Thursday, 4 August, 2011

ஆடிப்பெருக்கு

                               03.08.2011 ஆடிப்பதிணெட்டு.காலையிலேயே அகத்தில் சித்ரானங்கள்,தேங்காய்சாதம்,புளிசாதம்,எள்ளுசாதம்,தயிர்சாதம்,சர்க்கரைப்பொங்கல்)வாடாம் என சகலமும் நெய்வேத்யம். மோட்டார் ரூமையே காவிரியாக பாவித்து மஞ்சள் குங்குமம் இத்யாதி...யுடன் பூஜை முடிந்தது.
                                   மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்றோம்.வழியெல்லாம் விழாக்கோலம்.வகை வகையான புதுமணத்தம்பதிகள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகான சந்திப்பின் காரணமாக நடக்கும் போதும்,வண்டியில் போகும்போதும்,ஒரே ஈஷல், எழசல்கள்.கூட வரும் பெருசுகளுக்கு தர்மசங்கடம்.காவேரி பாலத்தில் இரண்டுபுறமும் கூட்டம் அலை மோதியது.கடலை,காரப்பொரி,பஞ்சுமிட்டாய்,கொழாபுட்டு,நாவல்பழம்,அன்னாசிப்பழம்,ஐஸ்வண்டி,என பல்வேறுபட்ட ஸ்டால்கள்.”திருச்சி காரர்களுக்கு இதுதான் மெரீனா கடற்கரை”                                          சில நிகழ்வுகளைப் பார்த்த போது மனசு கரைந்தது.ஒரு சிறுவன் தள்ளாத அடிமேல் அடியெடுத்து நடந்த பாட்டியை கையைபிடித்து அழைத்துச்சென்றான்.(இதே போல ஒரு காட்சியை கோவிந்த புரத்திலும் கண்டேன்).ஒரு கிராமத்துப் பாட்டி ஐஸ்கிரீம் கடையில் தனது பேரனுக்காக ஐஸ்கிரீம் வாங்க பேரம் பேசிய பிறகு இடுப்பு பையிலிருந்து காசை என்ணிக் கொடுத்த காட்சி அதற்குள் பையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை, வாங்கி வாயில் வைத்தவன் முகத்திலும் அந்த பாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்தில் ஒரேமாதிரியான சந்தோஷம்.                                                      அம்மாமண்டபத்தில் போலீஸ்பந்தோபஸ்து சிறப்பாக இருந்தது.மெடிகல் டீம் ஸ்டால் இருந்தது.வண்டியில் போகும்போது ஒரு வண்டு எனது கழுத்தில் பதம் பார்த்து விட்டது.முதலுதவியாக பெட்டிக்கடையில் சுண்ணாம்பு வாங்கி வத்தாள் ஜயந்தி.ஸ்டால் மருத்துவரிடம் காட்டினேன்,பிசிஎம் கொடுத்து போகும்போது ஸ்ரீரங்கம் ஜி.ஹெச் ல் டி.டி.போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
                                                ஆற்றின் படிதோறும் பெண்கள் கூட்டம்.எந்தப்படியிஉல் கால் வைக்க முடியவல்லை.இலை விரித்து ஒரே படையல் மயம்.ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி மஞ்சள் கயறு கட்டிக் கொண்டிருந்தார்கள்.சிலர் காப்பரிசி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.பெரியவர்களிடம் சிறியவர்கள் பொட்டு இட்டுக் கொடிருந்தார்கள்.கல்யாணத்தின் போது அணிந்த மாலைகளை கேரி பேக்கில் வைத்து மாப்பிள்ளைகள் சிலர் தூக்கி எரிந்து கொண்டிருந்தனர். கரையோரத்தில் குப்பைமயம். இதனை சுவாரசியாமாக சில வெளிநாட்டுப் பெண்மணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன்.

                                        இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் மீடியேட்டர் அய்யர், அய்யங்கார்கள் இல்லை.எல்லம் மக்களே.காவிரித்தாய்க்கு ஒரு கோவில் அங்கே.அதில் தீபம் ஏற்றி வ்ழிபாடுகள் அமர்க்களமாக இருந்தது.கரைபுரண்டு ஓடிய நீர்பிரவாகத்தில் ஒரு சிறு தேர் அதில் சிலர் தொற்றிக்கொண்டு அழகாக பயணித்தார்கள் அனேகமாக இவர்கள் அனைவரும் கரையோரமாகவே எல்லா படித்துறைக்கும் நீந்திச்செல்வார்கள் போலிருக்கிறது.

                                                  வெளியே வரும் போது அம்மா மண்டபத்தில் அழகிய மணவாளன் இல்லை.இது ஒரு குறைதான்.ஜேஷ்டாபிஷேகம் செய்து 48 நாட்க்கள் முடியாததால் அவர் வெளியே வரமாட்டார்.நாம் தான் சென்று பார்க்க வேண்டும்.ஆடி 28 கு அம்மா மண்டபம் வருவார்.அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் (போலிஸ்ஸ்டேஷன் அருகில் ) இருக்கும் காபி கடையில் ஆளுக்கு ஒரு காபி சாப்பிட்டோம் ( ஒரு காபி ரூ9.00, டபரா டம்ளரில்தான் தருவர்கள் (டபராவா? டவராவா? என்ன மொழியோ ). ஸ்ரீரங்கம் வருபவர்கள் கண்டிப்பாக இங்கே ஒருமுறை காபி சாப்பிட வேண்டும்.எவர்சில்வர் கிண்டியிலிருந்து ஃப்பில்டர் டிகாஷன் ஊற்றி டிகிரி பால் சேர்த்து இவர்கள் வழங்கும் காபி அற்புதம்.காலையிலும் மாலையிலும் மட்டுமே கடை. காபி பால் தவிர வேறு ஏதும் கிடையாது.

                                                 மீண்டும் காவேரிப்பாலம் நாங்களும் கொஞ்சநேரம் பாலத்தில் நின்று கூட்டத்தையும் சலசச்லத்துச்செல்லும் ஆற்றையும் பார்த்தோம்.ஒரு அழகான பெண் சாலையில் நடக்கும் போது எல்லோர் கண்களும் அவள் மீது துளைக்கும்,..ஆனால் அவள் கண்டுகொள்ளாமல் தெனாவெட்டாக தி.ஜா வின் மோகமுள் நாயகி யமுனா மாதிரி நடந்து செல்வாள். எனக்கு காவிரியை பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது.இத்தனை கூட்டமும் என்னைப் பார்க்கத்தானே என்று ஒய்யாரமாக ஓடிக்கொண்டிருந்தாள் என் காவேரி.

 தி.ஜா வின் மோகமுள் நாயகி யமுனா

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே