Wednesday, 25 December, 2013

நார்த்தாமலை பயணம் 2

அங்கிருந்து இறங்கி மலைக்கோயிலை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
மஸ்தான் தர்காவிலிருந்து மலைக்கோவில் கொஞ்ச தூரம் தான்.இரு மலைகளுக்கிடையேயான நீர் வழ்ந்தோடிய சுவடுகள் தெரிந்தது.மழைபெய்யும்போது அதி வேகத்துடன் நீர் இந்த வழியாக வழிந்தோடும்.அவ்வளவு சரிவு.ஒரு மழைக்காலத்தில் இங்கு வரவேண்டும்.சோ வென்று மழை பொழியும் போது இந்த மஸ்தான் தர்காவிலிருந்து மழையை அனுபவிக்க வெண்டும் என தோன்றியது.

சிறிது தூரம் சரிவான பெரும் பாறையில் ஏறிச் சென்றவுடன் சமதளத்தை அடைகிறது.அங்கு புதரான பகுதிகளுக்கிடையே ஒற்ரையடிப்பாதை செல்கிறது.அதைபிடித்தபடியே சென்றால் சட்டென கண்முன் அழகாய் தோன்றி நிற்கிறது விஜயாலய சோழீஸ்வரம் கோவில்.மஞ்சள் நிற கற்களால் கட்டப்பட்ட கோவில்.தஞ்சை,கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் உள்ளது போல பழுப்பேறிய மஞ்சள் நிற கற்கள். தஞ்சை கோவிலுக்கு இங்கிருந்து தான் கற்கள் சென்றதாக கூறுகிறார்கள்.இங்கிருந்து 60 கி.மீ. தஞ்சை.குறுக்கே ஆறுகள் இல்லை.மலைகள் இல்லை.கற்களை நிறத்தை வைத்துப் பார்க்கும் போது இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
           கட்டுமானம் நன்கு சிதிலம் அடைந்து யாரோ மீண்டும் அடுக்கி வைத்த மாதிரி இருக்கிறது.கலைத்துப்போட்ட சீடுக்கட்டு மனதில் வந்து போனது.இன்னும் சீர்படுத்தப்படாத கற்கள் தூண்கள் ஆங்காங்கே கிடக்கிறது.கோவிலைச் சுற்றி ஆறு மண்டபங்கள்.அனைத்தும் சிதிலத்தின் மிச்சம்.ஒரு வாழ்வு,வரலாறு,கலைந்து கிடப்பது போல தோன்றியது.


ஒரு கல்வெட்டில் இப்படி குறித்துள்ளார்கள்
{"ஸவஸ்தி ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி அரையன் ௭டுப்பித்த கற்றளி
மழை இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின தென்னவன் தமிழதிரையன் புதுக்கு"
இக்கோவில் சாத்தம்பூதி என்ற இளங்கோவதி 
முத்தரையனால்எழுப்பபட்டது எனவும்,மழையால் அழிந்துபட்டு போக, மல்லன்  
விதும்பன் என்னும் 
தென்னவன் தமிழதிரையன் , இந்த கற்றளியைபுதுப்பித்தான் என்றும் 
குறிப்பிட்டுள்ளது.} நன்றி: http://myhistoryuntold.blogspot.in/2013/10/blog-post_19.html


அப்படி எனில் மழைக்காலங்களில் இங்கு நீர்பெறுக்கெடுத்து ஓடி இக்கோவில் கட்டுமானங்களை அவ்வப்போது கலைத்துவிடும் எனத் தெரிகிறது.
            ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு குப்பை கூளங்கள் இல்லை, பிளாஸ்டிக் ,பாட்டில்,இத்யாதிகள் இல்லை,பெருக்கி வைத்த மாதிரி சுத்தமாக இருக்கிறது வளாகம்.புல்வெளி நன்கு பராமரிக்கப் படுகிறது.
விமானங்கள் அறைகுறையாய் இருக்கிறது.உள்ளே சாமிசிலைகள் ஏதும் இல்லை,பிரதானக் கோலிலிலே மடடும் பெரிய சிவலிங்கம் உள்ளது.யாரும் இதற்கு பூசைகள் செய்வதாய் தெரியவில்லை.இங்கு யாரேனும் கண்ணப்பர் வந்தால் தான் உண்டு.நான் சென்ற சமயம் அங்கு எங்களைத்தவிர வேறு யாறும் இல்லை.தனிமை ஒரு அமானுஷ்யத்தை ஏற்படுத்தியது.
  கோவில் மேற்கு பார்த்து இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே நந்தி சிலை நாலு கால் தூண் மேடையில் அழகாய் இருக்கிறது.எனக்கு எப்போதும் நந்தி சிலைகள் மேல் ஆசை அதிகம்.ஒவ்வொரு நந்தியும் ஒவ்வொருவிதமான அழகுடன் இருக்கிறது.எங்கள் ஊர் விருத்த கிரீஸ்வரர் முன் மண்டப பெரிய நந்தி,மூலவருக்கு எதிரே இருக்கும் சிறியநந்தி,பிரமாண்டமான பிரகதீஸ்வரர் நந்தி, கங்கை கொண்ட சோழபுரம் மஞ்சள் நிற நந்தி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுடன் இருக்கிறது.

மதில் வழியாக கோவிலுக்குள் நுழையும் வழி கிழக்கு பார்த்து உள்ளது.மதில்,வாயில் எல்லாம் உதிரியாய் சிதறி இருக்கிறது.இது ஓரளவிற்கு செப்பனிட்ட நிலை, பல இடங்களில் இக்கால கைங்கர்யங்கள் சிமெண்ட் பூசி மேற்கொள்ளப்படுள்ளது. குறிப்பாக மையமாக உள்ள கோவிலின் விமானம் முழுக்க முழுக்க ரீமேக்.சிமெண்ட் பூசி மொழுகி உள்ளார்கள்.விமானத்தின் மேல் கலசம் போல் ஒரு கல் வைத்திருக்கிறார்கள்.அதுவும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது.

கோவிலுக்கு நேர் எதிரே அடிபாகம் உள்ளடங்கி மேல்பாகம் நீட்டிய ஒரு பெரிய பாறையில் நீள் வாக்கில் செவ்வக அளவில் ஒரு குடைவறை.சமணர்களுடையது என பார்த்த வுடன் சொல்லிவிடலாம்.திருச்சி,திருவெள்ளரை,அரகண்டநல்லூர்,ஆகிய இடங்களில் உள்ளது போன்ற அமைப்பு.இதன் உள்ளே கருவறை காலியாக உள்ளது.வெளி மண்டபத்தில் ஒரே அளவிலான விஷ்ணு சிலைகள் கிழக்கு பார்த்து 10 வடக்கு பார்த்து 1 தெற்கு பார்த்து 1 என 12 சிலைகள் உள்ளது.அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள்.இதனை சமணக் குடகு என்றும் பதினெண்பூமி விண்ணகரம் என்றும் அழைக்கிறார்கள்.இதன் வெளிப்புறம் ஒரு மண்டபம் இருந்ததற்கான பீடம் இருக்கிஆது.அதில் சுற்றி சிறிய அளவில் தொடராக யானை யாளி என சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.வியக்கத்தக்க வகையில் எகிப்திய பாணி சிற்பமான  ஸ்பிங்கஸ் காணப்படுகிறது. காமதேனு வகையில் இருந்தாலும் சிங்கங்களுக்கு இடையே எப்படி பசு? பெண்சிங்கம் என்பதற்கான அடையாளமா?ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டிய விஷயம்.ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வதென்பது எக்காலத்திலும் இருந்திருக்கிறது.7ம் நூற்றாண்டில் சமண குகையாக இருந்தது பின்னர் வைணவக் கோவிலாக மாற்றப் பட்டிருக்கலாம் என விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை யார் கட்டினார்கள் என்பதற்கான கல்வெட்டு ஏதும் இல்லை.
      இதன் அருகே ஒரு சிறிய அளவிலான குடைவறைக் கோவில் அதில் ஒரு சிவலிங்கம் உள்ளது . இந்த குடைவரைக்குத்தான் பழியிலீச்வரம் என பெயர்.கல்வெட்டு-855-896
விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தாம் பழீயிலிஇக்கோவிலை கட்டுவித்தான்.இக்கோவின் முன்பு முகமண்டபம்,நந்தி மண்டபம் ,பலிபீடம் ,ஆகியவற்றைகட்டுவித்தான்.பழியிலி சிறிய நங்கை பராமரிக்க கொடையளித்தாள் என்று கூறுகிறது.
ஒன்று மட்டும் தெரிகிறது .அவரவர் காலங்களில் என்னென்ன இறைக்கொள்கைகளை ஆள்பவர்கள் பின்பற்றினார்களோ அதன் பதிவுகளாக நார்த்தாமலையும், கோவில்களும் இருக்கிறது.சமணன் கட்டினானா  அதை மாற்றி விஷ்ணுவை வை.அடுத்த ஒருவன் விஷ்ணுவுக்கு மட்டுமா நாம் சிவனுக்கு குடைவோம் என போட்டி போட்டு வரலாறுகளை கல்லில் பதிவு செய்திருக்கின்றனர்.இதில் ஆச்சரியம் என்ன வெனில் இந்த காலத்திலேயே இவ்வளவு சிரமப் பட்டு போக வேண்டிய இந்த இடத்தை அந்த காலத்தில் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எப்படி குடைந்தார்கள் என்பது தான்.”வரலாறு முக்கியம் அமைச்சரே”- என வடிவேல் படத்தில் சொல்வது மாதிரி ஒவ்வொரு கலத்திலும் ஒரு இரண்டாம் புலிகேசிகள் இருந்துள்ளனர்.
இந்த இடத்தை தாண்டி கொஞ்சம் பாறை மேல் ஏறினால் ஒரு சிறிய சுனை அதில் அல்லி மலர்கள் இருக்கிறது.

 அங்கிருந்து பாறாஇ மீது சற்று ஏறுவோமேயானால் கோவிலை மேலிருந்து கழுகுப்பார்வையில் பார்க்கும் வய்ப்பு கிடைக்கிறது.அற்புதமான காட்சி.அங்கிருந்து சரிவாக இறங்கினால் ஒரு செங்கல் கட்டிடம் நகரத்தார் கலைப்பாணி.அது ஒரு பிள்ளையார் கோவில்.கோவில் என்பதற்கான எந்த அடையாளமும் ( பிள்ளையார் தவிர) அங்கு இல்லை.


 ஒரு காலத்தில் காவல் காப்பவர்கள் இருக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும்.பின்னர் பிள்ளையாரை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.அல்லது இஸ்லாமியர்களின் இடமாக இருந்திருக்க வேண்டும்.கட்டிடத்தின் மேல் வளைவுகள் இஸ்லாமிய கலை வடிவத்தில் தான் இருக்கிறது.அந்தக் கோவிலின் பின்புறம் ஒரு சுனை.நாரதர் குளம் என்கிறார்கள்.இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளதாகவும் நீர்வற்றும் போது அது வெளியே தெரியும் எனவும் சொல்கிறார்கள்.அப்போது லிங்கத்தின் மீது விபூதி பட்டை பூசுவார்களாம்.அது அடுத்த முறை நீரில் மூழ்கி வெளியில் வரும் போது அப்படியே இருக்குமாம்,

அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கடம்பர் மலை தெரிகிறது.அதன் கீழ்தான் ராஜராஜன் காலத்து சிவன் கோவிலும் கல்வெட்டுக்களும் உள்ளன. ஊருக்குள் நுழையும் போதே அக்கோவில் வலது புறம் மலையடிவாரத்தில் உள்ளது. முதலில் அங்கு செல்வதைவிட தூரத்தில் இருப்பதுவும், ஏற சிரமமாக இருப்பதுவுமான மேல மலைக்கு சென்று விட்டு பிறகு கடம்பர் மலை செல்வது தான் சௌகரியமானது.அடுத்து கடம்பர் மலை .


No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே