Tuesday 24 December 2013

நார்த்தாமலை பயணம் 1

நார்த்தாமலை இந்தப் பெயரே எனக்கு எப்போதும் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.எனது மூதாதயர்களில் ஒருவரான மகாதேவிஸ்வாமிகள் இந்த ஊருக்கு வந்து தான் தவம் செய்து சன்னியாசம் பெற்றார் என செவி வழிச் செய்தி ஒன்று உண்டு.
             நார்த்தாமலை என்பது ஒரு சிறிய ஊர்.திருச்சி யிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கீரனூர் தாண்டியதும் சிறிது தூரத்திலேயே சாலையின் வலப்புறம் உயர்ந்த குன்றுகள் தெரியத்துவங்கும்.அவைகள் நார்த்தாமலைக் குன்றுகள் தான்.துடையூர் என்ற கைக்காட்டி சாலை மேல் இடதுபுறம் இருக்கும் அதற்கு எதிரே சாலைக்கு வலப்புறம் ஒரு ஆர்ச் இருக்கும் அதனுள் சென்றால் நார்த்தாமலை.ஆனால் சாலையின் மீது நார்த்தாமலை என்பதான எந்த அறிவிப்புப் பலகையும் இல்லாதது ஆச்சரியம்.வலப்புறமாகத்திரும்பி ஆர்ச் உள் நுழைந்தால் தார்ச்சாலையின் இருபுறமும் விழுதுகள் தவழும் ஆலமரங்களுக்கு இடையே குண்டும் குழியுமான தார்ச்சாலைப்பயணம்.
இந்த ஊரில் ஒன்பது குன்றுகள் இருக்கின்றன.

மேல மலை,
கோட்டை மலை,
கடம்பர் மலை, பறையன் மலை,
 உவச்சன் மலை,
ஆளுருட்டி மலை,
பொம்மை மலை,
மண் மலை,
பொன்மலை

இதுபற்றிய விவரமான வரலாற்றுப் பதிவுகளுக்கு இங்கே செல்லவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

முன்பு ஒருமுறை புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் நார்த்தாமலை செல்ல முற்பட்டேன்.அந்திப்பொழுது ஆனதால் மலைக்கு அருகில் செல்லத்தயங்கி திரும்பிவிட்டேன்.எல்லா செயல்களுக்கும் ஏதேனும் ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போல.எனக்குக் கூட ஒரு சந்தேகம் இருந்தது நம் மூதாதயர் போல ”நார்த்தாமலை சென்றால் எனக்கும் ஒருவேளை ஞானம் பிறந்து துறவரம் எய்திவிடுவேனோ?.” அடை அவியலைக்கூட துறக்க முடியாத எனக்கு ஆசையை துறப்பதெல்லாம் சாத்தியமில்லை.குண்டுமனி அளவுக்குக் கூட குண்டலினி எழும்பாது.பல முறை தியானத்தில் அமர்ந்து கனவு வரும் அளவு தூங்கி விழுந்துள்ளேன்.அதற்கெல்லாம் சிறந்த பயிற்சி வேண்டும்.நமக்காகவே படைக்கப்பட்டது பக்திமார்க்கம் தான்.ஞான மார்க்கத்திற்கு நான் லாயக்கில்லாதவன்.ஆசைகளின் அலைகளில் ஆனந்தக்கூத்தாடுபவன்.

நார்த்தாமலைக்கு போவதற்கு முன் இணையத்தில் இது பற்றிய தொகுப்புகளைப் படிக்க முற்பட்டேன்.ஜெயமோகன்,பத்ரிசேஷாத்ரி,விக்கிபீடியா,வரலாறு.காம்,பொய்ட்ரிஸ்டோன் விஜய், ஆகியவைகளைத்தவிர வேறு உபயோகமுள்ள தகவல்கள் கிடைக்கவில்லை.மற்ற தெல்லாம் காப்பி பேஸ்ட் வகையறா.எஸ்.ராமகிருஷ்ணன் நார்த்தாமலையை பற்றி எழுதியுள்ளாரா? சமீபத்தில் வெளிவ்ந்த இலக்கற்றபயணி வரையில் இல்லை என்றே நினைக்கிறேன்.நாம் பார்த்து வந்த இடத்தைப்பற்றி எஸ்.ரா.எழுதியதை படிக்கும் போது ஏற்படும் ஆதங்கம் அதிகம்.”அட நாம கூட போனோமே இதுமாதிரி பார்க்கத் தோன்றவில்லையே” என்றிருக்கும்.

                                                  நேர்வழியில் செல்லும் சாலை ஓரிடத்தில் வலப்புறம் முட்டி திரும்பும்.அந்த இடத்திற்கு எதிரே ஒரு சிறிய கான்கிரீட் சாலை சாலையை ஒட்டி இருபுறமும் வீடுகள் பாத்திரம் கழுவுதல், குழந்தையை குளிப்பாட்டுதல்,ஆட்டை கட்டிவைத்தல், என்பதான அனைத்தும் இந்தச் சாலையில் தான் மக்கள் செய்கிறார்கள்.பார்த்துச் செல்ல வேண்டும்.நான்கு சக்கர வாகனம் என்றால் ரொம்ப ஜாக்கிரதை வேண்டும்.அதன்வழியே ஊர்ந்து சென்றால் முடிவில் கான்கிரீட் சாலை முடிவடையும் அங்கிருந்து இரண்டு மண் ஒற்றையடிப் பாதைகள் மேற்காகவும்,தெற்காகவும் பிரியும்,

                                மேற்காக பிரியும் வழி யில் நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு பெரிய குளக்கரையில் கொண்டுபோய் சேர்க்கும்.குளத்திற்கு அந்தப்புறம் பெரும்பாறையாய் இருப்பது தான் மேலமலை.இதன் வடபகுதி மீது ஏறி சுமார் 2.5 கி.மீ நடந்து சென்றால் சமணக்குடகு,பழியிலீச்வரம்,  விசயாலய சோழிசுவரம்,ஆகிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் உள்ளன.
                                         இன்னொரு வழியான தெற்குபக்கம் செல்லும் மண்பாதையில் சென்றால் சுமார் 1.00 வரையில் வாகனத்தில் செல்லலாம்.திகிலூட்டும் காட்டுப்பாதை.அதுவும் 1.00 கி.மீ ல் ஒரிடத்தில் முடியும்.அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நடைபயணம் தொடங்க வெண்டும்.அங்கிருந்து 1.00 கி.மீ.இருமலைகளுக்கிடையேயான மலைச்சரிவில் நடந்தால் மேற்சொன்ன பகுதிக்குச் செல்லலாம்.


                   போகும் வழியிலேயே இடதுபுறம் சற்று உயரமான குன்றிற்கு படிக்கட்டுச் செல்லும் .இதுதான் ”ஹஸ்ரத் மஸ்தான் தர்கா” மஸ்தான் என்பவர் ஓர் இஸ்லாமிய இறைத்தூதராக 400 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளார்.இங்குள்ள மூலிகைகளை கொண்டு சில வைத்தியங்களையும் செய்துள்ளார்.இந்த தர்க்காவிற்கு மேல்பகுதியில் உள்ள குகைப்போன்ற பகுதியில் தான் இவர் சித்தி அடந்ததாக கூறுகின்றனர்.இப்போதும் பவுர்ணமி தினத்து இரவில் இங்கு சிறப்பு பிரார்த்தனை/தொழுகை நடைபெறுகிறது.இவர் ஒருமுறை இங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது குறுக்கே வந்த பாம்பு இவருக்கு இடயூறு செய்யக்கூடாது என கல்லாகிவிட்டதாம்.அதன் அடையாளங்களை கீழேபாறையில் காண்பிக்கிறார்கள்.அது ஃபாசில் மாதிரி இருக்கிறது.                                ஒரு பெரிய பாறயின் கீழ் சற்று சிறிய பாறை தாங்கிக் கொண்டுள்ளது அதன் அடியில் குகை உள்ளது.உள்ளே தர்க்காவில் உள்ளது போல பட்டுப்போர்வை போற்றிய மேடு.விளக்கு ஏர்றுகிறார்கள்.ஊதுவர்த்தி ஏற்றுகிறார்கள்.அந்த இடத்தில் சிமெண்ட் தரைபோடப்பட்டு அமரும்போது சிலென்று இருக்கிறது.நாங்கல் சென்றபோது ”அப்துல்ரஹ்மான்” என்பவர் அங்கிருந்தார்.அவர்தான் ”துவா” ஓதினார்.அரபியாக இருந்தாலும் அவர் சொல்லும் தருணம் கண்களைமூடிக்கொண்டு அந்த குகையில் அமர்ந்திருக்கும் போது இனம் புரியாத அமைதி ஏற்படுகிறது.

                 கண்ணை மூடிக்கொண்டபோது பாபா நினைவுக்கு வந்தார்.மகாதேவி ஸ்வாமிகள் இங்கு இந்த தர்காவிற்கு வந்திருப்பாரோ? வந்திருந்தால் இங்குதான் அமர்ந்திருப்பார்.காலங்கள் கடந்து மனம் பிரயாணித்தது.ஆன்மீக நாட்டம் உள்ளதால் தானே ரமணரை அண்ணாமலை அழைத்தது.அதுபோல சித்தர்களும் யோகிகளும் ஏதோ ஒரு சக்தி இருப்பதால் தான் இங்கு வந்திருக்க வேண்டும்.இவ்வளவு தூரம் கடந்து மகாதேவிஸ்வாமிகள் ஏன் இங்கு வரவேண்டும்?இந்த மஸ்தான் ஏன் இங்கேயே வாழ்ந்தார்? நான் ஏன் இங்கு இன்று இந்த இடத்தில் அமர்ந்து இதையெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டும். பழங்கால கோயிலைப் பார்க்க வந்தவன் இப்படி ஒரு தர்காவில் ஏன் அமர்ந்திருக்க வேண்டும்.
                                அரபியிலிருந்து தமிழுக்கு மாறினார் அப்துல்ரஹ்மான்.அற்புத மான வார்த்தைகளால் வாழ்த்தி,பிரார்த்தனை செய்தார்.சுனைத்தண்ணீர் புனிதம் என ஒரு பாட்டிலில் இருந்து கொடுத்தார்.கொஞ்சம் சந்தனம் கொடுத்தார்.மயிலிறகால் முகத்தில் வருடி அரபியில் ஏதோ சொன்னர்.போர்வை போற்றிய மேட்டின் மேல் தலை வைத்து வேண்டிக் கொள்ளச் சொன்னர்.


                                 மஸ்தான் அப்பா அழைக்காமல் இங்கு நீங்கள் வரமுடியாது என்றார்.அப்பா என்றவுடன் அப்பா ஞாபகம்.அப்பாவுடன் இந்த மலையில் ஏறுவது போன்ற பிம்பம் மனதுள் வந்துபோனது.வெளியே வ்ந்ததும் 400 வருஷமாக இருக்கும் ஒரு மரத்தை காட்டினார்.சின்ன மரமாக இருந்தது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு தூளி கட்டுவார்களாம்.பவுர்ணமி அன்று மஸ்தான் சித்தி அடைந்த இடமான குகைக்கு படுத்தவாறே ஊர்ந்து செல்லும் பாதையில் செல்லலாம் எனவும்,.சில சமயம் இன்னும் வெள்ளைப்பாம்பு இங்கு வ்ந்து போவதாகவும் கூறினார்.கேட்கும் போதே திரில்லிங்காக இருந்தது.அப்துல் ரக்ஹ்மானிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.                              சிவன் கோவிலைப்பற்றியும்,ஊர்பெயர்பற்றியும்,கோவிலுக்கு பிபுறமுள்ள சுனையில் சிவலிங்கம் முழுகியுள்ளது எனவும் நீர்வற்றும் போது அதன் நெற்றியில் இருக்கும் விபூதிபட்டை கலைவதில்லை எனவும் பலதகவல்களை சொன்னர்.

ஊர் பெயர் காரணம்

நாரதர் மலைதான் நார்த்தாமலை என மருவியது என சொல்கிறார்கள்.இன்னும் சில வலைத்தலங்களில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது கீழே விழுந்தது தான் இந்த ஒன்பது குன்றுகளும் என்று சொல்கிறார்கள்.”நார்த்தங்காய் மரம் நிறைய இருந்ததால் இந்தபெயர் வந்தது என யாரும் சொல்ல வில்லை.”
சில கோவில்களில்  அனுமன் சிலையில் சஞ்சீவி மலையை கையில் அடுக்கி வைத்த லட்டுமாதிரி சிற்பிகள் செதுக்கி யிருப்பார்கள்.அதில் ஒன்பது லட்டு விழுந்துவிட்டதோ என்னவோ?
வணிகர்கள் இருந்த நகரம் என்பதால் நகரத்தார் மலை எனவும் பெயர் காரணம் கூறுகின்றனர்.
அங்கிருந்து இறங்கி மலைக்கோயிலை நோக்கி நடக்கத் துவங்கினோம்.

இன்னும் தொடருவோம்.


4 comments:

  1. Very good compilation and feeling very proud of you that I dont spend time like this. 😊. Hopefully as years go by I will also spend time in exploration.

    ReplyDelete
  2. Very good compilation.I wish I could also do something like this.

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே