூரம் தள்ளி “ காவிரிக்கரை உடைப்பு 1961” என்ற அறிவிப்பும். வெள்ளம் சூழ்திருக்கும் போது இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையை ஊதி பெரிதாக்கிக்கொடிருந்தது மனசு. சில இடங்களில் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் சாலை மட்டுமே நடுவில் என்பதாக இருந்தது.


இதே பொழப்பா போச்சு. வடையை எண்ணச் சொன்னால் தொளையை எண்ணும் புத்தி எப்போது மாறுமோ? சரி விஷயத்துக்கு வருகிறேன். இந்த சாலைப்பயணத்தில் வலப்புறம் ஆங்காங்கே தெருக்கள் தெரு காவிரியில் போய் முடிவதை சாலையில் பயணிக்கும் போதே பார்க்க முடிகிறது. அப்படி ஒரு சாலையில் வலது புறம் திரும்பினால் ஒரு சிறு பாழடந்த கட்டிடங்கள் நிறைந்த  அக்ரஹாரம்



 அதன் முடிவில் உயரமான கோவில் அதுதான் அப்பால் அரங்கன் எனும் அப்பக்குடத்தான் கோவில்“ கோவிலடி” என்ற ஊர் தான் அப்பக்குடத்தானின் ஜாகை.அப்பக்குடத்தான் பெருமாள் பெயர். வரலாறு இதுதான்
 ( கட் அண்டு பேஸ்ட்)
வரலாறு! துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலம் இழக்கிறான் உபமன்யு என்ற மன்னன். இந்தத்தலத்தில் இலட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் விமோசனம் கிட்டும் என்றறிந்து தானமிடத் தொடங்குகிறான். ஒருநாள் திருமாலே முதிர்ந்த வைணவரின் தோற்றத்தில் இங்குவந்து அன்னம் கேட்கிறார். பரிமாறப்படுகிறது
அன்றைய தினத்துக்கான உணவுமுழுவதையும் முதியவர் உண்டுவிடுகிறார். வியந்த மன்னன், இன்னும் என்ன வேண்டும் என்று வினவுகிறான். ஒரு குடம் அப்பம் வேண்டும் என்கிறார். அப்பக்குடத்தைக் கையில் வாங்கியதும் மன்னனின் சாபம் தீர்ந்து பெருமாளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றான்.” – நன்றி.( http://enthamizh.blogspot.in/2013/01/blog-post_28.html)

காவிரியை ஒட்டிய கோவில் என்பதால் நல்ல உயரத்தில் கோவிலை கட்டியுள்ளார்கள்.

மூலவர் தன் அருகிலேயே ஒரு அப்பம் நிறைந்த குடத்தை வைத்துள்ளார் என கேள்விப்பட்டது முதல் அதைப்பார்க்க ஆவல். ( நானும் அப்பப் ப்ரியன் தான்) . தற்போது கோவில் புணரமைப்பு வேலை நடந்து வருவதால் மூலவர் தரிசனம் இல்லை பாலாலயம் செய்திருக்கிறார்கள். (பாலாலயம் = மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக  ஆவாகனம் செய்திருக்குஞ் சிறிய ஆலயம்
temporary structure to accommodate a deity when its inner shrine is under repair
உபயம் http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D) உற்சவர் சேவை. பட்டர் வயதானவர். ரொம்ப சுவாரஸ்யமாக ஏதும் சொல்லவில்லை, அவருக்கு என்ன கஷ்டமோ? மூலவரின் வெள்ளிப்பாத கவசம் உற்சவர் அருகிலேயே இருந்தது. அதன் அளவு மூலவர் எவ்வளவு பெரிதாக இருப்பார் என்பதை உணரவைத்தது. பத்து இருபது படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வெள்ளம் பாதிக்காமல் இருக்க இப்படி கட்டியிருக்கலாம்.ஏறும் படிகளுக்கு நடுவிலேயே கொடிமரம். நான் இது போன்ற அமைப்புள்ள கோவிலை இதுவரை பார்த்ததில்லை. உள்ளேயே தாயார் சன்னதி மேற்கு பாரத்து. எல்லா இடங்களிலும் தூசி. செப்பனிடும் வேலையின் விளைவு. தாயார் சன்னதிக்கு நேர் எதிரே பின்பக்கமாக இறங்கும் படிக்கட்டுக்கள். அங்கே தஞ்சை மராட்டிய பாணி மண்டபம் ஒன்று. 


பிரகாரத்தை சுற்றும் போது விநாயகர் கோவில் வழிகாட்டும் விநாயகராம். இந்திரனுக்கு வழியைக்காட்டியவர். விநாயகருக்கு மட்டும் விதவிதமான பெயர்கள் எப்படி வந்தது? மற்ற தெய்வங்களுக்கு இந்த அளவிற்கு பெயர்கள் இல்லை.


ஸ்தல விருச்சம் புரசை மரம்.

 தாழ படர்ந்திருக்கிறது இதன் பூக்கள் எறிதழல் மாதிரி இருக்கும் என படித்திருந்தேன் . இப்போது பூக்கள் பூத்திருக்க வில்லை.சிற்பங்கள் அதிகமில்லாத சிறிய கோபுரம். கோவிலின் வாயிற்கதவு பச்சை வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தகவல் 1927ல் செய்யப்பட்ட கதவு அது. அகோபில மடம் மூலம் வங்கப்பட்ட இந்தக்கதவு ”யானை உடைத்த கதவுக்கு பதிலாக” வழங்கப்பட்டதாக கதவில் பொறிக்கப்பட்டுள்ளது. 



யானை ஏன் உடைக்க வேண்டும். உள்ளிருந்து வெளியே வர உடைத்ததா? அல்லது வெளியிலிருந்து உள்ளே வர உடைத்ததா? உள்ளிருந்து வெளியே வர உடைத்திருந்தால் அது “புத்துணர்ச்சி” முகாம் வேண்டியிருக்கலாம். வெளியிலிருந்து உள்ளே எனில் பக்தி பிரவாகமாக இருக்காலாம். ஆக ”யானை உடைத்த கதவு “ என்ற வரி உள்ளே பல கதைகளை விரித்துக்கொண்டு சென்றது.பக்கத்தில் சுழித்து ஓடும் காவிரியில் கொஞ்சம் கால் நனைத்து நேரம் செலவிட்டோம்.



 காவிரியிலிருந்து கோவில் அழகாகத்தெரிந்தது.கிளம்பும் போது ஒரு டவேராவில் தென்கலை குடும்பம் வந்து இறங்கியது. மூக்கு நுனிவரை இழுத்துவிட்ட நாமத்தோடு. மாமி மடிசார். பெண் சுடிதார்.அய்யங்கார் வீட்டுப் பெண்களே அழகுதான். இந்தப்பெண்ணிற்கு தாவணி கட்டினால் இன்னும் அழகாக இருக்கும். சீ… என்ன புத்திடா இது? ”ஓம் நமோ நாராயணா”: மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்”