Tuesday 15 September, 2015

அஹோபிலம் யாத்திரை 1

அகோபிலம் போக வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. பெருமாளை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வில்லிபுத்தூர் கோதை பாசுரங்கள் மூலம். இன்னொருவர் ஸ்ரீரங்கத்துக் கோதை என் சக ஊழியர். ஸ்ரீரங்கத்துக் கோதை தான் முதலில் சவுரிராஜன் அவர்களின் பயணக்குழுவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் அகோபிலம் போய் வந்து கதை கதையாய் சொன்னார். உடலில் வலு வேண்டும் , மனதில் திடம் வேண்டும், ஒன்பது நரசிம்மரையும் சென்று சேவிக்க என பயமுறுத்தியும் இருந்தாள். ஒரு சனிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது அகோபிலம் யாத்திரை பற்றிய நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். அதிலிருந்த எண்ணிற்கு போன் செய்து விவரங்கள் கேட்டேன். ஒரு நபருக்கு ரூ.6000 உணவு, உறைவிடம், ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். ஜெயந்தியிடம் சொன்னபோது நாட்களைக் கணக்குப் பண்ணி போகலாம். எதுக்கும் மாத்திரை போட்டுக்கலாம் என்றாள் பெண்ணின் பெரும்பாட்டை மனதில் வைத்து. “ கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்”  போகமுடியவில்லை என்றாலும் அய்ம்பதிலாவது இந்த வாய்ப்பு கிடைத்ததே என பெருமாளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.எல்லாவற்றிற்கும் ஒரு காலம் கனிய வேண்டும். ஒரு அரசு ஊழியர் குறைந்தது 20 வருடப் பணி முடிந்த பின்னர்தான் நினைத்தபடி வாழ பொருளாதாரம் இடம் கொடுக்கிறது. 10 வருடங்களுக்கு முன் எனில் ஆறாறும் பண்ணிரெண்டு என மனசு கணக்குப் போட்டு “ சரி இப்ப வேண்டாம்” என தள்ளி வைத்திருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஜீலை 31 வெள்ளி அன்று காலை 5.00 ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியிலிருந்து கிள்ம்பி ஆகஸ்டு 2 ஞாயிறு அன்று இரவு மீண்டும் திரும்புவதாகப் பயணத்திட்டம்.எத்தனை பேர் வருகிறார்கள், எதுமாதிரியான ஊர்தி, ,உணவு எப்படி இருக்கும், என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றுவரவேண்டும் எனவும் பெருமாளை சேவிப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் நானும் ஜெயந்தியும் முடிவு செய்து கொண்டோம். ஏனெனில் நிறைய எதிபார்ப்புடன் சென்று அவ்வாறு இல்லை எனில் மனம் பக்தியில் லயிக்காமல் குத்தம் குறை சொல்வதிலேயே நின்று விடும் என்பது தான். பணத்தை ”ஸ்ரீரங்காடிராவல்ஸ்” கணக்கு எண்ணிற்கு டிரான்ஸ்பர் செய்தேன். டிராவல்ஸ்ஸிலிருந்து பேசினார்கள்.நீங்க ரொம்ப லேட்டாத்தான் கன்ஃப்பார்ம் செஞ்சிருக்கீங்க அதனால முன்சீட்டெல்லாம் எதிபார்க்காதீங்க கடைசிசீட்டுக்கு முன்னால தான் கிடைக்கும் என்றார். வாய்ப்பிருந்தால் முன்னால் கொடுங்கள் இல்லையென்றால் பரவாயில்லை என்றேன்.வெள்ளியன்று அதிகாலை வடக்கு வாசலுக்கு வந்த போது முன் சீட்டு இருக்கையினை ஒதுக்கினார் சவுரி. பெரியவர்கள் நிறைய பேர் காத்திருந்தனர். மொத்தம் 3 ஊர்திகள். பெரியது ஒன்று இரண்டு சிறியது மொத்தம் 39 நபர்கள்.ஆங்காங்கு காத்திருந்தவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு சமயபுரம் கோவில் வாசலில் கற்பூரம் கொளுத்திவிட்டு கிளம்பியது.
பாதுகாப்பான பயணம்.சீரான அளவிலேயே ஊர்திகள் எல்லாம் அணிவகுத்து பயணித்தது. திருக்கோவிலூர், வேலூர்,சித்தூர், கடப்பா வழியாகப் பயணம். மிக நீண்ட பயணம். வேலூர் வரை ஏ.சி.போடவில்லை. சவுரி தகப்பனாரின் உடல் நலம் கருதி அவர் உடன் வரவில்லை.வாட்ஸாப் மூலமாக அவருக்கு செய்தி அனுப்பினேன். ஏ.சி ஊர்திப்பயணம் என்று அறிவிக்கவில்லை. இருந்தாலும் வேண்டும் போது போடச்சொல்லியிருக்கிறேன் என பதிலனுப்பினார். கொஞ்சநேரத்தில் ஏசி போடப்பட்டது.
வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி காலை சிற்றுண்டி.காபி.அது போலவே மதிய உணவு ஆந்திர எல்லைக்குள்.மாலை 7.00 மணி அளவில் அகோபிலம் வந்தடைந்தோம் சிறு தூறலுடன்.








வழியில் எந்த இடத்திலும் அகோபிலம் தூரம் தொடர்பான அறிவிப்புப் பலகை இல்லை.”பெருமாள் என்னை இன்னும் அழைக்கவில்லை” “ நாம நெனைச்சா போக முடியாது பகவான் நினைச்சாத்தான் போகமுடியும்” என்பதான பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அது தவறு. ”நாம் பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் பெருமாள் நம்மை நோக்கி எட்டு அடி எடுத்துவைப்பார் “ என்பதே உண்மை.இரவு அகோபில மடத்தில் தங்க பெரிய ரெடாக்சைடு ஹால் கொடுத்தார்கள். தனி அறை ஏதாவது கிடைக்குமாஎன மடத்தின்நிர்வாகியிடம் கேட்டோம் ஒரு அறை மட்டும் இருக்கிறது மூன்று பேர் தங்கும் அறை. ஒரு நாளுக்கு 800 என்றார். என்னுடன் அறை கேட்கவந்த சாரநாதன் அவர்களும் நாம் பகிர்ந்து கொள்ளலாமா? என கேட்க சரி என்று சொல்லி அந்த அறையில் தங்கினோம். நல்ல தூக்கம், காலையில் 5.00 மணிக்கு ரெடியாகிவிடவேண்டும் என்று நேற்றே பாலாஜி சொல்லியிருந்தார்.சவுரியின் இடத்தில் இப்போது அவர்தான். எழுந்து குளித்து தயாரோனோம். சூடான பொங்கல் 6.00 மணிக்குள். எப்படி சாப்பிடுவது இவ்வளவு சீக்கிரமாக என நினைத்தேன். ஆனால் எப்போதும் சாப்பிடுவதைவிட சற்று கூடுதலாகவே சாப்பிட்டேன். அவரவர் வேனில் ஏறி மீண்டும் பயணம். ஒரு மலை அடிவாரத்தில் வண்டி நிற்க கெய்டு கண்ணன் எல்லோரையும் நிற்கவைத்து கிளாஸ் எடுத்தார். இடையிடையே நிறைய ஸ்லோகங்கள் வேறு சொன்னார். நான் காமிராவும் கையுமாக சுற்றி சுற்றி சுட்டுக்கொண்டிருந்தேன். நாங்கள் நின்ற இடம் உக்ர நரசிம்மர் ஆலயத்திற்கு எதிரே. ஒரு மலையை இரண்டாக பிளந்தது போல் இருந்தது.பிளந்த ஒன்றின் மீது அக்கோயில் இருந்தது.மூலவர் சிறு பாறையின் குகைக்குள் இருக்கிறார். ஆதிசங்கரரால் பிரதிக்ஷை செய்யப்பட்ட சிவலிங்கமும் பக்கத்தில் இருக்கிறது. அவ்விடத்தில் ஒரு பாதாள குகை இருந்ததாகவும் அதனுள் ஒரு ஜீயர் ஒருமுறை இறங்கினார் திரும்பி வரவேயில்லை என்றும் இப்போது இரவு நேரங்களில் அவர் வெளியேவந்து நரசிம்மரை பூஜை செய்கிற மணி ஒலி கேட்கிறது என்றும் சொன்னார்கள்.அந்த இடம் மூடி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது.சேவை முடித்து வெளியே வந்ததும் எல்லோருக்கும் ஒரு மூங்கில் தடி தரப்பட்டது. மூன்று தண்டக் காரர்கள், இரண்டு தண்டக்காரர்கள், யாராயிருந்தாலும் இந்த ஏகதண்டம் இல்லாமல் மலைஏற முடியாது போல என நினைத்துக்கொண்டேன்.
இனி சுவாரசியமான மலைப்பாதை.



முடியாதவர்களுக்கு டோலி ஏற்பாடு செய்து தரப்பட்டது.ரூ.2000. வயதில் மூத்தவர்கள் நிறைய பேர் நடந்தே தான் வந்தனர். ஓர் இருவர் மட்டும் பெருமாள் மேல் கொண்ட பேராவலால் முடியாத நிலையிலும் டோலியில் வந்தனர். ஒரு ஆறு வழிந்து ஓடிவரும் வழியிலேயே பயணம். பெரும் பாறைகள் கொண்ட பாதை.ஆங்காங்கே ஆற்றைக் கடக்க மரப்பாலம் என மிக ரம்யமான சூழ்நிலை. நினைவில் இருந்த மலைப்பு நடக்க நடக்க எளிமையானது. காலை நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் இல்லை. அடுத்து அடைந்த கோவில் ”வராக நரசிம்மர்” .சிறு முன் மண்டபம் . அதற்கு அப்பால் ஒரு மலைக்குகை. கிட்டத்தட்ட சமணர் படுக்கை இருக்குமே அதுமாதிரியான பகுதியில் ஸ்வாமி இருக்கிறார். தனது மூக்கின் மேல பூமகளை தாங்கி நிற்கிறார். பட்டர் ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்கிறார். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் எல்லா கோவிலிலும் உள்ள மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்வாமியின் திருவுருவம் வெளியே உள்ள மண்டபத்தின் மேல் வெளிச்சத்தில் தெரியும்படி சுதைச் சிற்பமாக வடித்துள்ளார்கள்.
அடுத்த பயணம் ”ஜ்வாலா நரசிம்மர்” இரணியணை வதம் செய்ய அவதாரம் செய்த ஸ்தம்பம் பெரிய மலையாக இருக்கிறது அது இரண்டாகப் பிளந்த வாறு உள்ளது. அந்த நெடிய மலையின் அடிவாரத்தில் இருக்கிறது ஜ்வாலா நரசிம்மர் சன்னதி. அதுவுக் குகை தான். கெய்டு கண்ணன் டார்ச் லைட் செல்போன் லைட் மூலமாக வெளிச்சம் காட்டி சேவி சாதிக்க வைத்தார்.போகும் வழியில் தாரையாய் ஊற்றும் தண்ணீர் தலையில் பட்டால் புண்ணியம் அதை குடிக்க வேண்டாம் எனவும் அதன் அருகில் உள்ள சுனையில் உள்ள நீர் வதம் முடித்து கைகழுவிய இடம் எனவும் சொன்னார்கள், அந்த தண்ணீர் சற்றே சிகப்பாக இருக்கிறது அதனை பாட்டிலுல் பிடித்துக்கொள்ள கேட்டுக் கொண்டார்கள். பாட்டில் இல்லாதவர்களுக்கு அங்கேயே விற்கிறார்கள். பானகம் விநியோகம் நடக்கிறது. தேவாமிர்தமாக இருக்கிறது அந்த களைப்பிற்கு. மழைக்காலங்களில் அருவி பேரிரைச்சலோடு கொட்ட மலையை ஒட்டிய வாறு அதனை கடக்கும் அனுபவம் இருக்குமாம்.( லிங்க் பார்க்க https://www.youtube.com/watch?v=epA_5kCMPuU