Monday, 19 July, 2010

கம்பத்தடி ஆஞ்சனேயர்

11.07.2010 அமாவசையன்று கம்பத்தடி ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனத்திற்கு கட்டணம் கட்டியிருந்தேன்.சரியாக 12.30க்குள் சன்னதிக்கு வந்துவிடவேண்டும்.1.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் மூடிவிடுவார்கள்.அதற்குள் வந்துவிடவேண்டும். கம்பத்தடி ஆஞ்சனேயர் ஆரியபடாள் வாசல் தாண்டி துவஜஸ்தம்பத்திற்கு முன்னால் இருக்கிறார். எப்போதும் அரங்கனையே பார்த்துக்கொண்டு கைகூப்பியவாறு இருக்கும் ததேஜஸினால் நல்ல வரப்பிரஸாதி.வேண்டிக்கொண்டால் நிச்சயம் நடக்கும்.எனக்கு பத்துஅண்ணா தான் முதலில் சொன்னார்.நீண்டநாள் வேண்டுதல் ஏதேதோ காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.ஏகப்பட்ட டியூ.இன்னும் கூட ஒரு திருமஞ்சனம் சக்கரத்தாழ்வாருக்கும், கம்பத்தடி ஆஞ்சனேயருக்கும் ம் பாக்கி யிருக்கிறது.ஆனால் அவர்கள் ஏதும் எனக்கு பாக்கி வைக்கவில்லை. குறையொன்றுமில்லை.கோதைக்கும் தகவல் சொன்னேன்.நேரத்தில் வந்தாள்.நல்லசேவை.திருமஞ்சனம் முடிந்ததும் பட்டர் ”கம்பத்தடி ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம் செய்தோம் என சொல்லிவிட்டு பெரிய பெருமாளை தரிசிக்கப் போங்கள்” என கோதையிடம் சொல்ல ஒரே ஓட்டமாக அரங்கனை பார்க்கச் சென்றோம்.இன்று பாத சேவை கிடையாது.உள்ளே நுழந்ததும் கள்வன் நம்பெருமாள் என்னைப்பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.”நன்னா காய விட்டேனா” எனபது மாதிரி பார்த்தார்.நாலஞ்சு மாசமா கண்ணுலயே படலை.பங்குணி உத்தரம் சேத்தியில் பார்த்தது.என்ன பாக்கியமோ இன்னிக்காவது காட்சி தந்தாயே என உள்ளம் மருகியது.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எனக்கு உன் கீழே வாழ வாழ்வு தந்தாய்.ஆண்டாளுக்கே ஆட்டம் காட்டியவன்.நானெல்லாம் எம்மாத்திரம்?


ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
திருவரங்கம் மேயான் திசை

பி-கு

திருமஞ்சனம் முடிந்ததும் ஒரு வட்ட வடிவில் (வடை சைசில்) சந்தனம் தருகிறார்கள். திருவடியில் வைத்தது உடையாமல் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என பட்டர் கூறினார்.வீட்டிற்கு வரும் வரையில் ஜெயந்தி அதனை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வ்ந்தாள்.நான்கு வழிச்சாலை பூரணமான பின்பு இன்றுதான் அவ்வழியில் சென்றேன்.நல்ல சாலை.20 நிமிடத்தில் ஸ்ரீரங்கதிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டோம்.
Saturday, 3 July, 2010

திருவானைக்கா

திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு உள்ளே சென்று வழிபட ரூ.5.00 கட்டணம் இருந்து வந்தது.நவராத்திரிக்குப்பின் இன்றுதான் திருவானைக்கா சென்றேன்.இன்று கட்டணம் உயர்ந்துவிட்டது.ரூ.10.00.அம்மன் சன்னதி விட்டு வெளியேவரும் வழியில் குபேர லிங்கம் செல்லும் வழி என பெரிதாக போர்டு மாட்டியிருந்தது.போனதில்லை.போய்வந்தேன்.லிங்கம் தனியே ஒரு கம்பி கிரில் கேட்டிற்கு உள்ளே இருந்தது.ஒருவர் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி பூ,விளக்கு காண்டிராக்ட் மாறிவிட்டது போல இருக்கிறது.பூ சன்னதிக்கு வெளியே விற்கும் என நம்பி ஏமாந்தேன்.புதிய காண்டிராக்டர்கள் தொழிலுக்கு புதியவர்கள் என்பது வழிய வழிய நெய்யை அகலில் நிரப்பியதிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.பூ இல்லை.பக்கத்தில் புளியோதரை ஸ்டாலில் இருந்த அழுக்கு வேஷ்டி அய்யங்கார் ஒருவரிடம் விசாரித்தேன்.(அழுக்கு வேட்டி என்பது அடையாளத்திற்குதான் மன்னிக்கவும்)” பூ இல்லங்களா”
இந்தவருஷம் காண்டிராக்ட் எகிறிடுத்து சார்.15 % அதிகமாம்.பழைய ஆள் எடுக்கலை.ஆனா தாயார் சன்னதி பூ காண்டிராக்ட் அவுங்கதான் எடுத்திருக்காங்க” என்றார்.

பூ இல்லாமல் சக்கரத்தாழ்வாரை சந்தித்ததில்லை. எனவே தாயார் சன்னதி சென்று தாமரை

வங்கிவந்து சக்கரத்தாழ்வார் சேவை செய்தேன்.

இந்த பிளாக்கில் நானே ஆடிக்கொருநாள் அம்மாவாசைக்கொருநாள் பதிவு செய்கிறேன்.இதை பார்த்து விட்டு ஒரு வாசகர்? எனக்கு மெயிலினார்.” அதாவது அவர் ஸ்ரீரங்கத்திற்கு வரப்போகிறாராம்.கோயிலில் தரிசனத்திற்கு உதவ முடியுமா என கேட்டுள்ளார்.ஒரு உண்மையை சொல்லியாக வேண்டிய கட்டாயம். எனக்கு ஸ்ரீரங்கத்தில் ரங்கன்,தாயார்,சக்கரத்தாழ்வார் தவிர வேறு யாரையும் தெரியாது. கடந்த 18 வருடங்களாக சனிக்கிழமை தோறும் ஸ்ரீரங்கம் சென்று வருகிறேன், கண்டிப்பாக சக்கரத்தாழ்வார் பார்ப்பேன்,வாய்ப்பிருந்தால் தாயார், நம்பெருமாளுக்கு என்ஞாபகம் வந்தால் நான் யோசிக்காமலேயெ எதிரில் வந்து ஏதாவது ஒரு மண்டபத்திலிருந்துகொண்டு வாடா பையா...என வாஞ்சையோடு அழைப்பார்.
அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தால் ஆறு மாசமானாலும் முகம் காட்ட மாட்டார்.
பெரிய பெருமாள் பெரிய பெருமாள்தான்.
வருஷத்திற்கு அய்ந்தாறு தடவை சேவை கிடைக்கும்.
தாயாருக்கு அன்பு அதிகம்.எனக்கு எப்போது என்ன வேண்டும் என அவளுக்குத்தெரியும்.அசடு மாதிரி ஏதாவது ஏடாகூடத்தில் இறங்கறேன்னு வச்சுக்குங்கோ...இது இவனுக்கு ஒத்து வராது...ஆழம் தெரியாம காலவிடறான்..ன்னு காரியத்தை நிறுத்தி விடுவாள்.அப்புறமா புரியும் அம்மா அம்மாதான்னு.பாத்தாலும் பாக்கட்டாலும்,வேண்டிண்டாலும் வேண்டிக்காட்டாலும்,வாங்கிண்டு போனாலும் வாங்கிண்டு போகாட்டாலும்...நம்ம கொழந்த...என்ற வஞ்சை எப்போதுமிருக்கும்.பெருமாளண்டையும் சொல்லி வைத்துவிடுவாள் நம்ம கொழந்தகிட்ட விளையாடாதேள்னு.