Sunday, 23 November, 2014

திருவிசைநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள்

நேற்று 22.11.2014 கார்த்திகை அமாவாசைந்திருவிசநல்லூர் போய் வந்தேன். (புத்தகங்களில் திருவிசைநல்லூர் எனவும் பெயர்ப்பலகைகளில் திருவிசநல்லூர் எனவும் இருக்கிறது எது சரி?) பல வருடங்களுக்கு முன் நான் வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்காரரின் இல்லத்தில் “ ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்” என்னும் நூல் படிக்கக் கிடைத்தது. மஹாபெரியவாளின் வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளின் தொகுப்புமாக இருந்தது அந்தப்புத்தகம்.முதன் முதலில் அந்தபுத்தகத்தில் தான் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் பற்றி நான் படித்தேன்.


அந்தப்புத்தகம் எனக்கு வாழ்வின் பல திருப்பங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதன் பிறகே தெய்வத்தின் குரல் தொகுப்புகளைக் அய்யாவாள் வரலாறு படிக்க இந்த லிங்க்குச் செல்லலாம்.http://www.sriayyaval.org/lsdetail.html  (தமிழில் http://tamilthamarai.com/devotion-news/2230-thiruvisanallur-temble-tamil.html   http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_42.html ) .

        அப்போதிலிருந்து நானும் ஒவ்வொரு கார்த்திகை அமாவாசையின் போதும் திருவிசநல்லூர் போகவேண்டும் என முயற்சித்து ஏதேனும் காரணங்களால் அது நிகழாமல் போய்விடும். இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது.திருவிசநல்லூர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது. (எப்படிப் போவது  http://www.sriayyaval.org/contact.html#reach ) காலை 6.30 க்கு திருச்சியிலிருந்து கிளமபினோம். 8.30 க்குள் திருவிசைநல்லூர் அடைந்துவிட்டோம்.காவிரிக்கரையில் உள்ள ஒரு ஊர் இது. முதல் நாளே கும்பகோணம் சாஸ்திரிகள் கேசி  சில டிப்ஸ்களை செல்பேசியில் வழங்கினார். முதலில் மடத்துக்கு எதிரே உள்ள காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மடத்துக்குச் செல்லும் கியூவில் நிற்கவேண்டும் எனவும். பாத்திரங்கள் பைகளை காரிலேயே வைத்துவிடவும் எனச் சொல்லியிருந்தார்.
திருவிசநல்லூரை அடையும் வரை ஒரு பரபரபரப்பும் தெரியவில்லை. வானம் மூடிக்கொண்டு தூரலாக இருந்தது. ஊரை நெருங்கும் போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகங்களும் குளித்துவிட்டு வருபவர்களும், குளிக்கப் போகிறாவர்களும் என ஒரே பரபரப்பு.

சிறிய சாலை என்பதால் காவிரிக்குப் போகும் வழியில் இறங்கிக்கொண்டோம். மழை வலுத்தது. மடத்துக்குச் செல்ல நீண்ட கியூ. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என எல்லோரும் வரிசையில். உள்ளம் குதூகலித்தது. ஆற்றுக்கு போகும் வழியில் மஞ்சள், குங்குமம், கதோலை கருகமணி எல்லாம் விற்கிறார்கள். எதற்கென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. மாலை தான் கேசி சொன்னார். ஒரு நதியில் குளிப்பதற்கு முன் முதலில் தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு கொஞ்சம் உட்கொண்டு எதையேனும் கொஞ்சம் ஆற்றில் விட்டுவிட்டு பிறகு குளிக்கவேண்டும் என்பது சாஸ்திரமாம்.

காவிரி என்றால் திருச்சியில் பார்த்துவிட்டு அங்கு பார்த்தால் உய்யகொண்டான் வாய்க்கால் போல இருந்தது. அவ்வளவு சிறியது,10 படிக்கட்டுகள் இருக்கும்.

 கரையோரம் சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தனர். மழையோ கொட்டிக்கொண்டிருந்தது.

மழை பொழியும் போது ஆற்றில்  குளிப்பது எவ்வளவு சுகம். கொஞ்ச நேரம் குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கியூவில் வந்து நின்றோம்.கியூ சாலையில் கொஞ்சதூரம் சென்று இருபுறமும் தென்னைமரங்களடர்ந்த தோப்புக்கு இடையே சென்றது. ஒன்றறை மணிநேர கடத்தலுக்குப் பிறகு அய்யாவாள் மடத்தை அடைந்தோம்.


இளைஞர்கள்  4 பேர் கிணற்றின் மீது நின்று கொண்டு வாளியில் தண்ணீர் இறைத்து எல்லோருக்கும் ஊற்றினார்கள்.முழுவதும் நினையும் அளவிற்குக் குளிக்க முடியாது ஆனால் தலை நன்றாக நனையும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . சிலர் 5.00 ரூ வெளியில் வாங்கிய பாட்டில்களில் ஊற்றும்போதே பிடித்துக்கொள்கிறார்கள். குளித்து முடித்தவுடன் கியூ அய்யாவாள் கோவிலுக்குள் செல்கிறது. ஈரத்துடன் தான். இந்தக் கோவிலுக்கு மட்டும் ஈரத்துடன் செல்லலாமாம் ( கேசி தகவல்) .அங்கு அய்யாவாள் பூஜித்த விகிரகங்களும் , அய்யாவாள் விக்ரகமும் இருக்கிறது. வணங்கிக்கொண்டு வெளியே வந்தால் விபூதி குங்குமம் வழங்குகிறார்கள்.வருபவர்கள் கண்டிப்பாக சாப்பிட்டுப் போகவேண்டும் என மைக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு கார் ஷெட்ல் வைதீகர்கள் தர்ப்பணம் பண்ணிவைக்கிறாரகள். ஏக கூட்டம்.முன் யோசனை இல்லாததால் தர்ப்பணத்துக்கு கொண்ட்சு வந்த பொருட்கள் எல்லாம் காரிலேயே இருந்துவிட்டது. சரி என்று காவிரி கரைக்கு போய் செய்து கொள்ளலாம் என வெளியே வந்தோம். மழை விடவில்லை, எதிரே உள்ள காவிரிக்கரையிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் தள்ளி கூட்டம் இல்லாத இடத்தை அடைந்து கரையோரமாக தர்ப்பணம் செய்யலாம் எனத் தோன்றியது.அதன் படி கொஞ்சம் பயணம் செய்து யாருமில்லாத பகுதியில்  தடுப்பணை மாதிரி இருந்த ஒரு கரையோரம் இறங்கித் தர்ப்பணம் செய்தேன்.

 சலசலக்கும் காவிரிக்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது.போன மாதம் திருச்சி காவிரியில்,இந்த மாதம் திருவிசநல்லூர் காவிரியில். தர்ப்பணம் முடித்து கரையேறினேன் எதிரே ஒரு வேப்பமரம். அந்த மரத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டு அதில் ஒரு படம் சொருகப்பட்டிருந்தது. உற்று நோக்கினேன். “ நான் இருக்கிறேன்” என்ற வாசகத்துடன்  புன்னகைத்தப்படி மஹாபெரியவா படம். கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
Thursday, 20 November, 2014

அவள் அப்படித்தான்.

           


                    இன்றோடு ஒரு வருடம் ஓடிவிட்டது பாலா அத்தை மறைந்து.எங்கேயோ இருப்பது மாதிரியே இருக்கிறாள். அழகான ராட்சஷி.60 வயது வாழ்ந்து மறைந்தது போலவே தோன்றவில்லை. என்னமோ அல்ப ஆயுசில் மறைந்து விட்டது போலவே இருக்கிறது.அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டாள். பாலா அத்தை அப்பாவுக்கு கடைசி தங்கை. ரொம்பச் செல்லம். அந்தப்பீடம் நான் பிறந்ததும் பறிக்கப்பட்டது. அப்பாவின் கடைசி செல்லம் நானானேன் ( வழிச்சு குத்தின தோசை).அத்தைக்கும் நான் என்றால் ரொம்பப் ப்ரியம்.சின்ன வயதில் எனக்கு ரெட்டைப் பின்னல் பின்னுவதும், தாடை வலிக்க அழுத்திக்கொண்டு என் கண்ணில் மையிடுவதும்,அத்தையின் அன்றாடப் பணிகளில் ஒன்று.

              எலந்தப் பழக் கூடைக்காரி வீட்டு வாசலில் கூடையை இறக்கிவைத்துவிட்டால் மீண்டும் அதை தூக்குவதற்குள்  இரத்தக்கண்ணீர் வரவழைத்துவிடுவாள் அத்தை. அளக்கும் போதே தான் ரெண்டு எனக்கு ரெண்டு என பழம் பாஸ் ஆகிக்கொண்டே இருக்கும்.உழக்குக்கு மேல் இன்னும் ஒரு உழக்கு அளவிற்கு கையை வைத்து அளக்கும் அத்தையின் சாமர்த்தியம் அழகு.நடு நடுவே அந்த கூடைக்காரியிடம் குசலம் விசாரிப்பு வேறு நடைபெறும்.

           என் பால்யம் அத்தையுடன் பெரும்பாலும் இருந்தது.ஆற்றில் தண்ணீர் வந்து வடியும் சமயத்தில் விடுமுறை நாட்களில் அத்தையுடன் ஆற்றுக்குச் செல்வேன். துணிகளை சின்ன மூட்டையாய்க் கட்டி என் தலையில் வைத்துவிட்டு தானும் ஒரு மூட்டையுடன் ஆற்றுக்கு வருவாள்.அத்தை கரையோரம் துணி துவக்க நான் நீரில் ஊறிக்கொண்டிருப்பேன் துணி முடித்து திரும்பும் வரை.

      எதையும் சாதாரணமாக பார்க்கவோ, சொல்லவோ தெரியாது அத்தைக்கு. எல்லாவற்றிலும் ஒரு ஆச்சரியமும், அதிசயமும் இருப்பதாகவும் அதை அத்தைதான் கண்டுபிடித்தது போலவும் பேசுவாள். அது உப்புபெறாத விஷயமாக இருக்கும் ஆனால் அத்தை அத்தனை ஆலாபனைகளோடு நீட்டி முழக்கி சொல்வாள். எனக்கு அப்போதெல்லாம் அது தேவதைகள் நிறைந்த உலகில் சொல்லப்படும் கதைபோல இருக்கும்.

         அத்தையின் கையை பிடித்துக்கொண்டு அவள் வேகத்துக்கு விருத்தாம்பாள் கோவில் சுற்றுவது அவ்வளவு லேசு அல்ல.தினமும் 16 சுற்று சுற்றுவாள். எல்லாமே அசுர சாதகம்தான்.ஏதோ ஒரு சதவீதம் தப்பி அத்தை பெண்ணாக பிறந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றும்.

           சுடுகாட்டுக்குப் வரும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா?. என் பாட்டி, பெரியம்மா, அத்திம்பேர், அப்பா,சித்தப்பா என எல்லோருடைய எரியூட்டல் நிகழ்விலும் நான் சுடுகாட்டில் அத்தையுடன் இருந்திருக்கிறேன். நேற்று எரிக்கப் பட்ட உறவுகளை இன்று கையில் கண்டங்கத்தரி கட்டிக்கொண்டு குச்சியால் சாம்பலைக் கிளறி தேடுவாள். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கமெண்ட் அத்தையிடமிருந்து வரும். இந்த எலும்பை பார்த்தியா? மஞ்சளா இருக்கு பார்? எல்லாம் அவ்ளோ மாத்திரை மருந்து என அப்பாவுக்குச் சொன்னாள்.” ”ஒரு எலும்பு கூட கிடைக்கலையே? பூ மாதிரி பஸ்பம் ஆயிட்டாரே?”- இது திருவாரூர் அத்திம்பேருக்குச் சொன்னது.கிட்டத்தட்ட பிரேதத்தை வைத்து அனாடமி வகுப்பெடுக்கும் மருத்துவ ஆசிரியரைப்போல அத்தை சொல்லிக்கொண்டு போவாள்.எனக்கு அத்தையின் இந்த ஆராய்ச்சியெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

               ஒரு வசந்த காலத்தில் அத்தைக்குத் திருமணம் ஆனது. அந்த ராஜகுமாரி எங்கள் வீட்டைவிட்டு சந்தோஷமாக டாடா காட்டிக்கொண்டே போனாள். பொதுவாக திருமணமாகி புகுந்த வீடுச் செல்பவர்கள் கண்கலங்குவார்கள் அல்லவா அந்த மரபெல்லாம் அத்தையிடம் இல்லை. வேனில் ஏறிக்கொண்டு டாடா காட்டினாள். அப்பாவுக்குத் தான் கண்கலங்கியது. ஒரு பெண் கணவனால் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் இருந்துவிட்டால் அவள் முகத்தில் இருக்கும் பூரிப்புக்கு எல்லையே இல்லை.அத்தைக்கும் அப்படியொரு ராஜகுமாரன் தான்  வாய்த்தார்.அவள் கையில் கிடைத்த ஸ்டியரிங் மூலம் அவள் விரும்பியபடியெல்லாம் பயணித்தாள்.

                   கால ஓட்டத்தில் ஒரு சமயம் அவளை பகைத்துக்கொண்டு நான் திருமணம் செய்தபோது பலமாக எதிர்த்தாள். சாபம் விட்டாள்.செல்லும் இடங்களில் எல்லாம் வன்மத்தை விதைத்தாள்.எதிலும் தீவிரம் தான்.

                       எனக்கு மகன் பிறந்த உடன் பார்க்க ஓடி வந்தாள். அதன்பிறகான என் வளர்ச்சியை கண்டு பெருமைப்பட்டாள்.எந்த நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் ஓடி வந்து ”வாடா மணி” என வாஞ்சையுடன் அழைப்பாள். பாசாங்கு இருக்காது. எல்லோரும் பார்க்கும்படி தனியே அழைத்துப் போய் ஏதாவது பேசுவாள். திருமண வைபவங்களில் என் மனைவி ஜெயந்தி எங்கிருக்கிறாள் என்று தேடிவந்து பூவை தலையில் வைத்துவிடுவாள்.

                எல்லாவற்றிலும் வேகம்…அன்பு காட்டுவது என்றாலும், அதிகாரம் செய்வது என்றாலும், அடியோடு வெறுப்பது என்றாலும்….அது தான் பாலா அத்தை. பெரியவ்ன் ஆனபிறகான காலங்களைவிட பால்யத்தில் குறைந்தகாலம் பாலாஅத்தையுடன் இருந்ததே இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது எந்தக் கசடும் கலக்காத நதியைபோன்றது.

     இப்போது ஏதாவது சந்தோஷத்தை பகிரவேண்டிய தருணத்தின் போது அத்தையைத்தான் முதலில் தேடுகிறது மனது. . இப்போதும் நான் நடு ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பது போலும் கரையில் அத்தை துணி துவைத்துக்கொண்டிருப்பது போலும் தான் உணர்கிறேன்..

          இப்படியெல்லாம் எழுதப்பட்டதனால் இவள் தான் பாலா அத்தை என எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அவள் யாராலும் அளக்கமுடியாதவள். பிரம்மனின் அபூர்வப் படைப்பு. என் சந்ததியில் யாருக்காவது அவள் மீண்டும் பிறப்பாள்.அவளுக்கு வாழும் ஆசை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது.வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டவள் அவள். அத்தை அழகானவளா? ஆமாம்…கோபக்காரியா? ஆமாம்…..அன்பானவளா? ஆமாம்….. குழந்தை மாதிரியா? ….ஆமாம்,…இன்னும் எத்தனை ஆமாம்களும் போடலாம்…. ஏனெனில் “ அவள் அப்படித்தான்”

Wednesday, 19 November, 2014

ருத்ரையா

எங்கள் ஊரில் மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தன. சந்தோஷ்குமார், ராஜேஸ்வரி, தங்கமணி, மொதகொட்டா, நடுகொட்டா, கடேசிகொட்டா, இப்படித்தான் எங்கள் மக்கள் அத் திரையரங்குகளை பேரிட்டு அழைப்பார்கள். போனவாரம் விருத்தாசலம் போனபோது ”நடுகொட்டாய்” பாழடைந்து இருந்ததைப்பார்த்தேன்.


 ”அவள் அப்படித்தான்” 1978 ல் வெளி வந்த போது (14 வயதுநடுக்கொட்டாய் - ல் போய் பார்த்தேன் கொஞ்சநாள் முன்னால் அப்படத்தின் முழு படத்தி லிங்க் அறந்தை மணியன் https://www.facebook.com/aranthai.manian?fref=ts  அவர்கள் மூலமாக முகநூலில்  https://www.youtube.com/watch?v=YKXXu4Dl_ps   கிடைத்து மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது .வசனம் வண்ணநிலவன்,சோமசுந்தரேஷ்வர்,ருத்ரையா என டைட்டிலில் வரும்.செதுக்கிய வசனங்கள்.டாய்லெட் காட்சியைக்கூட அற்புதமாக காட்சி படுத்தியிருப்பார்.அந்த வயதில் அதற்கு முன் நான் பார்த்த படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது என்பது மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்ன புரிந்து விடப்போகிறது 14ல். அந்தப்படம். எங்கள் ஊரில் ஓடவில்லை. மூன்று நாளில் தூக்கிவிட்டார் செட்டியார்.    கொஞ்சநாட்களுக்குப் பிறகு மீண்டும் நடுக்கொட்டாயிலேயே இப்படம் திரையிடப்பட்டு ஓடியது. அடுத்து கிராமத்து அத்யாயம் ….1980ல் நந்தகுமார் கதாநாயகன். (அந்தக்கால பவர்ஸ்டார் மாதிரி இருப்பார்.)
பாரதிராஜாவே 77 ல் பதினாறுவயதினிலே கிராமத்து சப்ஜக்ட் எடுத்துவிட்டு 78 ல் சிகப்பு ரோஜாவுக்கு நகரத்துக்கு குடிபெயர்ந்தார். ருத்ரையா நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து நட்டமானார். இளையராஜாவின் அற்புதமான பாடல் பட்டி தொட்டி எங்கும் அக்காலத்தில் பாடப்பட்டது “ ”ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது”.அதே படத்தில் “பூவே இது பூஜைக்காலமே” பாடல் இளையராஜாவிடமிருந்து இளையராஜா காப்பி அடித்த மாதிரி இருக்கும். https://www.youtube.com/watch?v=HU_qgIJe7Mw .”ஊதக்காத்து வீசயில குயிலு கூவையில” பாடல் பிரபலமானது.நல்ல படங்கள் ஏன் ஓடுவதில்லை என்பற்கான ஸ்கேன் ரிப்போர்ட் எப்போதும் தப்பாகவே இருக்கிறது. எத்தனையோ படங்கள் ஓடாமல் இருந்திருக்கிறது. அதனால் ஒரு சிலர் நட்டமடைந்திருக்கலாம். ஆனால் கிராமத்து அத்யாயம் போன்ற படங்கள் ஓடாததால் ஒரு தலைமுறையே அற்புதமான இயக்குனரின் படைப்புகளை இழந்துள்ளது.அதற்குப் பிறகு அவர் ஏதும் இயக்கியதாகத் தெரியவில்லை. அதற்குப்பிறகு இவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறது .


இரண்டு படங்களை மட்டுமே தமிழில் இயக்கி தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனியிடம் பிடித்த சிறப்புப்பட்டங்கள் ஏதும் பெறாத இயக்குனர் ருத்ரையா அவர்கள் மறைவு தமிழ்த்திரைஉலகத்துக்கான பெரும் இழப்பு.இவர் திருச்சியில் படித்தவர்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர், டைட்டிலில் அனந்துவுக்கு நன்றி சொன்னவர்.இவர் மீது வெறி கொண்டவர்கள் தமிழ் சினிமாவிலும் அப்பாலும் https://arunthamizhstudio.wordpress.com/2013/04/03/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/ நிறைய பேர் இருக்கின்றனர்.