Friday, 9 February, 2018

தண்டலை

சும்ப, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்ட, முண்டர்களை அழித்தமையால் காளி சாமுண்டிஆனதாக தேவிபாகவதம் கூறுகிறது. காளியின் மற்றொரு அம்சமே சாமுண்டி என கருதப்பட்டாலும் , இயமனின் மனைவியாக சாமுண்டியை ஆகமங்கள் சுட்டுவதாகவும், ஆய்வாளர்கள் இந்த முரண்பாட்டை சுட்டுகிறார்கள்.
“ தாய் தெய்வ வழிபாட்டில் தொடங்கிய பெண் தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகளின் முதற்படி கொற்றவை. சங்ககாலத்தின் பிற்பகுதியில் கொற்றவை துர்க்கையாகி சிவபெருமானின்றும் நீங்கத் தொடங்க , புது வரவான உமை அவ்விடம் பெறுகிறார். பல்லவர் காலத்தில் போற்றப்பட்டு பின் அவரை கோட்டத்தெய்வமாக்கி மண்டபத்துக்கு அனுப்புகிறார்கள்” என “பெண் தெய்வவழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்” எனும் ஆய்வு கட்டுரை மூலம் ஆய்வாளர் மு.நளினி அவர்கள் முடிவுக்கு வருகிறார்.
அதே கட்டுரையில் ”சிலப்பதிகாரக் காலத்தில் அன்னையர் எழுவருள் ஒருவராக அறிமுகமாகும் காளி, தேவார காலத்தில் தனித் தெய்வமாகிறார். அவர் இடத்திற்கு வரும் புதிய நுழைவான சாமுண்டி , காளியின் தன்மைகளைப் பெற்றவராகவே அமைந்து, அன்னையர் எழுவர் தொகுதியில் சிறப்பிடம் பெற்று தனித்தமயும் வாய்ப்பைப் பெறுகிறாள் சாமுண்டி” என குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பிற்காலத்தில் தமிழகத்தின் பலபகுதிகளில் சாமுண்டீஸ்வரிக்கென, தனி கோவில்கள் அமைந்திருப்பதும் பெரும்பாலும் அவை கிராமங்களில் குடிகொண்டுள்ளது எவ்வாறு என யோசிக்க வைக்கிறது. கர்நாடக மாநிலத்தில் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரியின் தொடராக அங்கிருந்து பெயர்ந்தவர்களின் வழிபாடாக இது இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதும் தமிழகத்தில் எழுவருள் ஒருவராகவும், பல இடங்களில் தனித்த கோவிலாகவும் சாமுண்டி இருப்பது இதனால் தான் என நினைக்கத் தோன்றுகிறது.
”திருப்பயற்றூர்” பதிகத்தில் அப்பர் சுவாமிகள் இப்படி பாடுகிறார். எழுத்துப் பூர்வமாக சாமுண்டி எனும் பதிவு தமிழில் முதலில் இங்குதான் கிடைக்கிறது.
பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார்
திருப்பயற் றூர னாரே.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன்,
தண்டலை கள்ளக்குறிச்சியிலிருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ள கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் சாமுண்டி வழிபாடு சப்த கன்னியர்கள் தொடர்ச்சியாக வந்தாலும் , தண்டலை கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி மைசூர் சாமுண்டி மலையில் உள்ள தெய்வத்தின் பிரதியாக இருப்பதாக இவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
கர்நாடகத்திலிருந்து பெயர்ந்த மக்கள் தங்கள் தெய்வமான சாமுண்டியையும் தாங்கள் குடியேறும் இடங்களில் எல்லாம் கொண்டு நிறுவி வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அழகான இயற்கைச் சூழலில் அமைந்த இந்த கோவிலின் உள்ளே இதர கிராம தெய்வங்களும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் குழந்தை பிறந்த உடன் சிறு தொட்டிலை அக்கோவில் மரக்கிளைகளில் கட்டும் வழக்கம் தமிழகத்தின் பலபகுதிகளில் உண்டு. ஆனால் தண்டலை சாமுண்டீஸ்வரி கோவிலிலோ மிகப் பெரிய அளவில், உண்மையில் ஒரு குழந்தையை விட்டு தாலாட்டும் அளவிற்கான தொட்டிலை பிரார்த்தனையை நிறைவேற்றிய சாமுண்டீஸ்வரிக்கு கோவிலில் பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
தற்போது இக்கோவிலை விரிவு படுத்தி கோபுரம் , முன்பண்டபம் என கட்டுவதற்கான பணிகள் அக்கிராமப் பெரியோர்களால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.அருமையான இயற்கைச் சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது.

Image may contain: people standing and outdoor
Image may contain: one or more people, tree and outdoor
Image may contain: outdoor
Image may contain: outdoor
Image may contain: 3 people, outdoor

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே