Saturday 24 December 2011

மார்கழி அமாவாசைகாவிரி பாலத்திலிருந்து

இன்று மார்கழி அமாவாசை.அம்மா
மண்டபம் காவிரி படித்துறையில் தர்ப்பணம் செய்ய உத்தேசித்தேன்,.கடந்த 7 நாட்களாக ஸ்ரீரங்கம் கோரத மூலையில் திரு.வேளுகுடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் காலை மாலை இரு வேளையும் நடந்து வருகிறது. மாலை ”ஆழ்வார்கள் அனுபவித்த அரங்கன்” நேரம் 7.00 முதல் 8.30.காலை ”திருப்பாவை”.விடியற்காலம் பனியில் வண்டி ஓட்டுவதும்    எதிர்பனியை அனுபவிப்பதும் இன்னும் சலிக்கவில்லை.காவிரியை பாலத்திலிருந்து பார்க்கையில் வளைந்து ஓடும் ஆறும் போர்வை போத்திய பனியும் அழகு.

 பனியை சுமக்கும் காவிரி
அம்மா மண்டபம் படித்துறையில் கால் முழங்கால் அளவு நீர்.நல்ல ஓட்டம்.ஸ்நானத்தை போட்டு விட்டு, அப்பா,தாத்தா,முத்தாத்தா என அவனைவருக்கும் எள்ளும் தண்ணீரும் விட்டு விட்டு நேரே முரளி காபி வந்து ஒரு ஸ்ருதி சுத்தமான காபி குடித்தேன்.
 முரளி காபி  தேர்ந்த செய் நேர்த்தியாளர்.அவரிடம் “சக்கரை தூக்கலாக” “ஸ்டிராங்கா” “அரை சக்கரை” ”கொஞ்சமா” என அதிகப்பிரசங்கியாக  டீக்கடையில் சொல்வது போல் சொல்லக் கூடாது.சொதப்பிவிடும்.அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டால் ஒரு சூப்பர் காபி கிடைக்கும்.(ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில்). காபி குடித்து விட்டு பாதாள கிருஷ்ணன் தாண்டி வலப்புறம் திரும்பி கோரத மூலையை நோக்கிய பயணம். இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக மாமா மாமிகள், வந்தவர்கள் மேடையில் இருக்கும் திவ்ய தம்பதிகளை(திவ்யதம்பதிகள்,திருவாராதணம்,அருளிச்செயல்,இப்படி வைஷ்ணவ வார்த்தைகளுக்கே தனி நிகண்டு வேண்டும்) நோக்கி ஒரு நம்ஸ்காரத்தை போட்டு விட்டு இருக்கையில் \அமர்ந்தனர்.சிறிது நேரத்தில் வேளுகுடி காரில் வந்தார்.பவ்யமாக மேடைநோக்கி வந்தவர் மேடைக்கு கீழே நின்று தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து மார்பை மூடியவாறு இறுக கட்டிக்கொண்டு மேடை ஏறினார்.ஆரம்பித்தார் இன்று,விட்ட 7 மற்றும் தொடரும்  8 ம் பாடல். ராமானுஜரின் ஆறு கட்டளைகளுடன் தொடர்பு படுத்தி அழகான பேச்சு.
video உபன்யாசம் நடக்கும் கோரத மூலை கொட்டகை

 உபன்யாசம் முடித்து சாத்வீகமாய் செல்லும் வேளுகுடி(தூரத்தில்)
                         
                     
                                        
                       

ஸ்ரீ இராமானுஜரின் ஆறு கட்டளைகள்

 1. ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை.(கீசு கீசென்றெங்கும்)
 2. அருளிச்செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை.(கல்ந்து பேசின)
 3. உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை.( நாராயணனன் மூர்த்தி)
 4. த்வயத்தை அர்தாநுஸந்தாநம் பண்ணிப் போருகை.(தயிரரவம்)
 5. என்னுடையவன் என்று அபிமாநிப்பான் யாவனொரு பரமபாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை.(கேசவனைப்பாடவும்)
 6. திருநாராயணபுரத்திலே ஒரு குடில் கட்டிக்கொண்டு இருக்கை.(திறவேலோரெம்பாவாய்)
முடித்து தாயார் சன்னதி , சக்கரத்தாழ்வார் சேவை முடித்து வரும்போது  ஆண்டார்வீதி மதுராகபே யில் உணவு முடித்து வீடு வந்து சேர்ந்தேன்.இன்றைய பொழுது நல்ல பொழுது.
பி.கு

ஸ்ரீவைஷ்ணவத்தில் ரஹஸ்யங்கள் மொத்தம் மூன்று. அஷ்டாக்ஷரம் என்னும்
திருவெட்டெழுத்து, த்வயம் என்னும் மந்திரரத்னம், சரம ச்லோகம் என்னும் பகவத்
கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் ச்லோகம் ஒன்று. 

தத்வங்கள் மொத்தம் மூன்று. சித், அசித், ஈச்வரன். 
சித் -- அறிவுசால், அறிவுருவான, அணுவான உயிரிகள். 
அசித் -- அறிவு சாலாத சடப்பொருள்கள் 
ஈசவரன் -- பேரறிவு சான்ற, பேரறிவே உருவான, சித், அசித் ஆகியவைகளைத் தன்னுள்
உள்ளட்க்கிய, விபுவான, பிரபஞ்ச மகா நித்திய உயிர்த் தத்துவம். 
மூன்று தத்வங்களுக்குப் பெயர் தத்வ த்ரயம். 

ரஹஸ்யங்கள் மூன்றுக்குப் பெயர் ரஹஸ்ய த்ரயம். (நன்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

1 comment:

 1. கார்த்திகேயன்6 March 2012 at 10:49 PM

  திருவரங்கம் பற்றிய தகவல்கள் அருமை,மேலும் தகவல்களுக்கு காத்திருக்கிறேன்.(RSS Feeds சரிவர இயங்குவதில்லை கவனிக்கவும். நன்றி.)

  ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே