Saturday, 5 April, 2014

துறையூர் பெருமாள் மலை

துறையூர் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது சித்தப்பா, கு.ப.ரா,தி.ஜா, வல்லிக் கண்ணன், ஆகியோர்தான். நான் முதன் முதலில் சித்தப்பாவுடன் தான் துறையூர் வழியாக முசிறி வந்து கரூர் சென்றேன்.திருலோகசீத்தாராம் அவர்களின் கிராம ஊழியன் பத்திரிகை துறையூரிலிருந்து தான் வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக கு.ப.ரா இருந்துளார், அவருக்கு பிறகு வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்துள்ளார்.சரி அதற்கின்ன என்கிறீர்களா?துறையூர் பெருமாள் மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி சேவை சாதிக்க அடியேனுக்கு நேற்று வாய்த்தது.துறையூருக்கு அருகில் ( பெரம்பலூர் செல்லும் சாலையில்) இருக்கும் இம்மலையில் பேரழகுடன் கோவில் கொண்டுள்ள பெருமாள்.1554 மலைப் படிக்கட்டுகள்.வாகனங்கள் செல்ல 5 கி.மீ சுற்று வழிப்பாதை . கடந்த 25 வருடங்களுக்கு முன் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த ஒரு கப்பல் வணிகர் தனது சொந்த முயற்சியால் இந்தப் பாதையை அமத்ததாக உடன் வந்த நண்ப சதானந்தன் தெரிவித்தார்.வழி நெடுகிலும் வானரங்கள்.ஆங்காங்கே அவைகளுக்கு பிளாஸ்டிக் டப் பில் உணவு.யார் கொண்டுவைக்கிறார்கள்? கீழே யிருந்து ஓட்டல் காரர்கள், மற்றும் ஓங்காரக்குடில் , போன்ற இடங்களிள் இருந்து தினமும் கொண்டு வந்து வைப்பதாகச் சொன்னார்.இதனால் தான் குரங்குகள் ஊருக்குள் வருவதில்லை எனவும் தெரிவித்தார்.
           மலைமேல் கோவில்.பெருமாள் கிழக்கு நோக்கி இரு நாயகிகளுடனும் சேவை சாதிக்கிறார். தாயாருக்கு ( அலமேலுமங்கா) தனி சன்னதி.தாயார் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.அற்புதமான கட்டமைப்பு.நாயக்கர் கால கட்டடக்கலை மிளிர்கிறது.சிங்கத்தின் முகம் அதன் வாயின் உள்ளே சுழலும் கல் உருண்டை, வெவ்வேறு ஓசை எழுப்பும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்கள் என நாயக்கர் கால டச் தெரிகிறது.
      ஆனால், கோவில் பட்டர் கரிகால் சோழன் கட்டியதாக சொல்கிறார்.கரிகால் சோழன் காலமும் நாயக்கர் காலமும் வெவ்வேறானவை.ஒருவேளை சோழர்கால கற்றளிகளை நாயக்கமன்னர்கள் விரிவு படுத்தியது போல ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம்...எனினும் கரிகால் சோழன்...டூ மச்.
திருப்பதிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்றும் இங்கு பிரார்த்தனை செய்துகொண்டு திருப்பதியில் செலுத்த முடியாது எனவும் பட்டர் கூறினார்.
குறிப்பிட வேண்டிய விஷயம் தாயார் சன்னதிக்கு அருகில் பெருமாள் பாதம் எனும் ஓர் இடம் உள்ளது. அங்கு பெரிய அளவிலான பாத உருவம் உலோகத்தால் வைக்கப்பட்டுள்ளது.அதன் அருகில் ஒரு சிறு அறை போன்ற தொரு தடுப்பு. அங்கு கருப்புசாமி என போர்டு உள்ளது.உள்ளே வெண்கலத்தால் (பித்தளையா?) ஆன மூன்று குதிரைகள், சிறிய ஜான் உயரச் சிலைகள் .ஒன்றில் ஓர் மனிதன் அடுத்தது தனியாக.இவர்தான் கரிகால் சேழன் எனவும் அவன் அருகில் உள்ளது இளைப்பாறும் குதிரை எனவும் பட்டர் சொன்னார் ஒருமுறை கரிகால் சோழன் வேட்டைக்கு வரும்போது இந்த இடத்தில் ஒரு மரத்தடியில் (மரம் செப்பினால் வேயப்பட்டுள்ளது) பெருமாள் பிரச்ச்னமானதாகக் கூறுகிறார்..மேலே உள்ள பெயர்ப்பலகைக்கும் சொல்வதற்கும் தொடர்பு இல்லை.அந்த இடத்தில் சாம்பிராணி புகை போடும் ஒரு சட்டி. வரம் வேண்டுபவர்கள் மூன்று முறை சாம்பிராணியை புகையும் தணல் சட்டியில் போட்டு பிரார்த்தித்துக் கொண்டால் கைமேல் பலனாம்.நமக்குத்தான் நிறைய லிஸ்ட் இருக்கிறதே...நானும் மூன்று முறை சாம்பிராணி போட்டு வேண்டிக் கொண்டேன்.இந்த சாம்பிராணி சாம்பலை விபூதியாக வழங்குகிறார்கள்.
இந்த மலையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.மலையடிவாரத்தில் வயல்களுக்கு இடையே பச்சாயி வீரய்யா கோவில் ஒன்று உள்ளது.பெருமாள் மீது உள்ள அதீத பத்தியால் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரய்யா என்ற விவசாயி நிறைமாத கர்ப்பிணியுடன் மலைமேல் சென்று பெருமாளை நித்தம் வழிபடும் வழக்கம் கொண்டவர்.ஒரு முறை அவ்வாறு செல்லும்போது பச்சாயி நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் (நாமகட்டி) எடுத்துவராமல் வந்ததற்கு கோபமான வீரய்யா அங்கிருந்த மண் உருண்டையை எடுத்து மனைவிமேல் எறிய அவள் அங்கேயே உயிர் துறந்தாளாம்., மனம் வருந்திய வீரய்யா தானும் இறந்து போனாராம்,அவர்கள் சிறு  தெய்வமாக இப்போதும் கோயில் கொண்டுள்ளனர் அடிவாரத்தில்.ஆனால் நான் போன நேரம் அந்தக் கோயில் உள் போக எனக்கு வாய்ப்பு இல்லை.இந்தக் கதை கணவன் மனைவி இடையே கோவம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்துவதாகப் படுகிறது.இது செவிவழிச் செய்தியாக இங்கு உலவுகிறது.பச்சாயி இந்தக் கோவிலில் கையில் குழந்தையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்தமுறை சதா வுடன் இந்தக் கோயிலுக்குப் போய்வரவேண்டும்.

1 comment:

  1. பதிவிற்கு மிகவும் நன்றி சார் , நல்ல நட்பும் ,வழிகாட்டுதலும் கிடைத்த மகிழ்வு . kindly manifest all the things which you are indulging on your way sir.

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே