Monday 18 August, 2014

திருஈங்கோய்மலை

               ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 

             என்று நம்மாழ்வாரின் ஒரு பாசுரம் உண்டு. முதிர்ச்சி அடைந்தால் முட்டி தளர்ந்துபோகும் உடம்பில் தெம்பும் இளமையும் இருக்கும் போதே மாலிருஞ்சோலை போய்வரவேண்டும் என்பதான பாடல்.கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் என்னென்ன பண்ணவேண்டுமோ அத்தனையும் பண்ணியாச்சு.இப்போது கெடுவதற்காக ஸ்டார்ட் ஆன சமயத்தில் கோவில் குளம் என அலைந்தால் முட்டி கழளாமல் என்ன செய்யும்.அப்படி ஒரு பாக்கியம் 16.8.14 அன்று கிடைத்தது.

            உயர்ந்தமலை அதில் ஒரு கோவில் பக்கத்திலேயே நிறைந்து ஓடும் காவிரி எப்படி இருக்கும் நினைத்துப்பருங்கள். அப்படியான ஒரு கோவில் தான் திருஈங்கோய்மலை.திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் (சாலை என்றுதான் பெயர்) முசிறி தாண்டி 1 கி.மீ இருக்கும் மலை.அகத்தியர் ஈ உருவத்தில் வழிபட்டதால் இந்தப் பெயர் என சொன்னாலும் ஈமலை,ஈவூர்,ஈகோயில், என மறுவினால் லாஜிக் இருக்கு.”ஈங்கோய்” என மறுவுவதை செரித்துக் கொள்ள முடியவில்லை.திருச்சி பக்கத்து மக்கள் எல்லாவற்றிற்கும் “ங்””ஞ்” சேர்த்து பேசுவது வழக்கம். அவர்களுக்கு என்பது ”அவிஞ்ஙளுக்கு” என விளிப்பார்கள் அப்படி ஏதோ மாறிவிட்டது போலிருக்கிறது.சரி கதைக்கு வருவோம்.

எபிசோடு 1:  ஒரு சமயம் தென்திசை வந்த அகத்தியர் சிவபெருமானை வழிபட இந்த கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவபெருமானை அகத்தியர் வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபோது, ‘வடிவம் பெற்றார். பின்னர் இந்த மலை மீது பறந்து வந்து கோவில் சன்னிதி கதவின் சாவித் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு மீண்டும் தனது பழைய வடிவம் பெற்று திரும்பினார் என்பது தல புராணம் சொல்லும் கதை.(உண்மையில் படியேறி வரும் கஷ்டத்துக்கு நாமும் ஈயாகவே மாறி பறந்து வந்திருக்கலாம் என எங்களுக்குத் தோன்றியது)
ஆடிக் கிருத்திகை அன்று படி பூஜையும், ஆடிப் பெருக்கு விழாவும் இங்கு சிறப்பாக நடைபெறுமாம். நாங்கள் போனபோது அவைகள் நடந்து முடிந்ததற்கான சுவடுகளை காண முடிந்தது.( சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர்கள்) மலை அடிவாரத்தில் மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சுவாமி கைலாசநாதர் என்றும், அம்பாள் கரணகடாட்ஷாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மலைமேல் உள்ள கோவிலின் அம்பாளின் பெயர்மரகதாம்பிகை. நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்று மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதானது என அர்ச்சகர் சொன்னார்.

எபிசோடு 2:  ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என போட்டி வந்தது. வாயு பகவான் தனது பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச் செய்தார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையை இறுகச் சுற்றிக்கொண்டார். அப்போது அந்த மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒரு பகுதிதான் இந்த திருஈங்கோய்மலை என்று கூறப்படுகிறது. சிவபெருமான், ஆதிசேஷனையும், வாயு பகவானையும் சமாதானம் செய்து இந்த மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில்(மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இவருக்கு திரணத் ஜோதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.அகத்தியர் வழிபட்டதற்கு பின்னர் திருஞானசம்பந்தர் இங்கு நேரில் வந்து வழிபட்டுதிருஈங்கோய்மலையாரேஎன்று ஆரம்பிக்கும் 10 பாடல்களையும், நக்கீரர் 70 பாடல்களையும் பாடியுள்ளனர்

     ஆண்டுதோறும் மாசி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணியில் இருந்து 6.35 மணிக்குள் 5 நிமிடங்கள் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவர் மரகதாசலேஸ்வரர் மேல் பட்டு பொன்னிற மேனியாக காட்சி அளிப்பதை பார்க்கலாம் எனவும் அர்ச்சகர் கூறினார்.
இந்த மலையின் அடிவாரத்தில் லலிதாம்பிகை பீடம் உள்ளது. இந்த இடம் முக்கிய வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் நலன்கருதி இங்கு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு  இங்கு பள்ளி அமைத்து பாடம் சொல்லி தரப்படுகிறது.

இங்கு கடவுள் பெண் தன்மையாக போற்றப்படுகிறதுலலிதாம்பிகை முதல் கடவுளாக கொண்டு இங்கு பூஜைகளும், பல நற்காரியங்களும் நடத்தப்படுகிறது.

காலை 10.00 மணிக்கு மேல்தான் சன்னதி திறக்கப்படுகிறது.உச்சி வெயிலில் கால் பொடிஒட்ட இறங்கி வருவது தீமிதித்தது போலிருந்தது.ஆசுவாச்ப்படுத்திக் கொள்ள ஒரே ஒரு மண்டபம் மட்டும் வழியில் உள்ளது. மற்றபடி கொஞ்சம் பெரிய போன்சாய் ஆலமரங்கள் மட்டுமே இளைப்பாறுவதற்கு.