Friday 9 February, 2018

அரடாப்பட்டு அனவரத தாண்டேஸ்வரர்

”ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.”
என்பது திருமூலரின் திருமந்திரம்.
உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் மகேசன் திருநடனம் மூலம் உயிர் வாழ்கின்றன . இறைவன் திருநடனம் திருக்கைலாயத்தில் மட்டுமே நடைபெறும்.
பூலோக கைலாயம் எனப்படும் அரடாப்பட்டில் சிவபெருமான் இடைவெளியில்லா திருநடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். அருள்மிகு நலமருளும் நாயகி உடனுறை ஸ்ரீ அனவரத தாண்டேஸ்வரர் திருக்கோவில் திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்காலச் சிவன் கோவில்.
அனவரத தாண்டவம் என்பது எண்வகை சிவதாண்டவங்களுள் ஒன்று.
பதினெட்டு பூதகணங்கள் பூஜித்த தலம்.ஜடாமுடி சித்தர் வழிபாடு செய்த தலம்.பசு பூஜை செய்த திருத்தலம். நாகங்கள் இறைவனை பூஜித்த திருத்தலம் எனும் பல பெருமைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இத்திருக்கோவில்.
சோழர்களின் கலைப்பாணியில் கட்டப்பட்ட திருக்கோவில் என்றாலும் யாருடைய ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது என்கிற வரலாறு இல்லை. விசாலமான பரப்பில் உயரிய , அழகிய , கருங்கல் கொண்டு திலமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நிலை கொண்ட சுதைசிற்பங்கள் அற்ற ராஜகோபுரம் ஓங்கி நிற்கிறது. ராஜகோபுரத்தின் உள்புறம் இருபக்கமும் சிவச்சந்திரனும், சிவசூரியனும் , பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது வேறு எந்த சிவன் கோவிலிலும் காணமுடியாதது
நவக்கிரங்களுக்கு தனிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் வில்வமரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இத்தலம் இருந்துள்ளது. கோவில் உட்புற மதிலை ஒட்டி தஞ்சை பெருங்கோவில் போல திண்ணை போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதில் ஓரிடத்தில் சதுரமான உள்ளே இறங்குவது போன்ற அமைப்புடைய பகுதி ஒரு அட்டையை போட்டு மூடப்பட்டுள்ளது. அதில் சுரங்கப்பாதை இருப்பதாக அங்கிருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் நாலாபுறங்களிலும் சுற்றாக நாகநாதர், காலபைரவர், ஸ்ரீ ஞானக்கூத்தப்பெருமான், சிவகாமி, பஞ்சலிங்கங்கள், ஸ்ரீ மகாதேவர் , பெரியநாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். ஈஸ்வரன் சன்னிதிக்கு தென்புறம் மகாகணபதிக்கு சன்னிதியும், வடபுறம் வள்ளி சுரமண்ய தெய்வயானைக்கு தனி சன்னிதியும் சற்று உயரமான தளத்தில் படியேறி போகவேண்டிவாறு இருக்கிறது. விநாயகருக்கு மோஷிகவாகனமும், சுப்ரமணியர்க்கு மயில் வாகனமும் , உயரமான பீடத்தில் எதிரே வீற்றிருக்கிறது.மகாகணபதி சன்னிதியில் உள்ள பதினெட்டுத் தூண்களிலும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அச்சன்னிதி மண்டபத்திற்கு முன்பு தாழ்வாரம் போன்ற பகுதியில் ஸ்தல விருட்சம் வன்னிமரமும் அதனைச் சுற்றி வட்டவடிவிலான மேடையும் அழகுற விளங்குகிறது. வன்னிமரத்தின் அடியில் நாகர் சிற்பங்களும் உள்ளது.
ஈஸ்வரன் சன்னிதிக்கு இருபுறமும் ஊர்த்தவகணபதியும், ஆறுமுகசாமியும் காட்சி அளிக்கின்றனர். மூலவர் அனவரத தாண்டேஸ்வரரும், அம்பிகை நலம்ருளும் நாயகியும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இத்திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று சிறப்புடன் பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாட்டில் இப்பகுதி பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே