Sunday, 23 November, 2014

திருவிசைநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள்

நேற்று 22.11.2014 கார்த்திகை அமாவாசைந்திருவிசநல்லூர் போய் வந்தேன். (புத்தகங்களில் திருவிசைநல்லூர் எனவும் பெயர்ப்பலகைகளில் திருவிசநல்லூர் எனவும் இருக்கிறது எது சரி?) பல வருடங்களுக்கு முன் நான் வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்காரரின் இல்லத்தில் “ ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்” என்னும் நூல் படிக்கக் கிடைத்தது. மஹாபெரியவாளின் வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளின் தொகுப்புமாக இருந்தது அந்தப்புத்தகம்.முதன் முதலில் அந்தபுத்தகத்தில் தான் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் பற்றி நான் படித்தேன்.


அந்தப்புத்தகம் எனக்கு வாழ்வின் பல திருப்பங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதன் பிறகே தெய்வத்தின் குரல் தொகுப்புகளைக் அய்யாவாள் வரலாறு படிக்க இந்த லிங்க்குச் செல்லலாம்.http://www.sriayyaval.org/lsdetail.html  (தமிழில் http://tamilthamarai.com/devotion-news/2230-thiruvisanallur-temble-tamil.html   http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_42.html ) .

        அப்போதிலிருந்து நானும் ஒவ்வொரு கார்த்திகை அமாவாசையின் போதும் திருவிசநல்லூர் போகவேண்டும் என முயற்சித்து ஏதேனும் காரணங்களால் அது நிகழாமல் போய்விடும். இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது.திருவிசநல்லூர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது. (எப்படிப் போவது  http://www.sriayyaval.org/contact.html#reach ) காலை 6.30 க்கு திருச்சியிலிருந்து கிளமபினோம். 8.30 க்குள் திருவிசைநல்லூர் அடைந்துவிட்டோம்.காவிரிக்கரையில் உள்ள ஒரு ஊர் இது. முதல் நாளே கும்பகோணம் சாஸ்திரிகள் கேசி  சில டிப்ஸ்களை செல்பேசியில் வழங்கினார். முதலில் மடத்துக்கு எதிரே உள்ள காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மடத்துக்குச் செல்லும் கியூவில் நிற்கவேண்டும் எனவும். பாத்திரங்கள் பைகளை காரிலேயே வைத்துவிடவும் எனச் சொல்லியிருந்தார்.
திருவிசநல்லூரை அடையும் வரை ஒரு பரபரபரப்பும் தெரியவில்லை. வானம் மூடிக்கொண்டு தூரலாக இருந்தது. ஊரை நெருங்கும் போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகங்களும் குளித்துவிட்டு வருபவர்களும், குளிக்கப் போகிறாவர்களும் என ஒரே பரபரப்பு.

சிறிய சாலை என்பதால் காவிரிக்குப் போகும் வழியில் இறங்கிக்கொண்டோம். மழை வலுத்தது. மடத்துக்குச் செல்ல நீண்ட கியூ. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என எல்லோரும் வரிசையில். உள்ளம் குதூகலித்தது. ஆற்றுக்கு போகும் வழியில் மஞ்சள், குங்குமம், கதோலை கருகமணி எல்லாம் விற்கிறார்கள். எதற்கென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. மாலை தான் கேசி சொன்னார். ஒரு நதியில் குளிப்பதற்கு முன் முதலில் தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு கொஞ்சம் உட்கொண்டு எதையேனும் கொஞ்சம் ஆற்றில் விட்டுவிட்டு பிறகு குளிக்கவேண்டும் என்பது சாஸ்திரமாம்.

காவிரி என்றால் திருச்சியில் பார்த்துவிட்டு அங்கு பார்த்தால் உய்யகொண்டான் வாய்க்கால் போல இருந்தது. அவ்வளவு சிறியது,10 படிக்கட்டுகள் இருக்கும்.

 கரையோரம் சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தனர். மழையோ கொட்டிக்கொண்டிருந்தது.

மழை பொழியும் போது ஆற்றில்  குளிப்பது எவ்வளவு சுகம். கொஞ்ச நேரம் குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கியூவில் வந்து நின்றோம்.கியூ சாலையில் கொஞ்சதூரம் சென்று இருபுறமும் தென்னைமரங்களடர்ந்த தோப்புக்கு இடையே சென்றது. ஒன்றறை மணிநேர கடத்தலுக்குப் பிறகு அய்யாவாள் மடத்தை அடைந்தோம்.


இளைஞர்கள்  4 பேர் கிணற்றின் மீது நின்று கொண்டு வாளியில் தண்ணீர் இறைத்து எல்லோருக்கும் ஊற்றினார்கள்.முழுவதும் நினையும் அளவிற்குக் குளிக்க முடியாது ஆனால் தலை நன்றாக நனையும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . சிலர் 5.00 ரூ வெளியில் வாங்கிய பாட்டில்களில் ஊற்றும்போதே பிடித்துக்கொள்கிறார்கள். குளித்து முடித்தவுடன் கியூ அய்யாவாள் கோவிலுக்குள் செல்கிறது. ஈரத்துடன் தான். இந்தக் கோவிலுக்கு மட்டும் ஈரத்துடன் செல்லலாமாம் ( கேசி தகவல்) .அங்கு அய்யாவாள் பூஜித்த விகிரகங்களும் , அய்யாவாள் விக்ரகமும் இருக்கிறது. வணங்கிக்கொண்டு வெளியே வந்தால் விபூதி குங்குமம் வழங்குகிறார்கள்.வருபவர்கள் கண்டிப்பாக சாப்பிட்டுப் போகவேண்டும் என மைக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு கார் ஷெட்ல் வைதீகர்கள் தர்ப்பணம் பண்ணிவைக்கிறாரகள். ஏக கூட்டம்.முன் யோசனை இல்லாததால் தர்ப்பணத்துக்கு கொண்ட்சு வந்த பொருட்கள் எல்லாம் காரிலேயே இருந்துவிட்டது. சரி என்று காவிரி கரைக்கு போய் செய்து கொள்ளலாம் என வெளியே வந்தோம். மழை விடவில்லை, எதிரே உள்ள காவிரிக்கரையிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் தள்ளி கூட்டம் இல்லாத இடத்தை அடைந்து கரையோரமாக தர்ப்பணம் செய்யலாம் எனத் தோன்றியது.அதன் படி கொஞ்சம் பயணம் செய்து யாருமில்லாத பகுதியில்  தடுப்பணை மாதிரி இருந்த ஒரு கரையோரம் இறங்கித் தர்ப்பணம் செய்தேன்.

 சலசலக்கும் காவிரிக்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது.போன மாதம் திருச்சி காவிரியில்,இந்த மாதம் திருவிசநல்லூர் காவிரியில். தர்ப்பணம் முடித்து கரையேறினேன் எதிரே ஒரு வேப்பமரம். அந்த மரத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டு அதில் ஒரு படம் சொருகப்பட்டிருந்தது. உற்று நோக்கினேன். “ நான் இருக்கிறேன்” என்ற வாசகத்துடன்  புன்னகைத்தப்படி மஹாபெரியவா படம். கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே