Friday 25 November, 2016

ஆத்தங்குடி பெரிய வீடு

ஆத்தங்குடி பெரிய வீடு . இப்படித்தான் அழைக்கிறார்கள் அந்த வீட்டை.சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு அருகே இருக்கிறது இந்த ஊர்.நாங்கள் திருக்கோஷ்ட்டியூர் போய் அங்கிருந்து பட்டமங்கலம், பிளையார்பட்டி, தரிசனம் முடித்து திருமெய்யம் போகவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். கோவில்கள் பெரும்பாலும் 12.00 க்கு நடை சாத்தி மீண்டும் 4.00 க்குத்தான் திறப்பார்கள்.பெரும்பாலும் அந்த நேரம் வேஸ்டாகிவிடும்.ஆனால் பிள்ளையார் பட்டியில் 1.00 வரை நடை திறந்துள்ளது. மதிய உணவிற்குப் பிறகு கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் என்ன செய்யலாம் என விசாரித்தபோது தான் " ஆத்தங்குடி பெரியவீடு" " கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை " இரண்டையும் பார்த்துவிடலாம் என முடிவு செய்தோம். ஆத்தங்குடி செல்லும் வழியெல்லாம் வெறும் பொட்டல்காடு.இந்த பொட்டலுக்குள்ளா அப்படி ஒரு பங்களா கட்டியுள்ளார்கள் என ஆச்சர்யமாக இருந்தது.ஊர் நெருங்கும் முன் வழியில் கலர் டெயில்ஸ் கடைகள் ஆங்காங்கு இரு புறமும் இருந்தது.பெரியவீடு சாலையின் மீதே பிரம்மாண்டமாய் இருந்தது. உள்ளே நுழைந்ததுமே என்னை கொள்ளை கொண்டது பிரம்மாண்டமான திண்ணைதான்.நம் வீட்டில் எல்லாம் அதிலேயே சீமந்தம்,காதுகுத்தல்,என சிறு விசேஷங்களையே முடித்துவிடுவோம், அவ்வளவு பெரிய திண்ணை.சுவர்களில் இத்தாலியண்டெயில்ஸ், நிலைக்கதவிலிருந்து சன்னல் , விதானகட்டை, வரை எல்லாம் பர்மா தேக்கு.அருகால் அழகை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.ஆனால் வாஸ்து படி 6 அடிக்கு சற்று கூடுதலான உயரம் தான் வைத்திருக்கிறார்கள்.1928 ல் கட்ட ஆரம்பித்து 1931 ல் முடித்துள்ளனர்.கட்டிய செட்டியார்,ஆச்சி, படங்கள் திண்ணையின் இரு புறமும் மாட்டியிருக்கிறார்கள். தாண்டி உள்ளே போனால் மிகப்பெரிய ஹால்.தரையிலிருந்து உத்தரம் வரை அழகிய வேலைப்பாடுகள்.அதிலேயே பால்கனி, அதையும் தாண்டிப் போனால் முற்றம் வைத்து நான்கு புற அறைகள்.அந்த கட்டிடத்தில் அறைகள் மட்டுமே 60 இருக்கிறதாம்.அறையை திறந்து காண்பிப்பதில்லை.அதற்கு பக்கவாட்டில் மிகநீண்ட டைனிங்ஹால். வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து அங்கிருந்த பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.கதையாய்ச் சொன்னார். நாங்கள் இருக்கும் போதே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், சுற்றுலா வந்த இளம் யுவதிகள், என வந்த வண்ணம் இருந்தனர். இந்த கிராமத்தில் இவ்வளவு பெரிய மாளிகை ஏன் கட்டவேண்டும்? என்ற கேள்வி உள்ளுக்குள் நிமிண்டிக்கொண்டே யிருந்தது. ஊரில் ஒரு சிவன் கோவிலும் அழகிய குளமும் இருக்கிறது .ஊரில் நான் பார்த்த பலவீடுகள் பிரம்மாண்டமாகத்தான் இருந்தது.அந்தப்பக்கம் போகும் வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

திருக்கோஷ்ட்டியூர்

சில பெயர்கள் காரணமே இல்லாமல் கவர்ந்து விடுவதுண்டு. அப்படி ஒரு பெயர்தான் “ செளம்ய நாராயணன்” நீண்ட நாள் ஆவல். திருக்கோஷ்ட்டியூர் போகவேண்டும் என்பது. 108ல் ஒன்று.
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்
என அய்ந்து ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டத் தலம்.
முதல் ஆச்சரியம் கோவிலுக்கு முன்னே இருக்கும் குளமும், அதன் எதிரே இருந்த நந்தியும்.
கோவில் உள்ளே நுழைந்ததும் முதலில் எதிர்படுபவரும் நந்தி தேவன் தான். அழகிய வேலைப்பாடு. இப்போது திருப்பணி நடைபெற்று வருவதால் சிலைகள் வெள்ளைத்துணி போர்த்தி வைக்கப்பட்டுள்ளது.சிவன் சன்னதியும் மூடப்பட்டு இருக்கிறது.
நமக்குப் புரியாத கட்டிட அமைப்புடன் இருக்கிறது கோவில்.சிவன் சன்னதிக்கு பின்புறம் குறுகிச் செல்லும் பாதையில் நடந்து பெருமாள் கோவிலுக்கான படிகள் ஏறவேண்டியுள்ளது.
விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்),
முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்),
இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),
மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்)
நின்ற , கிடந்த , அமர்ந்த வுடன் நடந்த (நர்த்தன கிருஷ்ணர்) கோலமும் கொண்டு காட்சி அளிக்கிறார் பெருமாள்.
ஸெளம்ய நாராயணரையும் , திருமாமகள் தாயாரையும் (நிலமாமகள், குலமாமகள் என இரண்டுமாய் இருக்கிறார்) சேவித்துக் காத்திருந்தால் அஷ்டாங்க விமானத்திற்குச் செல்ல அழைத்துச் செல்கிறார்கள். அஷ்ட்டாங்க விமானம் என்றால் என்ன என்பதற்கு எட்டு கொபுரத்திற்கு நடுவில் என ஒரு விளக்கம்? சொன்னார் கோவில் ஊழியர். எட்டு தளங்கள் இருக்குமோ என நான் நினைத்திருந்தேன் மூன்று தளங்கள் தான் இருக்கிறது . மதுரை கூடலழகர், உத்திர மேரூர் ஆகிய இடங்களில் மட்டுமே இப்படிப்பட்ட அஷ்ட்டாங்க விமானங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் அஷ்ட்ட கோணலாய் உடம்பை வளைத்து, அங்கம் கஷ்ட்டப்பட்டு ஏற வேண்டிய விமானம் அது. ஒரு நபர் மட்டுமே ஏறமுடியும், ஆங்காங்கே குனிந்து தவழ்ந்து ஏறவேண்டியதிருக்கிறது.ஒவ்வொரு தளமாய் ஏறி நான்கு அடி உயரமுள்ள குறுகிய சந்தின் வழியே ஒரு பால்கனிபோன்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு வந்த உடன் தான் மூச்சே வந்தது எனக்கு. அங்கிருந்து தான் ராமானுஜர் ஊர் மக்களை அழைத்து அஷ்ட்டாச்சர மந்திரத்தை மக்கள் அனைவருக்கும் உபதேசித்தாராம்.அங்கிருந்து பார்த்தால் ஆளவந்தாருடைய சிஷ்யரான திருக்கோட்டியூர் நம்பி யின் இல்லம் தெரிகிறது. “ அதோ தெரியுது பாருங்க சிவப்பு ஓடு போட்ட வீடு, மேலே கூட சிலைல்லாம் இருக்கே அதுதான் நம்பியின் வீடு” என்றார் ஊழியர். வீட்டின் எதிரே சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர்.அதன் அடையாளமாக நாங்கள் நின்ற இடத்தில் ராமானுஜரின் சிற்பம் இருக்கிறது. நாங்களும் “ ஓம் நமோ நாராயணா”ய என்று உள்ளுக்குள் உச்சரித்துக்கொண்டோம். நம்பி எம்பெருமானாருக்கு உபதேசித்தது என்ன? என்பதில் பெரியவர்களிடையே சில டிஸ்பியூட் இன்னும் இருக்கிறது. மணவாள மாமுனிகளுடைய முமூக்ஷுப்படி வ்யாக்யானத்தில் சரம ச்லோகத்தினுடைய அர்த்தத்தை தான் ராமானுஜர் வெளியிட்டார் எனவும், 6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், ராமானுஜர் திருமந்திரத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொண்டதாகவும், அதைத்தான் அவர் கோபுரத்தில் ஏறி அனைவருக்கும் அறிவித்தார் என்றும் இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது. இரண்டாவது தான் லாஜிக்காக ஒத்துவருகிறது. சரமச்ஸ்லோகம் தரையில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்தாலே ஏறாது, விமானத்தில் ஏறியெல்லாம் சொல்லி அது மக்களுக்கு விடக்கூடிய சங்கதி அல்ல அது. அனால் சொன்னவர் மாமுனிகள் என்பதால் நோ அப்ஜக்ஷன்.ஒருவழியாகக் மீண்டும் குனிந்து வளைந்து, தவழ்ந்து, கிடந்து, கீழே இறங்கி வந்தோம். திருக்கோட்டியூர் நம்பியின் இல்லத்தையும் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அந்த அக்ரஹாரத்திற்கு போனோம். அழகிய தெரு.எல்லா வீடுகளுக்கும் காவிப்பட்டையை பார்க்க முடிந்தது. நம்பியின் இல்லத்தின் ( சிலை இருக்கும் வீடு) முன்னே சிறிய திண்ணை இருக்கிறது. அமர்ந்து கொண்டேன் . நான் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்று சொல்லாமல் அடியேன் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்ற மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் 17 முறையெல்லாம் நம்மால் வரமுடியாது அல்லவா? அங்கிருந்து பார்த்தால் ராமானுஜர் அஷ்ட்டாங்க விமானத்தில் ஏறி மக்களிடம் சொன்ன இடம் தெரிகிறது. வீடு பூட்டியிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் ஏதோ ஒரு விசேஷத்திற்காக சென்றுள்ளார்கள் என்று எதிர் வீட்டு திண்ணையில் இருந்த மாமி சொன்னார். பக்கத்திலேயே இன்னோரு வீடும் திருக்கோட்டியூர் நம்பி இல்லம் என்னும் போர்டுடன் இருந்தது. உண்மையில் எந்த வீடு ? என்று மாமியிடம் வம்பு கேட்டேன். “ சிலை இருக்கு பாருங்கோ அதுதான்” என்றார். ”அப்போ இது “ என்றேன். அது அவாளே போட்டுண்டது” என்று மாமியும் தாழ்ந்த குரலில் வம்பு பேசினார்.கொஞ்சநேரம் அந்த ஒரிஜனல் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வீதியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம். ஓம் நமோ நாராயணா”ய.
( பொதுவாக அதிஷ்டானம், பாதவர்க்கம், கபோதவர்க்கம், க்ரீவா, சிகரம் ஸ்தூபி என்ற ஆறு அங்கங்களை உடையது விமானம். இதில் இருதளங்களிலும் கருவறையை அமைப்பதால் அஷ்டாங்கம். இதில் ஒன்பது மூர்த்திகளையும் அமைப்பதால் நவமூர்த்தி ஸ்தாபனம் தகவல் உபயம் : Sankara Narayanan G)

பட்ட மங்கலம்

திருக்கோஷ்ட்டியூருக்கு அருகில் 7 கிமீ தொலைவில்தான் இருக்கிறது பட்டமங்கலம் @ பட்டமங்கை. இங்கு விசேஷம் ஆலமரத்தின் கீழ் கிழக்கு நோக்கி தனி கோவில் கொண்டுள்ள தட்சிணாமூர்த்தி . சிவன் கோவிலின் உப கோவிலாக இருக்கிறது .ஏதொ ஒரு செட்டியார் கோர்ட்டில் கேஸ்போட்டு அவர் பாத்தியதையில் இருப்பதாக கல்வெட்டு சொல்கிறது. 3,5,7,9,12,108,1008, என்கிற கணக்கில் ஆலமரத்தைச் சேர்த்து தட்சிணாமூர்த்தி யை சுற்றி வந்தால் ஒவ்வொரு பலன் உண்டு. ( விவரங்களை நெட்டில் தட்டி தெரிந்து கொள்ளவும்) ஹி....ஹி.... 😁 நான் 7 சுற்று சுற்றினேன். பிரம்மாண்டமான ஆலமரம்.விழுதுகள் சூழ ரம்யமாய் இருக்கிறது . மஞ்சள் துணி முடிந்து வைக்கிறார்கள் வேண்டுதலாய்.வலப்பக்கம் கருப்பர் கோவில்.இடப்பக்கம் அய்யனார் கோவில்.அய்யனார் கோவில் அருகே உள்ள ஆளுயரம் உள்ள மனிதச்சுதை உருவங்களை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அமானுஷ்யமாக இருக்கிறது .பெரிய குளம், நடுவில் மண்டபம்.1930 ல் குடமுழுக்கு ஆனபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மாட்டியுள்ளார்கள்.குளக்கரையில் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள் " மதரஸா பட்டிணம்" படத்தை நினைவு படுத்துகிறது.

ஊர் மணம்.

இன்று அலுவலகத்திற்கு ஒரு திரைப்பட இயக்குனர் குழுவுடன் படப்பிடிப்பு தொடர்பான வேலையாக வந்தார்.வந்த வேலை பற்றி பேசி முடித்தவுடன் எந்த ஊர் என்றேன். கடலூர் என்றார். கடலூரேவா இல்ல பக்கத்திலா என்றேன்.நெய்வேலிகிட்ட என்றார். நான் விருத்தாச்சலம் தான் என்றேன்.நானும் விருத்தாச்சலம் தான். கடலூர்ன்னா சட்டுநு புரியும் என்று சொன்னேன் என்றார். அப்புறம் என்ன? பூதாமூர்,கிருஷ்ணன் தோட்டம்,வீரபாண்டியன் தெரு,ஆயியார்மடம்,கரிநாள், அறிவுமதியண்ணே, பெ.கருணாகரன்,கண்மணிகுணசேகரன்,கடற்கரை , என்று இருவருமாக கைகோர்த்து பேச்சில் ஊரையே உலாவந்தோம். ஊர்க்காரய்ங்கள பார்த்தாலே ஒரு சந்தோஷம் தாங்க. பெ.கருணாகரன் எழுதிய காகிதப்படகில் சாகசப்பயணம் நூலினை கொடுத்து தம்பியை வழியனுப்புனேன்.
நேற்று அலுவலகம் கிளம்பும்போது "இன்னிக்கு மதியத்திலிருந்து உங்களுக்கு சந்திராஷ்டமம்.வாயை பொத்திண்டிருக்கனும்."என்னும் எச்சரிக்கை யுடன் வழியனுப்பிவைத்தாள் மனைவி. சிக்னலில் ஓவர்டேக் செய்யாமல் காத்திருத்தல், சாலையில் குறுக்கே வருபவரிடம் புன்னகையுடன் வழிவிடுதல், ஏடிஎம் வரிசையில் நகத்தை கடிக்காமல் முன்னால் நிற்ப்பவரின் சட்டையில் உள்ள கோடுகளை எண்ணிக்கொண்டிருத்தல், அலுவலகத்தில் யாரிடம் பேசினாலும் அளந்து பேசுதல், போனில் வந்த உடனடி பிரசவிக்க வேண்டும் எனும் உயர் அலுவலர் உத்தரவிற்கு புன்னகையுடன் "லேபர் டேபிளில்தான் படுத்திருக்கேன் சார்" அஞ்சு நிமிஷத்தில் பிரசவித்துவிடுவேன்சார்.. என்னும் சாந்தமான பதில், என நேற்று பால்சாதங்கள் மாதிரியான சந்திராஷ்ட்டம எஃபக்ட்ஸ் எல்லா இடத்திலும் , நேரத்திலும், நீக்கமற நிறைந்திருந்தது. ஒவ்வொருநாளும் சந்திராஷ்ட்டமமாக இருந்தால் சன்னியாசி யாகவே ஆகிடலாம் போல.