Friday 25 November, 2016

ஆத்தங்குடி பெரிய வீடு

ஆத்தங்குடி பெரிய வீடு . இப்படித்தான் அழைக்கிறார்கள் அந்த வீட்டை.சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு அருகே இருக்கிறது இந்த ஊர்.நாங்கள் திருக்கோஷ்ட்டியூர் போய் அங்கிருந்து பட்டமங்கலம், பிளையார்பட்டி, தரிசனம் முடித்து திருமெய்யம் போகவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். கோவில்கள் பெரும்பாலும் 12.00 க்கு நடை சாத்தி மீண்டும் 4.00 க்குத்தான் திறப்பார்கள்.பெரும்பாலும் அந்த நேரம் வேஸ்டாகிவிடும்.ஆனால் பிள்ளையார் பட்டியில் 1.00 வரை நடை திறந்துள்ளது. மதிய உணவிற்குப் பிறகு கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் என்ன செய்யலாம் என விசாரித்தபோது தான் " ஆத்தங்குடி பெரியவீடு" " கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை " இரண்டையும் பார்த்துவிடலாம் என முடிவு செய்தோம். ஆத்தங்குடி செல்லும் வழியெல்லாம் வெறும் பொட்டல்காடு.இந்த பொட்டலுக்குள்ளா அப்படி ஒரு பங்களா கட்டியுள்ளார்கள் என ஆச்சர்யமாக இருந்தது.ஊர் நெருங்கும் முன் வழியில் கலர் டெயில்ஸ் கடைகள் ஆங்காங்கு இரு புறமும் இருந்தது.பெரியவீடு சாலையின் மீதே பிரம்மாண்டமாய் இருந்தது. உள்ளே நுழைந்ததுமே என்னை கொள்ளை கொண்டது பிரம்மாண்டமான திண்ணைதான்.நம் வீட்டில் எல்லாம் அதிலேயே சீமந்தம்,காதுகுத்தல்,என சிறு விசேஷங்களையே முடித்துவிடுவோம், அவ்வளவு பெரிய திண்ணை.சுவர்களில் இத்தாலியண்டெயில்ஸ், நிலைக்கதவிலிருந்து சன்னல் , விதானகட்டை, வரை எல்லாம் பர்மா தேக்கு.அருகால் அழகை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.ஆனால் வாஸ்து படி 6 அடிக்கு சற்று கூடுதலான உயரம் தான் வைத்திருக்கிறார்கள்.1928 ல் கட்ட ஆரம்பித்து 1931 ல் முடித்துள்ளனர்.கட்டிய செட்டியார்,ஆச்சி, படங்கள் திண்ணையின் இரு புறமும் மாட்டியிருக்கிறார்கள். தாண்டி உள்ளே போனால் மிகப்பெரிய ஹால்.தரையிலிருந்து உத்தரம் வரை அழகிய வேலைப்பாடுகள்.அதிலேயே பால்கனி, அதையும் தாண்டிப் போனால் முற்றம் வைத்து நான்கு புற அறைகள்.அந்த கட்டிடத்தில் அறைகள் மட்டுமே 60 இருக்கிறதாம்.அறையை திறந்து காண்பிப்பதில்லை.அதற்கு பக்கவாட்டில் மிகநீண்ட டைனிங்ஹால். வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து அங்கிருந்த பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.கதையாய்ச் சொன்னார். நாங்கள் இருக்கும் போதே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், சுற்றுலா வந்த இளம் யுவதிகள், என வந்த வண்ணம் இருந்தனர். இந்த கிராமத்தில் இவ்வளவு பெரிய மாளிகை ஏன் கட்டவேண்டும்? என்ற கேள்வி உள்ளுக்குள் நிமிண்டிக்கொண்டே யிருந்தது. ஊரில் ஒரு சிவன் கோவிலும் அழகிய குளமும் இருக்கிறது .ஊரில் நான் பார்த்த பலவீடுகள் பிரம்மாண்டமாகத்தான் இருந்தது.அந்தப்பக்கம் போகும் வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே